எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப், மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் போன்ற ஆய்வுக்கருவிகளை இயக்கும்போது இயர்பட்ஸ் அணிந்துகொண்டு வேலைசெய்யத் தொடங்கினேன். அதுவே பழக்கமாகி, இப்பொழுது சாதாரண வேலைகளைச் செய்யும்பொழுதும், நடந்துசெல்லும்பொழுதும்கூட இயர்பட்ஸ் அணிந்துகொள்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள், ஏதோ பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றுதான் நினைத்துக்கொள்கிறார்கள்..
உண்மையில் பெரும்பாலான நேரங்களில் நான் எதையுமே கேட்பதில்லை. காதுகள் மட்டும் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அவ்வளவுதான்.. வெளியிலிருந்து வரும் சத்தங்கள் என் கவனத்தைச் சிதறடிக்காமல் இருப்பதற்காகவே அப்படி அணிந்துகொள்கிறேன்.. சுற்றியிருப்பவர்களின் பேச்சு, தொலைபேசி ஒலி, கதவு திறக்கும் சத்தம், யாரோ நாற்காலியை நகர்த்துவது என ஒவ்வொரு சத்தமும் என் சிந்தனையை அதன் பாதையிலிருந்து விலக்கிவிடும்..
ஒரு தரவைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அருகில் யாராவது எதாவது பேசினால், என் கண்கள் தரவின் மீதிருக்கும்.. ஆனால் மூளை அவர்கள் உரையாடலைப் பின்தொடரத் தொடங்கிவிடும்.. காட்சியும் ஒலியும் மூளையை அடைகின்றன என்றாலும், எதிர்பாராமல் எழும் ஒலிக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. நாம் பார்க்க விரும்பாத ஒன்றிலிருந்து கண்களைத் திருப்பிக்கொள்ளலாம். ஆனால் காதுகளுக்கு அப்படியொரு இயற்கையான கதவு இல்லை. சுற்றுப்புறத்தில் திடீரென ஒரு சத்தம் எழுந்தால், அது முக்கியமானதா என்பதை அறிய மூளை தன்னிச்சையாக அதன் பக்கம் கவனத்தைத் திருப்புகிறது. பரிணாம வளர்ச்சியில் அது நமக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கலாம். நடந்து செல்கையில் புதருக்குள் ஒரு சலசலப்பு கேட்டால், அது பாம்பா, எலியா என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் மீண்டும் வேலையைப் பார்க்க முடியும்..
ஆனால் இன்றைய அலுவலகத்தில் அந்தப் பாம்பும் எலியும் பெரும்பாலும் அடுத்த மேசையில் ஒலிக்கும் அலைபேசியாகத்தான் இருக்கிறது.. மல்டிடாஸ்கிங் செய்யத் தெரியாத டிஎன்ஏவைக் கொண்டவன் நான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் புரிந்தது, அது என்னுடைய டிஎன்ஏவின் தனிப்பட்ட குறைபாடு அல்ல.. மனித மூளையே உண்மையில் பல சிந்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் அவ்வளவு திறமையானதல்ல. நாம் மல்டிடாஸ்கிங் என்று பெருமையாகச் சொல்வது, பெரும்பாலும் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மூளை வேகமாகத் தாவிக்கொண்டிருப்பதுதான். ஒவ்வொரு முறை தாவும்போதும் சிறிது கவனமும் நேரமும் ஆற்றலும் வீணாகின்றன.
என்னுடைய மூளை இதில் இன்னும் மோசமானது.. ஒரே நேரத்தில் ஒன்று மட்டும்தான். அதனால் இயர்பட்ஸ் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. கண்ணிமை போல இது காதிமை..
ஆனால் இப்போது வரும் இயர்பட்ஸ்களும் சாதாரணமானவை அல்ல.. Noise Cancellation, Transparency Mode, Adaptive Sound என்று விதவிதமான வசதிகள் இருக்கின்றன. சில புதிய கருவிகள் சுற்றுப்புறச் சத்தத்தை உணர்ந்து, எந்த ஒலியைத் தடுக்கவேண்டும், எந்த ஒலியை உள்ளே அனுமதிக்கவேண்டும் என்பதைத் தானாக மாற்றிக்கொள்கின்றன. சிலவற்றில் மெசின் லேர்னிங் சார்ந்த ஒலிச் செயலாக்கமும் பயன்படுத்தப்படுகிறது.. Active Noise Cancellation முறையில், வெளிப்புற ஒலியை மைக்ரோஃபோன் முதலில் பதிவு செய்கிறது. பின்னர் அதற்கு எதிர்கட்டத்தில் இன்னோர் ஒலி அலையை உருவாக்கி, இரைச்சலை குறைக்கிறது.. அதாவது சத்தத்தைத் தடுப்பதற்காக இன்னொரு சத்தத்தை உருவாக்குகிறது.. முள்ளை முள்ளால் எடுப்பது போல.
ஆனால் Transparency அல்லது Ambient Mode முற்றிலும் வேறானது. அது வெளியில் கேட்கும் ஒலியை மைக்ரோஃபோன் மூலம் பிடித்து நம் காதுக்குள் தெளிவாக அனுப்பும். சாலையில் நடக்கும்போது வாகனங்களின் ஒலியையும், யாராவது பேசுவதையும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட வசதி அது. இவையெல்லாம் தெரியாமல், முதலில் இயர்பட்ஸை வாங்கியதும் அப்படியே காதில் மாட்டிக்கொண்டேன். இரைச்சலை குறைக்கும் என்று நினைத்த கருவி, சுற்றியிருந்த சத்தத்தைப் பிடித்து அதிகத் தெளிவுடன் என் காதுக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது..
இரைச்சலிலிருந்து தப்பிக்க இயர்பட்ஸ் வாங்கியவனுக்கு, அந்த இயர்பட்சே இரைச்சலையெல்லாம் சேகரித்து இலவசமாக ஹோம் டெலிவரி செய்துகொண்டிருந்தது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே.. என்று இயர் பட்சை திட்டிக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் பிரச்சினை கருவியில் இல்லை.. அதை இயக்கிய அறிவாளியிடம்தான் இருக்கிறது என்று தெரிந்தது.. Transparency Modeஐ அணைத்துவிட்டு Noise Cancellationக்கு மாற்றிய பிறகுதான் உலகம் கொஞ்சம் அமைதியானது.
செநுவும் (செயற்கை நுண்ணறிவு.. இனி என் திரைப்படங்களில் இவருக்குபதில் செநு தான் நடிப்பார் என்பதை தெரிந்துகொள்க..) ஏறத்தாழ இப்படித்தான். அதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று தெரியாமல், கிடைத்ததை அப்படியே பயன்படுத்தத் தொடங்கினால், நமக்குத் தேவையில்லாத சத்தத்தையே அது பலமடங்கு பெருக்கிக் கொடுத்துவிடும். நாம் ஏற்கெனவே நம்பிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் பதில்களைத் தரலாம்.. தவறான தகவலை அழகான மொழியில் சொல்லலாம்.. நம்முடைய சிந்தனைக்குப் பதிலாக அதையே சிந்திக்கவிட்டு, கிடைத்ததை நமது கருத்தாக வெளியிடவும் வைத்துவிடலாம்.. அப்போது அது அறிவை வளர்க்கும் கருவியாக இருக்காது.. நம்முடைய அறியாமையைப் பெரிதாக்கிக் கேட்கவைக்கும் ஒரு Transparency Mode ஆகிவிடும்..
எங்கு பயன்படுத்துவது, எதை உள்ளே அனுமதிப்பது, எதைச் சரிபார்ப்பது, எப்போது அதை விடுத்து நாமே சிந்திப்பது என்பவற்றைக் கற்றுக்கொண்டால், அதே கருவி நம் திறனைப் பலமடங்கு உயர்த்தும். இயர்பட்ஸ் நமக்குப் பதிலாகக் கேட்கக்கூடாது.. தேவையானதைத் தெளிவாகக் கேட்க உதவவேண்டும். அதுபோலச் செநுவும் நமக்குப் பதிலாகச் சிந்திக்கக்கூடாது.. நமது சிந்தனையை மேலும் கூர்மையாக்க உதவவேண்டும்..
(பொறுப்பு ஏற்பு: மக்களே, ஆய்வகத்தில் எச்சரிக்கை ஒலிகள், வாயுக் கசிவு எச்சரிக்கைகள், போன்றவற்றைக் கேட்க வேண்டிய இடங்களில் இயர்பட்ஸ் அணிவது பாதுகாப்பானதல்ல.. அந்தந்த ஆய்வக விதிகள் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அதேபோலச் சாலையைக் கடக்கும்போதும் Noise Cancellationஐ அணைத்துவிட்டு சுற்றுப்புறத்தைக் கேட்பதே நல்லது..)
- சகா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக