செவ்வாய், 6 அக்டோபர், 2026

பாசி டூ மூளை.. நியூட்ரினோ டூ பிரபஞ்சம்..

வீட்டிற்கு ஓனிடா டிவி வந்த நேரம்.. ஒரு பாலித்தீன் கவரை எடுத்து ரிமோட்டை அதனுள் போட்டு, அந்த ரிமோட்டிற்காக வாங்கியிருந்த இன்னொரு கவரை அதற்கு மேல் சுவர்போல் பொருத்திக்கொண்டிருந்தார் அப்பா.. அப்பொழுதெல்லாம் ரிமோட்டிற்கு கவர் போட்டு, அந்தக் கவருக்கே இன்னொரு கவர் போடுவது நம்மூர் வழக்கம்.. ரிமோட் மட்டும் அடுத்த தலைமுறைக்கும் புதிதாக இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வை.. 
நான் சிறுவனாக இருந்தபொழுது, இந்தக் கவர் இருந்தால் ரிமோட் எப்படி வேலை செய்யும்.. முன்னாடி மட்டும் கிழித்துவிடலாமே.. என்று கேட்டேன்..
ரிமோட்டிலிருந்து வரும் ஒளிதான் டிவியை வேலை செய்ய வைக்கிறது. பாலித்தீன் அந்த ஒளியை ஊடுருவ விடும்.. அதனால் கிழிக்கத் தேவையில்லை.. என்றார் அப்பா..

அன்று அந்த ரிமோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, இது எப்படி வேலை செய்கிறது என்று ஆவலுடன் பார்த்த தருணம் இன்னும் நினைவிருக்கிறது..
பிற்பாடு அதே ஒளியை வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படும் பல கருவிகளை இயக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தேன்.. 
இப்போது அதையும் தாண்டி, அதே ஒளியை வைத்து மூளைக்குள் ஒரு ரிமோட் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள்..

ரிமோட்டைத் தட்டினால் தொலைக்காட்சிப் பெட்டி வேலை செய்வதுபோல, மூளைக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நரம்பு செல்லை மட்டும் ஒளியை வைத்து இயங்க வைக்க முடியுமாம்.. அல்லது அதன் இயக்கத்தை நிறுத்தவும் முடியுமாம்.. கேட்பதற்கே சற்று அறிவியல் புனைவு போல இருக்கிறதல்லவா..
ஆனால் அதைத்தான் சாத்தியமாக்கியிருக்கிறது ஆப்டோஜெனெட்டிக்ஸ் (Optogenetics).. இனி ஒளிமரபியல் என்ற பெயருடன் இதனை புரிந்துகொள்ளலாம்..

மரபியல் என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளாமல், அதை மனிதத்திற்கு எதிரான வர்ணாசிரம மரபுகளுடன் இணைத்துப் பேசும் போலி மரபு அறிஞர்கள் நிரம்பியிருக்கும் காலத்தில், மரபியலையும் ஒளியையும் இணைத்து ஒளிமரபியல் வரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்..

சரி, ஒளியை செலுத்தினால் மூளையின் நரம்பு செல் எப்படி இயங்கும், அங்கேதான் இதன் அறிவியல் இன்னும் அழகாகிறது.. சில உயிரினங்களில் காணப்படும் சேனல்ரோடாப்சின் (channelrhodopsin) போன்ற ஒளியை உணரும் புரதங்களை உருவாக்குவதற்கான மரபணுவை, அறிவியலாளர்கள் குறிப்பிட்ட நரம்பு செல்களில் செயல்படும்படி செய்கிறார்கள். அதன் பிறகு அந்த நரம்பு செல்லின் மேற்பரப்பில் இந்த ஒளி உணரும் புரதங்கள் உருவாகின்றன.
இப்போது குறிப்பிட்ட நிறம் அல்லது அலைநீளம் கொண்ட ஒளியை அந்தச் செல்களின் மீது செலுத்தினால், அந்தப் புரதங்கள் ion channel அதான் அயனி வழித்தடங்களைத் திறக்கின்றன.. அயனிகள் உள்ளே அல்லது வெளியே நகர்கின்றன.. நரம்பு செல்லின் மின்னழுத்தம் மாறுகிறது. அதன்மூலம் அந்த குறிப்பிட்ட நியூரானை இயங்க வைக்கவோ, வேறு ஒளி உணரும் புரதங்களைப் பயன்படுத்தி நிறுத்தி வைக்கவோ முடியும்..
அதாவது டிவி ரிமோட்டில் சேனல் மாற்றுவதுபோல மூளையில் நினைத்த நியூரானையெல்லாம் மாற்றிவிட முடியாது.. ஆனால் குறிப்பிட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும்..

இதன் அடிப்படையைக் கண்டறிந்த கார்ல் டைசரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகெமன் (Peter Hegemann), ஜியோர்க் நாகல் (Georg Nagel) ஆகிய மூவருக்குத்தான் இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது..

இதில் எனக்கு இன்னும் ஆவலைத் தூண்டும் ஒன்று, இந்தக் கதையின் தொடக்கம் மனித மூளையில் இல்லை என்பதுதான்.. 
தொடங்கிய இடம் என்ன தெரியுமா.. நம் வீட்டு கிணற்றி படர்ந்திருக்குமே, அந்த பாசி..

சில நுண்ணுயிரிகளும் பாசிகளும் ஒளியை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றன. அவற்றில் இருக்கும் சேனல்ரோடாப்சின் என்கிற ஒளியை உணரும் புரதத்தைப் பற்றிய அடிப்படை ஆய்வுகளிலிருந்து தொடங்கிய பயணம்தான், பின்னர் குறிப்பிட்ட நரம்பு செல்களை ஒளியால் இயக்கவும் நிறுத்தவும் முடியும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.. அதுதான் இன்று ஒளிமரபியல் என்கிற மிகப்பெரிய துறையின் அடிப்படையாகியிருக்கிறது..

இதுவரை அலுப்பு தட்டாமல் வாசிக்கும் உங்களுக்கோ, அலுப்பு தட்டி இரண்டு வரிகளுடன் என்னை திட்டி கடந்த சிலருக்கோ தோன்றும், இதனால் என்ன பயன்.. ஒரே கேள்வியாக இருந்தாலும், இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு.. முதலாவது பதிலைத் தேடுவது, இரண்டாவது பதிலை புறக்கணிப்பது.. இரண்டாம் வகை கேள்வியானது அடிப்படை அறிவியல் ஆய்வுகளைப் பார்த்து பலரால் மிக எளிதாக முன்வைக்கப்படுவது.. இந்த கேள்வியின் நீட்சியாகத்தான், அரசாங்கம் அடிப்படை அறிவியலுக்கான உதவியை ஏறத்தாழ நிறுத்திவிட்டது.. பாசி பிடித்த அந்த பாலிசிமேக்கர் மூளைக்குள் அந்த புரதமும் இருந்து, நாம் அதற்கான ஒளியையும் அனுப்பினால்தான் அதற்கொரு விடிவுகாலம் பிறக்கும்..

ஒரு பாசி ஏன் ஒளியை உணர்கிறது, அதற்குள் இருக்கும் இந்தப் புரதம் என்ன செய்கிறது என்று ஆராய்ந்துகொண்டிருந்தவரிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு, இதையெல்லாம் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறீர்கள்.. என்று கேட்டிருந்தால், ஒருநாள் மனித மூளையின் செயல்பாட்டையே ஒளியைக் கொண்டு ஆராய இந்த ஆய்வு பயன்படும் என்று அவரால்கூட சொல்லியிருக்க முடியுமா என்று தெரியவில்லை..
அறிவியலின் அழகும் அதுதான்.

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசும் ஏறத்தாழ அப்படியொரு கதையைத்தான் சொல்கிறது.. பிரான்சிஸ் ஹால்சென் (Francis Halzen) என்பவருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்வெளியின் வெகுதொலைவிலிருந்து வரும் மிக அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிவதற்கான IceCube Neutrino Observatory-ஐ உருவாக்குவதில் அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்பும், astrophysical high-energy neutrino-க்களின் கண்டுபிடிப்பும்தான் காரணம்..

நியூட்ரினோவைப் பற்றிச் சொல்வதென்றால், அதையே ஒரு பெருங்கதையாக சொல்லவேண்டும்.. 
இன்றைய அளவிற்கு பிரேக்கிங் செய்திகளுக்குப் பழக்கப்படாத நமது காதுகள் வாழ்ந்த காலத்திலேயே, தமிழ் செய்திகளில் அடிக்கடி பிரேக்கிங் செய்தியாக கேட்ட ஒரு சொல், நியூட்ரினோ.. 

டிடும்டிடும்டிடும்.. பிரேக்கிங் நியூஸ்... நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக மலையைக் குடைந்து… ஞாபகம் வந்துவிட்டதா..

சரி.. பிரேக்கிங் செய்தியை விடுத்து நியூட்ரினோவிற்கு வருவோம்.. ஒவ்வொரு நொடியும் ஏராளமான நியூட்ரினோக்கள் நமது உடலை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை எதனுடனும் வினைபுரியாமல் அப்படியே கடந்துவிடுகின்றன..  அப்படி யாரிடமும் பேசாமல், உறவாடாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒன்றை எப்படிப் பிடித்து, நீ யார்.. எங்கிருந்து வருகிறாய்.. உன்னுடைய பெயர் என்ன.. குலம் கோத்திரம் என்ன.. என்று விசாரிப்பது..

அதற்காக ஹால்சென் ஒன்றை செய்தார்.. நீ இங்குதானே பேச மறுக்கிறாய்.. யாருமில்லா அண்டார்டிகாவிற்கு அழைத்துச்சென்றால், அந்த தனிமையில் பேசிதானே ஆகவேண்டும் என்று 
தென் துருவ பனிப்பிரதேசத்தை தேர்ந்தெடுத்தார்.. ஒரு நியூட்ரினோ மிக அரிதாகப் பொருளுடன் வினைபுரியும்போது உருவாகும் துகள்கள் பனியில் பயணிக்கும்போது ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஒளி சமிக்ஞையை, தென் துருவத்தின் ஆழமான, தெளிவான பனிக்குள் பொருத்தப்பட்ட உணரிகளைக் கொண்டு கண்டறியும் எண்ணம் அது.. இப்பொழுது புரிகிறதா, எதற்கு மலையைக் குடைந்து ஏழ்கடல் புகுத்தவேண்டும் என்பது.. 
(கதை முடிந்தது.. இனி, பிலாசபி அலர்ட்..)

ஒரு பக்கம், ஒரு சிறிய பாசியில் இருக்கும் ஒளி உணரும் புரதம் மனித மூளையைப் புரிந்துகொள்ள உதவுகிறது..
இன்னொரு பக்கம், பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்துகிடக்கும் தென் துருவத்தின் பனி, பிரபஞ்சத்தின் வெகுதொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது..

தொடர்பில்லாத இந்த இரண்டு கண்டுபிடிப்புகளையும் தொடர்புபடுத்தியது நோபல் பரிசுதான் என்றாலும், இரண்டுக்கும் மிகமுக்கியமாக இருக்கும் இன்னொரு தொடர்பு, மனிதனுக்கு எழும் கேள்விகள்..
ஒரு கேள்வியில் தொடங்கிய பயணங்கள்தான் சில நேரங்களில் மனித அறிவின் புதிய கதவுகளைத் திறந்துவிடுகின்றன.. அதனால்தான் அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக ஒரு பயன்பாடு இருக்கவேண்டும் என்பதில்லை..
சில கேள்விகளைக் கேட்பதற்கான ஒரே காரணம், அதற்கான பதில் இன்னும் நமக்குத் தெரியவில்லை என்பது மட்டுமே..

-சகா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக