வியாழன், 10 ஜூன், 2021

பாட்டி நிலவிலிருந்து அனுப்பிய வடை பார்சல்..

சித்திரை வெயிலின் புழுக்கம் தாங்காமல் மொட்டைமாடியில் வந்து மல்லாந்து படுத்துக்கொண்டே நிலவை உற்றுநோக்கிக்கொண்டு இருந்தேன். அந்தநேரம், வடை சுடும் பாட்டி என்னை நிலவிலிருந்து எட்டிப்பார்த்து, என்னடா பேரா பசிக்குதா உனக்கு, இந்தா வடை சாப்பிடு என்று இரண்டு மெது வடைகளை தூக்கி என்மீது வீசியமாதிரியே ஒரு உணர்வு!
இப்ப அந்த வடை பூமில இருக்க எனக்கு வந்து சேருமா, இல்லையாங்றத ஈர்ப்புவிசைதான் முடிவுசெய்யனும். ஈர்ப்புவிசைன்னு படிக்கிறோம், ஆனா அது உண்மையில் விசைதானா!?
பதிலறிய நவீன இயற்பியல் (modern physics) உதவியைதான் நாடவேண்டும்!
அப்டி என்ன அது சொல்லுது!? ஒன்றுமில்லைங்க, விண்வெளியில் இறைந்துகிடக்கும் பலமில்லியன் கோடி துகள்களுள் நம் கதிரவன் குடும்பமும் ஒன்று. புரிந்துகொள்ள எளிமையாக சொல்ல வேண்டுமானால், விண்ணிலுள்ள எல்லா கோள்களும், அண்டங்களும், பால்வழித்திரள்களும், நட்சத்திரங்களும் ஒரு மெல்லிய விண்வெளி துணியின் (space fabric) மீதுதான் அமையப்பெற்றிருக்கின்றன. தனக்கே உரித்தான எடைகளை கொண்டுள்ள அனைத்து துகள்களும், ஒருவிதமான குழிகளை உருவாக்குகின்றன. அதாவது ஒரு நீண்ட துணியை எடுத்து நான்கு பக்கங்களையும் இழுத்து கட்டிவிட்டு அதனுள் ஒரு சிறு பொருளை இட்டால் உருவாகுமல்லவா, அது போன்றதொரு குழியை உருவாக்குகிறது.
பெருவெடிப்பிலிருந்து ஒரேவேளையில் வெளியான அனைத்து துகள்களும் அந்த மெல்லிய விண்வெளி துணியின் மீதுதான் விழுகின்றன. விழுந்தவற்றுள் அதிக நிறைகொண்ட கதிரவன் மிகப்பெரிய குழியை உருவாக்குகிறது, பின் அதே வேளையில் அக்குழிக்குள் இயக்கநிலையில் விழுந்த மற்ற துகள்களெல்லாம் கதிரவ மையநோக்கு விசையுடனே அக்கதிரவனை சுற்றிவருவதே இயல்பு! இதுவே ஈர்ப்புவிசை.
அதேவேளை, அப்பெரிய குழிக்குள் விழுந்த தனிப்பட்ட அனைத்து கோள்களும் தன் நிறைசார்ந்து சிறு சிறு குழிகளை அந்த துணியின் மீது உருவாக்கும். அப்படி உருவாகிய குழிகளுக்குள் ஏதேனும் மிகச்சிறிய துகள் விழின் அது துணைக்கோளாய், அக்குழி உருவாக்கிய கோளை சுற்றுவரும்.
இப்படிதான் பூமியின் துணைக்கோளாய் நிலவு சுற்றிவருகிறது. நிலவும் சிறு நிறை கொண்ட துகளாய் இருப்பதால், விண்வெளி துணியின்மீது மிகச்சிறு குழியை ஏற்படுத்தும். இப்பொழுது, அந்த விண்வெளி துணியின் மீது, பால்வழித்திரளால் ஒரு பெருங்குழி, கதிரவனால் ஒரு குழி, பூமியால் சிறுகுழி, கதிரவனால் மிகச்சிறு குழியென, பலதரப்பட்ட குழிகள் உருவாகின்றன. அந்த குழிகளின் ஆழம் அந்தந்த கோள்களின் நிறையை பொறுத்ததாக இருக்கும், அதுவே ஈர்ப்புவிசையை தீர்மானிக்கும்.
இப்ப கதைக்கு வருவோம். அந்த பாட்டி எனக்காக வீசிய மெதுவடை மிகச்சிறு குழியால் ஏற்பட்ட ஈர்ப்புவிசையை தாண்ட முடியாமல் அங்கேயே நின்றுவிடும். எனக்கு வந்துசேர வாய்ப்பே இல்ல! ஆனால் அந்த மிகச்சிறு குழியால் உருவான ஈர்ப்புவிசையை எதிர்க்கவல்ல ஆற்றலை கொண்டு மெதுவடையை ஏவினால், எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

-சகா..
14/05/2019

பெய்யெனப் பெய்யும் மழை!



பருவமழை, புயல் மழை தாண்டி தஞ்சையில் மாலை மழை (வெப்பச் சலன மழை) மிகவும் சிறப்பு வாய்ந்தது!

எங்கிருந்தோ ஆவியாகிய நீரும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை இம்மழையை உருவாக்க!
நீரின் அறிவியல் இருக்கிறதே, அது இயற்பியலென்ற சாளரத்தைக் கொண்டு புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று!
இயற்கை அறிதலே - அறிவியல் - இயற்பியல்
இயற்பியல் மட்டுமே அறிவியல், வேதியியல் உட்பட மற்றவை அனைத்தும் அதன் கிளைகளே!
Physics is one and only mother of all other sciences!
1. நீர் - water - திரவ நிலை - liquid
2. நீராவி - water vapour - வாயு நிலை - gas
3. பனி - ice - திண்மநிலை - solid - crystal
இப்படியான மூன்றுநிலைகளில், அதற்கு வடிவம் கொடுக்கும் ஒரேநிலை பனி-திண்மநிலை-solid. எந்தவொரு பொருளின் அடர்த்தியை (density) அளவிட்டாலும், வாயு<திரவம்<திண்மம் என்றே அமையப்பெற்றிருக்கும். ஆனால் நீர் மட்டும் அதில் வேறுபட்ட ஒரு நிலையை பெற்றிருக்கிறது, வாயு<திண்மம்<திரவம். அஃதாவது திண்மநிலையில் உள்ள நீர் (பனிக்கட்டி) திரவத்தை விட அடர்த்தி குறைவானதாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி நீரின் மீது மிதப்பது.
எளிதாய் தெரிந்துகொள்ள, ஒரு கண்ணாடியிலான குடுவையை எடுத்து, அதில் முழுதும் நீரை நிரப்பி, அதனை குளிர்வூட்டியில் (freezer) வைக்க, அடுத்த நாள் அந்த கண்ணாடி குவளை உடைந்து கிடப்பதை காண்பீர்கள்!
இதற்கான காரணம் அடர்த்தி குறைவதுதான் (decreasing density). அதாவது அதிக அடர்த்தி திரவ நிலையிலிருந்து குறைந்த அடர்த்தி திண்ம நிலையை அந்நீர் அடைகிறது.
Density = mass/volume
அடர்த்தி = நிறை/கொள்ளளவு
எனில்,
கொள்ளளவு = நிறை/அடர்த்தி,
அடர்த்தி குறைந்தால் கொள்ளவு அதிகரிக்கிறது. எனவே கண்ணாடி குடுவைக்குள் போதிய இடமின்றி அதனை உடைத்துவிடுகிறது. பாருங்கள், அடர்த்தி குறைந்தால் கண்ணாடியை உடைக்கும் அளவுக்கு நீருக்கு ஆற்றல் அதிகரிக்கிறது.
இங்கேதான் மிக முக்கிய கேள்வி!
அடர்த்தி குறைவதால் ஆற்றல் அதிகமாகிறதா இல்லை ஆற்றல் அதிகமாவதால் அடர்த்தி குறைகிறதா?
இதை விளக்க electrostatic model அல்லது quantum theory தேவைப்படலாம்!
நிலைமின்னூட்ட மாதிரியை (Electrostatic model) விட, குவையக்கொள்கை (quantum theory) மிகவும் சரியான புரிதலை கொடுக்கவல்லது!
குவையக்கொள்கையின் உதவிகொண்டு ஆராய, அறிவியலாளர்கள் ஒரு 1.6 நானோமீட்டர் (=1.6×10^-9 m) குறுக்களவே கொண்ட கரிநுண் குழலை (CNT - carbon nanotube) எடுத்து அதனுள் திரவ நிலை நீர் மூலக்கூறுகளை செலுத்தி, நியூட்ரான் சிதறடித்தல் (neutron scattering) ஆய்விற்கு உட்படுத்தினர். ஆய்வின் பின், வெப்பநிலை குறைகையில் இயக்காற்றல் (kinetic energy) 50% அதிகரிப்பதை கண்டறிந்தனர், இவ்வாற்றலால் உந்தப்பட்ட புரோட்டான்கள் தனக்கருகில் உள்ள அடுத்த நீர் மூலக்கூறின் ஆக்ஸிஜனுடன் பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதையும் அறிந்துகொண்டனர்.
இவ்வளவு அக்கபோருக்கும் காரணமான இப்பிணைப்பின் பெயர்தான் ஹைட்ரஜன் பிணைப்பு! It is not a chemical bonding, it is kind of a physical interaction! (All other physical interactions: Van der waal's force, electrostatic interaction, etc)
எனில், வெப்பநிலை குறைவதால் - மூலக்கூறுகளில் உள்ள அணுக்களுக்கிடையே இயக்காற்றல் அதிகரிக்க - ஹைட்ரஜன் பிணைப்பு சாத்தியப்படுகிறது - இப்பிணைப்பு திரவ நிலையை திண்ம நிலைக்கு மாற்றுகிறது - this is called crystallization process - மேலும் இப்பிணைப்பு இரு மூலக்கூறுகளுக்கிடையே சற்று இடைவெளியை உருவாக்கிவிடுகிறது - கொள்ளளவு அதிகரிக்கிறது - குடுவை உடைகிறது - பின்னென்ன, அப்பா அடிக்கவரும்முன் ஓடி ஒளியவேண்டியதுதான்!
நீருக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு
அடர்த்தி குறைக்குமாயின்
மனிதர்களிக்குள் அன்புப் பிணைப்பு
அடர்த்தியை - மன இறுக்கத்தை
குறைக்கவே செய்யும்!
எனவே அன்பு செலுத்துவோம்!
மனிதத்தை போற்றுவோம்!

-சகா..
16-09-2019

தடுப்பூசி அறிவியலும், போர்ச்சூழலும்..



என்ன ஒற்றரே பல நாட்களாக தங்களை காணவில்லையே.. என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்..

என்னத்த சொல்ல நெடுஞ்செழிய மாமன்னனே, உங்கள் மீது எதிரி நாடு படையெடுத்து வரப்போகிறான்..
அப்படியா..
ஆமாம் மாமன்னா.. ஆனால் அவர்கள் இங்கு வந்து சேர இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அரசனுக்கு கையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.. எதிரி நாட்டுப்படை நினைத்தபடி நடந்துவிட்டால், நம் மக்கள் அடியோடு அழிக்கப்படுவார்களே என்ற அய்யம் அரசனுக்கு.
நாட்டின் மக்கள் மீது அன்பு கொண்ட அரசனாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நினைக்கிறார் அரசன்..
ஆனால் தன் படைகளை பார்வையிட சென்றபின்தான் அறிந்தார், இங்கு முன்களத்தில் களமாட தகுதியான குதிரைகள், யானைகள், ஆயுதங்கள், போர் வீரர்கள் யாரும் போதுமானதாக இல்லை..
பலரிடம் கலந்தாய்ந்து சில முடிவுகளை எடுக்கிறார் அரசன்.. அது மிக முக்கியமான திட்டங்கள்..
திட்டம் 1: நம்நாடு நோக்கி வரும் எதிரி நாட்டு படைகள் எங்கேனும் ஓய்வெடுப்பார்கள், அவர்களில் சிலரை நம் குதிரைப்படையை அனுப்பி கடத்திவருவது.. கடத்திவரப்பட்ட சில வீரர்களை எதிர்த்து நம் வீர்ர்களை போர்புரிய செய்வது.. இதன் மூலம் நம் வீரர்கள் எதிரிகளின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பெரும்படைவரும்பொழுது எளிதில் தாக்க ஏதுவாக இருக்கும்..
திட்டம் 2: எதிரி நாட்டு படைகள் போல ஒரு படையை செட்டப் செய்து அவர்களின் போர் தந்திரங்களையும் கொண்டு நம் வீரர்களோடு போர் புரிய வைப்பது.. இதனால் நம் வீரர்களுக்கு, எப்படி அந்த எதிரி நாட்டு வீரர்கள் போர் புரிவார்கள் என்று தெரிந்துவிடும்.. எதிரி நாட்டு படை வரும்பொழுது துவம்சம் செய்துவிடுவார்கள்..
திட்டம் 3: எதிரி நாட்டு படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை, நாட்டின் திருடர்களை வைத்து கவர்ந்துவரசொல்வது.. கவர்ந்துவந்த ஆயுதங்களைக்கொண்டு நம் வீரர்களைவைத்தே நம் ஆயுதங்களுடன் இருக்கும் நம் வீரர்களை போராடவைத்து பயிற்சி கொடுப்பது.. இதனால் அயுதங்களின் பலமறிந்து எதிர்த்து நிற்க நம் வீரர்களுக்கு பயிற்சி கிடைக்கும்..
திட்டம் 4: எதிரி நாட்டு வீரர்களுக்கு ஆயுதம் செய்யும் கொல்லரை கடத்திவருவது.. அவரை வைத்து நம் உலோகங்களைக்கொண்டு கேடயங்களையும் ஆயுதங்களையும் செய்து வாங்குவது.. இதன்மூலம் நம் வீரர்கள் எதிர் நாட்டு வீரர்களின் ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்கவல்ல ஆயுதங்களை பெற்றிருப்பார்கள்..
மொத்தத்தில் ஏதேனும் ஒரு திட்டத்தை நிகழ செய்து, நம் வீரர்களை உருவாக்கி, அவர்களை ஊர் எல்லையில் பல பெரிய பெரிய குதிரை சிலைகளை நிறுவி அதனுள் ஒளித்துவைப்பது..
இதுதான் திட்டம்..
அருகிலிருந்த அமைச்சர், என்ன கதை அளக்கிறீர்கள் தமிழ்நாட்டின் தலைமகனே.. ஏதும் கனவு கினவு கண்டீரோ.. நாங்கள் இந்த தொற்றை எதிர்கொள்ள உங்களிடம் ஐடியா கேட்டால் இப்படி ஏதோ உளறுகிறீர்கள்..
ஏது நான் உளறுகிறேனா.. யோவ் இவ்ளோநேரம் நான் என்ன சொன்னன்னு நெனச்ச.. தடுப்பூசிய பத்திதான் பேசிகிட்டு இருந்தேன்..
என்ன சொல்றீங்க..
ஆமா.. முதல் திட்டம் எதிரிகளில் சிலரை கடத்திவந்து நம்மவர்களுடன் போரிட வைத்து நம்மவர்களை திடமாக்குவது - Covaxin (கோவேக்சின்) மற்றும் sinovac (சினோவேக்) - ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட கொரனா மாதிரி வைரஸ்களை, மலடாக்கி உட்செலுத்துதல்.. இதனால் நம் உடல் கோவிடிற்கி (COVID) எதிராக போராடும் ஆற்றலை பெறும்..
இரண்டாவது திட்டம் நம் வீரர்களையே அவர்களைப்போல் செட்டப் செய்வது - கோவிஷீல்ட் (Covishild) மற்றும் ஸ்புட்னிக் (Sputnik).. இதில் வைரசின் உட்பொருட்களை வேறு ஒரு பொது வைரசின் உடலுள் வைத்து, நம் உடலில் செலுத்துவது.. இதனால் நம் எதிர்ப்பாற்றல் தூண்டப்படும்..
மூன்றாவது திட்டம், எதிரி நாட்டு வீரர்களின் ஆயுதத்தை அறிதல் மூலம் அவர்களுக்கு எதிரான பலத்தை உருவாக்குதல்.. அதாவது வைரசின் முதன்மை ஆயுதமான ஸ்பைக் புரதத்தை இரத்தத்தில் செலுத்துவது.. வைரசின் மீது இருக்கும் இந்த ஸ்பைக் புரதம்தான் மனித செல்லிற்குள் வைரசை எடுத்துச்செல்லும் சாவி.. அதனை முன்பே தனியாக இரத்தத்தில் கலக்கவிடுவதால் அதனை குறிப்பாக தாக்கும் ஏவுகணைகளை நம் உடல் பெற்றுவிடும்.. அப்புறம் என்ன, வைரஸ் வரும்பொழுது தடபுடலாக விருந்து வைத்து நரகத்திற்கு அனுப்பிவிடும்.. அந்த வேலையை செய்வதற்கு நோவவேக்ஸ் (Novavax) அல்லது கொவவேக்ஸ் (Covavax) இருக்கிறது.
நான்காவது திட்டம், சற்று மாறுபட்டது.. எதிரிக்கு ஆயுதம் செய்துகொடுக்கும் கொல்லரை கொணர்ந்து ஆயுத தயாரிப்பு பயிற்சி பெறுதல்.. Pfizer, Moderna போன்ற தடுப்பூசிகள்.. இது m-RNAவை (messanger RNA) உட்செலுத்தும் முறையாகும்.. அது உடலினுள் சென்று ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யும்.. இதனால் நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை எளிதில் நம் உடல் பெற்றுவிடும்.. பின்ன என்ன, வைரஸ் உள்ளே வந்தா ஊஊஊ தான்..
ஆகா அருமை அருமை.. ஆனால் அந்த பெரிய குதிரை சிலைகளுள் பயிற்சிபெற்ற வீரர்களை அனைவரையும் அடைத்துவைப்பதாக கூறினீர்களே.. அது என்ன..
அது ஒன்றுமில்லை.. ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan horse).. அதாவது எதிரி நாட்டுப்படை நம் நாட்டினுள் நுழைந்தபின், அவர்களுக்கான பதிலடி கிடைக்குமென தெரிந்திருக்காது.. அந்த நேரத்தில் அந்த குதிரை சிலைகளை உடைத்து நம் பயிற்சி பெற்ற வீரர்கள் வெளிவந்து திடீரென போர் புரிவார்கள்.. அந்த திடீர் தாக்குதலுக்கு எதிரிகள் நிலைகுலைந்து போவார்கள்..
ச்சோ ஸ்வீட்.. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் குறிப்பிட்ட தடுப்பூசிகளில் எது சிறந்தது..?
எது நமக்கு கிடைக்கிறதோ, அதுவே சிறந்தது.. அதனால் மக்கள் எதற்காகவும் காத்திருக்காமல் கிடைக்கும் தடுப்பூசியை பெறுவது முக்கியம்..
-சகா..
06/06/2021

Electrochemistry of COVID19..!



நீண்ட நாட்களுக்கு பிறகு கவுனி அரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது... தொற்றிலிருந்து மீண்டு கொஞ்ச நாட்கள்தான் ஆகிறது என்பதால், இரண்டு ஸ்பூன் வைத்திருந்தார் தோழி.. ஒன்று மகனுக்கு மற்றொன்று எனக்கு... ஒரு ஸ்பூன் இடது ஓரம் கிடத்தப்பட்டது, மற்றொன்று வலது ஓரத்திற்கு கடத்தப்பட்டு செவ்வனே சொருகப்பட்டது..

நல்லா கேட்டுக்க மகனே, என்னுடைய ஸ்பூன் இடது ஓரம், உன்னோட ஸ்பூன் வலது ஓரம்..
'எதுக்குப்பா ரெண்டு ஸ்பூனு.. எப்பவுமே ஒன்னுதான வச்சி சாப்பிடுவோம்' என்ற மகனின் கேள்விக்கு, உண்மையை சொன்னால் புரிந்துகொள்வான் என்பதற்காக, 'எனக்கு இப்பதான கொரானா வந்துட்டு போச்சு அதான்டா..' என்று கூறிவிட்டேன்.. புரிந்துகொண்டுவிட்டவனாய் பேச்சை கடந்தான்.. நானும் அவன் புரிதலை மெச்சி தொடர்ந்தேன்..
நிர்வாக வசதிக்காக வலது கையால் வலது ஸ்பூனையும், இடது கையால் இடது ஸ்பூனையும் கையாண்டேன்.. திடீரென எனக்கு மின்வேதியியல் (electrochemistry) ஞாபகம் வந்துவிட்டது.. மகனின் வலது ஓர ஸ்பூன் நெகட்டிவ் எலக்ட்ரோடாகவும், என்னுடைய இடது ஓர ஸ்பூன் பாசிட்டிவ் (நமக்கு ஒரு மாசத்துக்கு முந்தி வந்த பாசிட்டிவ் இன்னமும் பாசிட்டிவ் திங்கிங்காவே இருக்கு) எலக்ட்ரோடாகவும் தெரிந்தது.. அப்படியானால் பாசிட்டிவ் எலக்ட்ரோடிலிருந்து கொரானா மகனின் நெகட்டிவ் எலக்ட்ரோடு நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது.. அதுவும் எலக்ரோலைட் இல்லாமலா நடக்கும்.. அதான் கவுனி பொங்கல் இருக்கிறதே.. அதலிள்ள குளுக்கோஸ் (கார்போஹைட்ரேட்) கொரானாவை கடத்தி என் எலக்ட்ரோடிலிருந்து மகனின் எலக்ட்ரோடிற்கு கொண்டுசெல்ல வாய்ப்பிருப்பதாக நினைத்தேன்..
அப்பொழுதுதான் ஒரு செய்தி புறடியில் தட்டியது.. மூன்று நாட்கள் முன்புதான், வெறும் குளுக்கோஸ் கரைசலை ரெமிடெசிவிர் மருந்தென ஏமாற்றி ஒரு குஜராத்தி, உபி காரரிடம் விற்றுவிட்டதாகவும், அதனை போலியென்று தெரியாமல் பயன்படுத்திய பலருக்கு கொரானா சரியாகிவிட்டதாகவும் (என்ன கொடும சரவணன் சார் இது.. கொரானாவே பர்வால்ல) படித்திருந்தேன்.. என்னதான் ரெமிடெசிவிரே வேலை செய்யாது என இப்பொழுது மருத்துவர்கள் சொன்னாலும், 'சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைசாமி, தலைகீழாகத்தான் குதிப்பேன்' மாதிரி, அந்த அறிவியல் இங்கே வேலை செய்தே ஆகவேண்டும், இல்லையா..
கவுனி அரிசியிலுள்ள குளுக்கோஸ், கொரானா தன் தலையில் ஸ்டைலாக வைத்திருக்கும் ஸ்பைக்கின் மீது ஒரே அடியில் அடித்து நசுக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.. அனிமேசன் பின்மண்டையிலிருந்து அழகோவியமாய் உதித்தாலும் ஒரு பயம்.. ஏனென்றால், அந்த போலி ரெமிடசிவிரை விற்றவன் கல்லையும் காசாக்குபவன், வாங்கியவன் கல்லிற்காக கொலையும் செய்பவன்.. 'இவனுங்களையெல்லாம் நம்மலாமா, வேண்டாமா' என்றவாறே ஒரு சாணிக்கியத்தனத்தை, ஐ ஆம் ரியலி சோரி, சாணக்கியத்தனத்தை கையாண்டேன்..
'அது எங்க இங்க இருக்கு...' அதனால், கவுனி பொங்கலின் நடுவே ஒரு கோட்டைப் போட்டு பிரித்து இருபுறமும் வாய்க்காலை கட்டிவிட்டேன்.. என்னதான் இரு கடத்திகள் நேரடி தொடர்பின்றி எவ்வளவு அருகருகில் இருந்தாலும், எலெக்ட்ரான் பாயாதே.. டனலிங் எபக்ட் இருக்காதா என்று நீங்கள் இப்பொழுது கேட்பது, நேர எந்திரத்தில் பயணித்து, அப்பொழுதே காதில் விழு.. டனலிங் எபக்ட் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது என்று சமாளித்துவிட்டு மகனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தேன்.. இடையிடையே என் வாயும் எலக்ட்ரோலைட்டை தரம்பார்த்தது..
இந்த காட்சிகள் அனைத்தும் அரங்கேறியது மொட்டைமாடி என்பதால், பின் மாலை நேரத்து காற்றினில் சற்று அரை மயக்கத்தில் மகனுக்கு மாற்றி ஊட்டிவிடுவோமோ என்று ஒவ்வொரு முறையும் வலது கையையும், அது வைத்திருந்த வலது ஓர ஸ்பூனையும், இடது கையையும், அது வைத்திருந்த இடது ஓர ஸ்பூனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்நேரம் பார்த்து கொரானாவின் ஒன்னுவிட்ட தம்பியான டெங்குவினுடைய சக்களத்தி கொசு வந்து இடது கையில் லேண்டாகி, ஊசியினை உட்செலுத்த, ஸ்பூன் மாறிவிடுமோ என்ற பயத்தில், தடுப்பூசி போடுவதாக நினைத்து தடுமாறாமல் உட்கார்ந்திருந்தாலும், ஜெகன் பேச்சை கேட்காத ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினரைப்போல, என் மூளை சொல்லியதை கேட்காது வலது கை ஓங்கி ஒற்றை அடியை கொசு அமர்ந்திருந்த இடது கை மீது அடித்துவிட்டது.. கொசுவின் ரெத்தம் பட்டதாக மூளையால் வலுக்கட்டாய குவாரண்டைன் செய்யப்பட்டது இடது கை..
இடது கைக்கு ஆரும் தண்ணி தரக்கூடாது, இடது கையோட ஆரும் பேசக்கூடாது, இடது கையோட ஆரும் பழகக்கூடாது என்ற மூளையின் கட்டளைக்கு இணங்க, வலது கையே இரண்டு எலக்ட்ரோடுகளையும் கையாண்டது... அதுவரை விளையாடிக்கொண்டிருந்த மகன், எப்படி கவனித்தானோ தெரியவில்லை, சட்டென குரலை உயர்த்தினான்..
அப்பா, நீங்க எந்த ஸப்பூனுல எனக்கு கொடுக்குறீங்க.. நல்லா பாருங்க..
சுதாரித்து பார்த்தேன், சரியாக வலது ஓர ஸ்பூனை எடுத்துதான் அவனுக்கு ஊட்டியிருந்தேன்..
டேய் சரியா, உன்னோட எலெக்ட்ரோட எடுத்துதான ஊட்டியிருக்கேன்..
என்னப்பா ஒளற்ரீங்க..
சாரி சாரி.. உன்னோட ஸ்பூன எடுத்துதான ஊட்டியிருக்கேன்..
நீங்கதான சொன்னீங்க இடது கொரானா ஸ்பூனு, வலது என்னதுன்னு..
டேய் டேய் அது கொரானா ஸ்பூனு இல்லடா.. கேக்குறவனுங்க என்ன நெனப்பாங்க.. அது நான் சாப்டுற ஸ்பூன், அவ்ளோதான்..
இருந்தாலும் நீங்க கொரானா ஸ்பூனால எனக்கு ஊட்டிவிட்டுடீங்க..
இல்லடா, கொசுவ அடிச்சதால வலது கைல ரெத்தம் பட்டுட்டு, அதான் இடது கையால உன்னோட வலது ஓர ஸ்பன எடுத்து ஊட்டிவிட்டேன்டா... அதுக்காக என்னோட ஸ்பூன கொரானா ஸ்பூனுன்னு சொன்னதெல்லாம் ஓவர்டா..
கொசு ரெத்தமா, எங்க காமிங்க..
வலது கையை எடுத்து, 'இந்தா பாரு உங்க அப்பா எவ்ளோ பெரிய வீரன்னு', என்று சொல்லி அவனிடம் காண்பிக்கும் பொழுதுதான் பார்த்தேன் ரெத்தம் ஒன்றுமே இல்லை..
அப்பொழுதுதான், தன் முகத்தை அப்படியும் இப்படியுமாக அப்பத்தா போல இழுத்துக்கொண்டு, ஹூக்கும், உனக்கு என்னைய அடிக்குற மாதிரியும் அனிமேசன் வருதோ, அந்த அனிமேசன், டப்பா அடிமேசனையெல்லாம் என் உட்பியோட அண்ணன் கொரானாகிட்ட வச்சிக்க, நான் பாரம்பரிய கொசுவாக்கும், என்றவாறு றெக்கையை நீட்டி வீரமாக பறந்துசென்றது, டெங்குவின் சக்களத்தி..
-சகா..
17/05/2021

Think positive and think scientific..?


இந்த பாசிட்டிவ் நெகட்டிவ் என்ற மாய வலைக்குள்தான் உலகமே மயங்கிக் கிடக்கிறது...

மாங்கல்யம் தந்துனாமே என்று திருமண அரங்கில், யாருக்கும் பொருள் விளங்கவில்லையாயினும், பொருட்படுத்தாது மூச்சைப்பிடித்து ஒப்பித்துவிடும் புரோகிதரைப் போலவே 'ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ்' என்ற சுலோகத்தை பெரும்பாலானவர்கள் முனுமுனுப்பதை நாம் கேட்டே கடந்திருப்போம்.. அந்த சொற்களுள் ஏதோ நம்பிக்கை ஒளித்திருப்பதாய் நம்மை நினைக்க வைக்கும்.. ஆனால் பாசிட்டிவ் நெகட்டிவ் சொற்களுக்கும், நேர்மறை எதிர்மறை சிந்தனைகளுக்கும் தோடர்பில்லை என்பதே உண்மை..
உண்மை ஒருபுறமிருக்க, பாசிட்டிவ்னு ஒன்னு இருந்தா நெகட்டிவ் இருக்கத்தானே செய்யும்.. அதுபோலத்தான் கடவுள்னு ஒருத்தர் இருந்தா பேய் பிசாசுங்குற நெகட்டிவ் இருக்கத்தான் செய்யும், அதாவது ஆண்-பெண் போல, இப்படி அடிப்படையற்று பிதற்றும் நபர்களையும் ஒரு நாளில் ஒருமுறையாவது சந்தித்துவிடுவோம்..
என்ன ஓய் உன்கூட பெரிய ரோதனையா போச்சு.. அணுவை எடுத்து பகுப்பாய்ந்தால் அதன் உட்கருக்குள் புரோட்டான் என்ற பாசிட்டிவ் ஆற்றலும், வெளி வட்டங்களில் எலெக்ட்ரான் என்ற நெகட்டிவ் ஆற்றலும் இருக்கும் ஓய்.. என்றும் சிலர் அறிவியலை அடியாளாய் கூட்டிவருவதுண்டு..
கணிதத்தில் கூட பாருங்க, பாசிட்டிவ் நெகட்டிவ் உண்டுங்க, அதனாலதான் சொல்றோம் உங்க உடம்பை சுற்றியும் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆரா வளையம் இருக்கிறது, என்பவர் பலர்.. ஆனால் நெகட்டுவ் × நெகட்டுவ், பாசிட்டிவ் ஆகிடுமே.. அப்போ ரெண்டு பேய் சேர்ந்தா சாமியாகிடுமா என்று கேட்டால்.. நம் பிறப்பை பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள துணிவது அவசியமாகிறது.. ஏனென்றால் ஆத்திகவாதிகள் கண்ணியமானவர்கள்.. சாந்தமானவர்கள்..
உண்மையா பாசிட்டிவ்னா என்ன, நேர்மறையா! அதற்கு ஏதேனும் நேர்மறை ஆற்றல் உண்டா...
அப்டினா நெகட்டிவ் எதிர்மறையா! ஏதேனும் எதிர்மறை ஆற்றலுண்டா! அது மனிதனுக்கு ஒவ்வாதவையா..?
நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆரா என்கிற ஆற்றல் இருக்கிறதா..!!
இப்படியெல்லாம் வேறுபட்ட கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாலும், பதில் ஒன்றுபோலத்தான் இருக்கப்போகிறது.. அந்த பதிலை அறிவியல்மட்டுமே கொடுக்கவல்லது.
அறிவியல்'படி' பார்த்தால் பாசிட்டிவ், நெகட்டிவ் பெயர்கள் நம் வசதிக்கு புரிந்துகொள்வதற்காக வைக்கப்பட்டதே தவிர, பாசிட்டிவ்-நேர்மறை ஆற்றல்- நல்லதாகவும், நெகட்டிவ்-எதர்மறை ஆற்றல்- கெட்டதாகவும் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டவைகளே.. அதனால் அதை அறிவியலாக திரித்து, நம்பிக்கையோடு கலந்துவிட்டு, நம் அறியாமையை அறுவடைசெய்து, கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள் வெகுசிலர்..
நம்மூர் ஆரா சோதிடர்கள், கைநாடி சோதிடர்கள், சோதிட சிகாமணிகளை டீபங்க் செய்ய ஜேம்ஸ் ரேன்டி வரவேண்டிய அவசியமில்லை.. நமக்கு தெரிந்த அறிவியலே போதுமானது..
இந்த ஆத்தீகவாத சோதிடர்கள்தான், நாத்திகர்களை விட அதிகமாக கடவுளை பொய்யாக்குபவர்கள்.. எப்படியென கேட்கிறீர்களா!?
நாத்திகர்களிடம், கடவுளை மையமாக வைத்து நடக்கும் சடங்குகளைப் பற்றி கேட்டால், அது நம்பிக்கை சார்ந்தது என்றவாறு கடையை சாத்திவிட்டு கிளம்பிவிடுவார்கள்.. அதுவே மேல் குறிப்பிட்ட ஆத்திகவாதிகள், இந்த நம்மிக்கைகளெல்லாம் அறிவியல் சார்ந்தது என்று நிறுவ நினைப்பார்கள்.. புரிகிறதா.. இவர்கள் 'மெய்'ஞானத்தை நிரூபிக்க விஞ்ஞானதின் உதவியை நாடுகிறார்கள்.. அப்படியானால் இவர்களுக்கு மெய்ஞானத்தில் நம்பிக்கையே இருப்பதில்லை என்பது தெளிவாகப் புரிகிறது..
மெய்ஞானம் - உயர்ந்த ஞானம்; விஞ்ஞானம் - சொல்லவா வேணும்.. நீங்களே புரிஞ்சுக்கோங்க..
நம்ம என்ன சொல்லி என்ன ஆகப்பொகுது.. நம்ம சொன்னா தம்மாத்தூண்டு கொரானாவே கேக்குறதில்ல, எங்க இந்த பெரிய பெரிய வைரசெல்லாம்....
என்னமோ போங்க, எதிர்வரும் சந்ததிகளுக்கு மிகப்பெரும் பணி ஒன்று இருக்கிறது.. இந்த அறிவியலை வளர்த்தெடுக்க வேண்டிய பணிதான் அது.. அப்பொழுதுதான் இந்த தட்டு அடித்து, சாணி பூசி, மாட்டு கோமியம் குடித்து, விளக்கு பிடித்து எவ்வாறு கொரானா அழிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.. தற்கால அறிவியலுக்கு அதனை விளக்கும் ஆற்றல் இல்லை என்றே நினைக்கிறேன்..
So, think negative.. Think negative twice.. So that negative × negative becomes positive... 🙂
Positive and negative are just words to indicate different particles with different properties.. It does not hold any good or bad energies..
Move forward..
-சகா..
15/05/2021

மின்மினியுடன் ஒரு உரையாடல் # 1 (How to teach science to your stars?)


தென்னங்காற்று சிலுசிலுவென மேனியை முத்தமிட்டு சென்றுகொண்டிருந்தது.. கும் இருட்டு.. சென்ற வாரம் இறந்துபோன அந்த முக்கத்து வீட்டுப் பெண், வெள்ளை வெளேரென்று புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றாலும் அந்த இருட்டில் தெரிவதிற்கில்லை.. அப்படி ஒரு இருட்டு.

பல்லாயிரக் கணக்கான மின்மினிகள் வானத்தில் பறப்பது போல விண்மீன்கள் வீற்றிருந்தன.. மின்மினிகளின் வெளிச்சம் ஒரு நாளும் நிழலைக் கொடுத்ததில்லை.. இல்லையேல் அந்நிழலைக் கண்கள் கண்டதில்லை..
கொட்டாங்கச்சி ஓட்டை வழியாக, அப்பாவிடம் அடிவாங்கி ராப்பகலாய் கண்ணயர்ந்து திரித்து உருவாக்கப்பட்ட தேங்காய் நார் கயிற்றால் வேயப்பட்ட கட்டிலின் மீது, நார் பிசிறுகள் தென்றல் முத்தமிடும் மேனியை சீண்டாமலிருக்க சற்றே தடிமனான சமுக்காலத்தை போட்டு, ஒற்றை தலையணையின் மீது பின்மண்டையை, அவதாரில் சடையை குதிரை பிடரியுடன் பொருத்துவது போல அழுத்திவிட்டு, கண்களும் கண்கள் வழி மூளையும் அந்த மின்மினிகள் மீது வீழ்ந்துகிடந்தன..
என்னையா இந்த இயற்கை, இப்படியான அழகை எப்படி அது உருவாக்கியிருக்க முடியும் என்றவாறான நியூட்ரான்களின் இடப்பெயர்ச்சிகளால் கிரங்கடிக்கப்பட்டு எண்ணத்தை பல வண்ணங்களாக வானின் மீது சிதறடித்துக்கொண்டிருந்தான் அந்த சிறுவன்...
இயற்கையா கடவுளா என்றொரு பெரும் கேள்வி அவனுள்.. கடவுள் என்று நம்புபவர்களுக்கு அவனிடையே ஒற்றை கேள்வி இருந்தது.. அந்த கடவுளை உருவாக்கியது யார் என்பதே அது..!
அது எளிமையான கேள்வியும் கூட.. அந்த கேள்வியினால் அவனை ஒரு நாத்திகவாதியாக அந்த மின்மினிகள் நினைத்துவிடவில்லை.. மாறாக அவனிடம் மிகவும் எளிமையாக உரையாடிக்கொண்டிருந்தன அவைகள்..
நீ கடவுளை யார் உருவாக்கினார் எனக் கேட்கிறாய், இது எப்படி இருக்கிறதென்றால் உன் தாத்தாவின் தாத்தா பெயரை கேட்பது போல இருக்கிறது... உனக்கு அவரின் பெயரோ, அவரைப்பற்றியோ தெரியுமா என்ன..
எளிதில் கேள்வி அம்பை எய்தவனுக்கு, மின்மினி எய்த எதிர் அம்புகளை எதிர்கொள்ள தயங்கிப்போனான் சிறுவன்..
சற்றே விழி பிதுங்க தன் வியாக்யானத்தை எடுத்துரைக்க முற்படுகிறான் அவன்.. உனக்கு பெருவெடிப்பு தெரியும் தானே..
என்ன வெடிப்பு அது.. நீங்கள் நிகழ்த்திய உலகப்போரில் வெடித்த வெடிப்புகளை விட என்ன பெரிய வெடிப்பு...
அது பல கோடி ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஒன்று.. அந்த பெரு வெடிப்பிலிருந்து வெளிவந்த தீப்பொறிகள்தானே நீங்களெல்லாம்..
அதை மின்மினிகள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.. நாங்கள் கடவுள்கள் கைப்பட கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணை திரட்டுகள் என்றே சொல்லிக்கொள்ள விருப்பப்பட்டன.. ஆனால் அவற்றுக்கான சாட்சி எதுவும் அவைகளிடம் இல்லை..
ஆனால் மின்மினிகளைவிட பல லட்சம் கோடி அளவுக்கு சிறிய அந்த மனிதனின் மூளை சில அறிவியல் துணைகொண்ட பதில்களை வைத்திருந்தது..
பெரு வெடிப்பில் நீங்கள் பிறந்தவுடன் சிறியதாகத்தான் இருந்திருந்தீர்கள்.. பூ தெரியுமா உங்களுக்கு.. அந்த பூவின் உள் கட்டமைப்புகளை கண்டிருக்கிறீர்களா.. அது போலத்தான் நீங்கள்.. ஒரு விதையிலிருந்து வெடித்துவரும் செடியில் முளைக்கும் மொட்டு இருக்கிறதே, அதிலேயே அந்த பூவின் உட்கட்டமைப்பு இருந்திருக்கும்.. பூ பெருக்க, பெருக்க அதன் உள் அமைப்புகள் விரிந்து அழகாகுமே.. அது போலத்தான். நீங்களும் பெரு வெடிப்பில் பிறந்து பின் பெருத்தீர்கள்..
நீ நாத்திகன்தான்... புரிந்துவிட்டது..
ஹஹ.. அது சரி.. உனக்கு E = mc2 தெரியுமா!
அது என்ன எழவோ, எனக்கு தெரியாது..
அது ஒன்றுமில்லை, ஆற்றலானது நிறையுடன் நேரடித் தொடரிபில் இருக்கும்.. நிறை கூட கூட, ஆற்றல் அதிகமாகும்.. இல்லையேல் ஆற்றல் அதிகமாக அதிகமாக நிறை அதிகரிக்கும்..
புரியலையே..
ஒரு 10 கிராம் மற்றும் 10 கிலோகிராம் எடை கொண்ட இரு பந்துகளை எடுத்துக்கொள்ளலாம், அதனை ஒத்த திசைவேகத்தில் ஒரு சுவற்றின் மீது அடித்தால் என்ன நிகழும்...
இது நேத்து பொறந்த புது மின்மினிக்கே தெரியுமே.. 10 கிலோகிராம் பந்து பட்ட இடத்தில் பாதிப்பு அதிகமிருக்கும்..
அதேதான்.. நிறை கூடும்பொழுது ஆற்றல் அதிகமாகிறது..
இதுதான் அந்த எழவு அறிவியலா.. நல்லாருக்கே. எங்கே இன்னும் கொஞ்சம் சொல்லேன்..
பெருவெடிப்பு நிகழ்ந்த மாத்திரத்தில் உருவான நெருப்பு குழந்தைகள், அவர்களின் நிறை மற்றும் திசைவேகத்தை பொறுத்து ஆங்காங்கே சிதறுண்டனர்.. அப்படி சிதறுகையில் ஆங்காங்கே உருவாகியிருந்த கருந்துளை ஏற்படுத்தியிருந்த வளைவுகளுள் வீழ்ந்தனர்..
இந்தபாத்தியா. அறிவியலில் புரியாத கெட்டவார்த்தைகள் அதிகம். இதுக்குத்தான் கடவுளென்ற ஒற்றை சொல்லோடு கடந்துவிடுவதை விரும்புகிறேன்..
எளிமையாக சொல்கிறேன்.. ஒரு பெரிய புடவையை நான்கு பக்கங்களையும் இறுக்கமாக கட்டிவிடு.. இப்பொழுது ஒரு பெரும் குழி ஒன்றை நடுவில் உருவாக்கிவிட்டு, நான்கைந்து கோள உருண்டைகளை அந்த புடவைக்குள் தூக்கி எறிந்தால் என்னவாகும்..?
அனைத்து கோள உருண்டைகளும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுகளுக்குதான் செல்லும்..
சரியாக சொன்னாய்.. இப்பொழுது, இரண்டு பெரிய கோள உருண்டைகளையும் பத்து சிறிய உருண்டைகளையும் தூக்கி எறிந்தால் என்னவாகும்..
அனைத்தும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுக்குள்தான் செல்லும்.. அதே வேளை இரண்டு பெரும் கோள உருண்டைகள் என்பதால் அவைகளும் அவைகளின் எடைகளுக்கு தகுந்த வளைவுகளை உருவாக்கும், அந்த வளைவுகளுக்கு மிக அருகில் எந்தெந்த சிறு கோள உருண்டைகள் செல்கின்றனவோ அவைகளனைத்தும் அந்த வளைவுகளால் உள்ளிழுக்கப்படும்..
அட இதுதான் அறிவியல்.. பெரு வெடிப்பில் உருவான பிள்ளைகள் சிதறுண்டு, அவரவர் நிறைக்கு தகுந்தார் போல ஆற்றலை வெளிப்படுத்தி, space fabricல் சிறு சிறு வளைவுகளை ஏற்படுத்த, அந்த வளைவுக்கு அருகாமையில் உள்ள சிறு சிறு பிள்ளைகள் உள்ளிழுக்கப்பட்டன.. இதற்கு பெயர்தான் ஈர்ப்பு விசை.. இப்படித்தான் கதிரவன் என்றொரு மின்மினி உருவாக அதன் அதீத நிறையால் உருவான குழி அருகிலிருந்த எட்டு கோள்களையும் உள்ளிழுக்க, அந்த ஒவ்வொரு கோள்களும் அவரவர்கள் நிறைக்கு தகுந்தாற்போல மேலும் space fabricல் வளைவுகளை உருவாக்க, அதனுள் வீழ்ந்தன இந்த துணைக் கோள்கள்..
அடடடா.. இது தெரியாம இருந்துட்டேனே... ஆனா ஒரு சந்தேகம்.. அதென்ன சில வேளைகளில் நிறை என்றும், சில வேளைகளில் எடை என்றும் குறப்பிடுகிறாய்.. ஒற்றை சொல்லில் குறிப்பிட்டால் என்னவாம்.. இதற்குதான் இந்த அறிவியலாளர்களை பிடிப்பதில்லை..
அட அன்பு மின்மினியே, எடை ஈர்ப்புவிசைக்கு உட்பட்டது நிறை அப்படியல்ல.. எங்கும் நிறை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. மீண்டும் ஒருமுறை நான் சொன்னவற்றை நினைத்துப்பார், எங்கெங்கு எடை நிறையானது என்பதை..
ஓ.. இதுல இவ்ளோ செய்தி இருக்கா..
இது மட்டுமல்ல.. நீங்களெல்லாம் மின்மினிகள்.. உங்களிடம் வேதிவினைபுரிந்து எரியும் வேதி பொருட்கள் இருக்கின்றன.. அதாவது எரி பொருட்கள்.. அதனால்தான் ஒளி கொடுக்கிறீர்கள் நீங்கள்... கதிரவனை எடுத்துக்கொண்டால், அதில் ஹைட்ரஜன் வாயு அதிகமாக இருக்கிறது.. இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் உருவாவது மூலமாக கதிரவன் எங்களுக்கு கதிர்களை ஏவி விடுகிறான்..
அந்த கதிரவன் அண்ணன் எரிந்து கொண்டேதான் இருப்பாரா கடைசி வரையில்..
ஒரு வேளையில் அனைத்து எரிபொருளும் தீர்ந்துபோகும் அப்பொழுது அனைத்து ஹைட்ரஜனும் ஹிலியமாக மாறும்.. ஹைட்ரஜனைவிட ஹீலியம் பருத்த ஆள் என்பதால், கதிரவனின் விட்டம் பெருக்கும், புதனின் சுற்றுவட்டபாதை வரைகூட வரலாம்.. அப்படி பெருக்கையில் பூமியில் வெப்பம் அதிகமாகும்.. பின் அந்த மின்மினி முற்றிலுமாக அழிந்து கருந்துளையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.. கருந்துளைக்கு ஈர்ப்புவிசை அதிகம், நிறை அதிகரிப்பால்.. எனவே அனைத்து கோள்களையும் உள்ளிழுக்கும் ஆபத்து ஏற்படலாம்.. ஆனால் கிதிரவன் கருந்துளையாக மாறும் அளவுக்கு அதற்கு ஆற்றல் இல்லை என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.. இருந்தாலும் என்றோ ஒரு நாள் கதிரவன் அழிவான்.. அவனின் எரிபொருள் ஒருநாள் இல்லை ஒரு நாள் முடியதானே செய்யும்..
அப்டினா, ஏன் அங்கே படுத்துக்கொண்டு கதை அளந்துகொண்டிருக்கிறாய், ஒரு ராக்கெட் எடுத்து செயற்கைகோள் மூலமாக எங்காவது போய்விடவேண்டிதானே..
ஹஹ... அது நடக்க பல கோடி ஆண்டுகள் ஆகும்.. இருந்தாலும் நாங்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம், ஏதேனும் மற்ற மின்மினி குடும்பத்திலுள்ள கோள்களில் உயிர் வாழ முடியுமா என்று...
என்னது, அப்ப எல்லா கோள்களிலும் உயிர் வாழ முடியாதா..
முடியாது.. உயிர் வாழவென ஒரு சூழல் வேண்டும்..
அதென்ன சூசல்.. சாரி, சூழல்..
பூமி, பெருவெடிப்பிலிருந்து சுகப்பிரசவத்தில் பிறந்து வந்த பிறகு, இங்கு வெறுமனே பாறைகளும், நெருப்பும்தான். பின் பலமுறை வால்நட்சத்திரங்கள் படையெடுக்கவே, நீர் கட்டிகள் இடம்பெயற, பின் அமிலக் குளங்கள் உருவாகின.. பல இடி மின்னல்கள் தாக்குதலால், அமிலக்குளங்களில் இருந்த நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன், ஆக்ஸிஜன் அனைத்தும் சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவாகி பின் அதிலிருந்து ஒரு செல் உயிரிகள் தோன்றி, பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவாகினான்.. இது நேரம், காலநிலை என பல கூறுகள் ஒரே நேர்கோட்டில் அமைந்ததால் ஏற்பட்ட விளைவு.. இதே விளைவு வேறு எங்கும் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியே..
அய்யடா.. தம்மாதுண்டு அறிவ வச்சி வளரவும் செய்றீங்க, உங்கள நீங்களே அழிச்சிக்கவும் செய்றீங்க... ஏதோ நாங்கள் மின்மினிகளாக பிறந்தோம்.. மனிதர்களாக பிறந்திருந்தால் எவ்வளவு பிரச்சினைகள்...
அத விடு.. உனக்கு பீட்டல் ஜூஸ் (Betelguese) தெரியுமா..
பீட்ரூட் ஜூஸ் தெரியும்.. அதென்ன அந்த பீடா ஜூஸ்..
பீடா இல்ல மின்மினி.. அது பீட்டல் ஜூஸ். அதுவும் உன்னைப் போலொரு மின்மினிதான்.. அதற்கு திருவாதிரை என்றொரு பெயரும் உண்டு..
மே பி.. மே பி.. எனக்கு ஒன்னுவிட்ட தம்பியா இருக்காலாம்.. ஏன்னா நாங்க ஒரே சாதிதான..
கொடும.. நீயும் சாதியப் பத்தியேதான் பேசுறியா..
எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்.. ஆமா, நீ பேசுறது ஏன் எனக்கு ரொம்ப லேட்டாவே கேக்குது..
நீ பேசுவதும் எனக்கு நேரம் கடந்துதான் கேட்கிறது.. ஏனென்றால் நீ பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறாய்..
அதென்ன ஒளிக்கு ஆண்டு.. பைத்தியக்காரனுங்கடா நீங்க..
அவசரப்பட்டு மனிதர்களைப்போல தவறான சொற்களை நட்டுவிடாதே. அப்புறம் மகசூலும் அதேதான் கிடைக்கும் உனக்கு..
கோவிக்காம, பதில சொல்லுங்க ஏட்டய்யா..
ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவு, ஒரு ஒளியாண்டு.. எடுத்துக்காட்டாக, நீ பத்து ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறாய் என வைத்துக்கொண்டால், நீ இப்பொழுது உமிழும் ஒளி பத்து ஆண்டுகள் கழித்துதான் எனக்கு வந்தடையும்.. அப்படியானால் ஒலி இன்னும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.. ஏனெனில் ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிக்கும்.. ஆனால் ஒலி, ஒளி போன்றல்ல, அதற்கு ஒரு ஊடு பொருள் வேண்டும்.. அதாவது கடத்தி.. பெருவெடிப்பு கூட மியூட் செய்யப்பட்ட பாடல் காட்சிபோலத்தான் நடனமாடியிருக்கும் அந்தரத்தில்..
அப்பறம் நாம எப்படி...
எட்டு கட்டங்களில் உச்சம் பெற்ற ஒருவன் பல கோடி ஓளியாண்டில் உள்ள மின்மினியிடம் போன் இல்லாமலும் பேசலாம்.. சரி அத விடு.. அந்த திருவாதிரைக்கு வருகிறேன்..
ஆமாமா.. மறந்துட்டேன்.. சொல்லு சொல்லு..
திருவாதிரை தற்பொழுது இல்லை.. அது கருந்துளையாக மாறிவிட்டது.. இருந்தும் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டேதான் இருக்கிறது.. இன்னும் சில நூறு கோடி ஆண்டுகள் கிடைக்குமாம்.. என்னே அறிவியலின் விந்தை பார்த்தாயா மின்மினி..
ஆமாம்.. ஒரு கேள்வி கேட்கலாமா உன்னிடம்..
அப்கோர்ஸ்.. ஒய் நாட்..
பெரு வெடிப்பு என்று சொன்னாயல்லவா, அந்த பெருவெடிப்புக்கு முன் உலகம் எப்படி இருந்தது.. பெரு வெடிப்பு எதற்காக நிகழ வேண்டும்.. முதல் அணுவின் பருப்பொருட்கள் உருவானது எப்படி..
அவ்..... கேட்டுபுட்டியே இப்படி ஒரு கேள்விய.. இதற்கு கடவுளென ஒற்றை சொல்லைக்கொண்டோ, இயற்கை என்று சொல்லியோ, இயற்கைதான் கடவுள் என்றோ சமாளித்துவிடலாம்.. ஆனால் அறிவியல் அப்படி சொல்லிக்கொடுக்கவில்லை.. பெருவெடிப்பின் காரணமோ, பெரு வெடிப்பிற்கு முந்தைய நிலையையோ அறியும் அளவுக்கு நாம் இன்னும் அறிவியலை வளர்த்தெடுக்கவில்லை.. உன் கேள்விக்கான பதிலை அறிவியல் என்றாவது ஒரு நாள் கொடுக்கும்.. நம்பிக்கையின் அடிப்படையிலானது இல்லை அறிவியல், சட்டென பதிலை கொடுத்துவிட.. அஃது ஆய்வுகளையும், முகாந்திரங்களையும், காரணிகளையும், நிரூபணங்களையும் அடிப்படையாகக் கொண்டது..
ஆகா.. நல்லா சமாளிக்குற.. இருந்தாலும் அறிவியலில் ஏதோ இருக்கிறது என்றே நினைக்கிறேன்.. யாரோ உன்னை கூப்புடுற மாதிரி இருக்கே..
ஆமாம். அப்பா கூப்புடுறாங்க.. நாளைக்கு திருவாதிரை திருவிழா.. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு இன்று இரவே செல்லவேண்டும்.. நாளைக்கு இரவு சந்திக்கலாம்..
டேய்டேய்.. இப்பதான் திருவாதிரை செத்து போச்சின்ன..
........... (சிறுவன் கயிற்று கட்டிலிலிருந்து எழுத்து சத்தமின்றி நடக்கத் தொடங்குகிறான்..)
-சகா..
04/05/2021


புதன், 9 ஜூன், 2021

கிணற்றுத் தவளைகளா நம் குழந்தைகள்..!

நீண்ட நாட்களாக வெளியில் சுற்றித்திரிந்த தவளை ஒன்று எதிர்பாராத வேளையொன்றில் தவறி கிணற்றுள் விழுந்தது..
ஆகா
அருமையாக
இருக்கிறதே, நம்மை உண்ணும் பாம்புகள், பறவைகள் இங்கில்லையே, எப்பொழுதும் சில்லென தண்ணீர், விதவிதமான சுவையுடன் நீர்ப்பூச்சிகள் என அனைத்தும் இருக்கின்றனவே.. இதுதான் நம் முன்னோர்கள் சொல்லிய சொர்க்கமோ.. இவ்வளவு நாள் தெரியாத்தனமாக நரகத்தில் இருந்திருக்கிறோமோ.. என்றெல்லாம் பிதற்றியது அந்த தவளை..
நாட்கள் சென்றன.. தவளையோ உணவை பிடிக்க அதீத ஆற்றலை செலவழிக்க தேவையில்லை என்பதால் சற்றே பருத்திருந்தது..
ஒரு கட்டத்தில் பசி என்றால் என்னவென்றே மறந்திருந்த அந்த தவளைக்கு எந்த பூச்சியும் சுவை நல்குவதாக இல்லை..
தூக்கமும், உணவும் மட்டுமே வாழ்வென கழிந்த நாட்கள் என்னவோ தவளையின் கபாலத்திற்குள் பதிவாக மறுத்தன..
என்றோ ஒரு நாள் தன்னை பிடிக்க வந்த பாம்பிடமிருந்து தப்பிய அந்த நொடியும், தப்பித்த பின்னான மகிழ்வும், பசியும், பசித்தப்பின்னான உணவின் ருசியும், கபாலத்துள் கையாமுயாவென கத்தியது..
ஒரு நாள், தூங்கிக்கொண்டிருந்த தவளை சட்டென எழுந்து, ஏதோ நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று எண்ணியது.. எண்ணிய மாத்திரத்தில், அதன் கபாலத்தில் உதித்தது ஒரு எண்ணம்..
இந்த பாம்பின் பிடியில் இருந்து தப்புவது கூட எளிது, ஆனால் இந்த சோம்பேறி தனமிருக்கே.. மிகவும் ஆபத்து..
சற்றே யாருக்கும் பயனற்று இந்த கிணற்றுள் வாழ்வதுதான் ஏனோ என்று சலிப்படைந்த தவளை, தட்டுதடுமாறி எப்படியோ கிணற்றிலிருந்து மேல்வந்து தன் இயல்பு வாழ்வை தொடர்ந்தது..
எந்த ஆபத்துமற்ற கிணற்றைவிட, பாம்புகள் நிறைந்த இந்த இடம்தான் நம் நிரந்தர வாழ்வென கருதி, பாம்பை எதிர்க்க கற்றுக்கொள்ள தொடங்கியது..
ஆக குழந்தைகளே,
தடைகளே நம்மை இயக்குகின்றன..
எதிரிகளே நம்மை உருவாக்குகிறார்கள்.. உழைப்பே நம்பை ஓய்வெடுக்க வைக்கிறது..
வலியே நமக்கான சுகத்தை கொடுக்கிறது..
எனில், வாருங்கள் குழந்தைகளே, பள்ளிக்குச் செல்வோம்...
நம்மின் அறிவுச் சிறகை விரிக்க நேரம் வந்துவிட்டதை எண்ணி பள்ளிக்கு செல்வோம்!
- சகா..
19/01/2021