புதன், 16 ஜூலை, 2014

கூட்டு-அறிதல் தடுப்பி (Quarum Sensing Inhibitor): தொற்று நோய் கிருமிகளுக்கான அடுத்த தலைமுறை மருந்து

மருத்துவத்துறையில் தொற்று நோய்களுக்கு எதிராக நாம் தோற்றுக்கொடிருக்கிறோம். நோய்க்காரணியான "பாக்டீரியா" என்றறியப்படும்  நுண் கிருமிகள் நாம் இதுநாள் வரை கண்டறிந்த மருந்துகளுக்கு எதிராக தங்களுடைய மரபணுக்களை மாற்றியமைத்து, அந்த மருந்து தங்களை எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துகொள்கின்றன. இவ்வாறான தற்காப்பு நடவடிக்கையில் அவை  ஈடுபட தூண்டும் காரணி, நாம் அழிந்து விடுவோம் என்ற உணர்வு (selective pressure) தான், இது நமது மருந்துகள் அந்த கிருமியை அழிக்கும்போது உண்டாவது. இத்தகைய சூழ்நிலையில், நாம் மாற்று மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது, அதுவும் அம்மருந்துகளில் செயல்பாடு ஏற்கனவே நாம் அறிந்திருக்கும் மருந்துகளில் இருந்து முழுவதும் வேறுபட்டும் இருக்க வேண்டும். 

கூட்டு அறிதல் (Quarum Sensing) (படம் 1என்னும் ஒரு மிக நுட்பமான, நேர்த்தியான ஒரு நடைமுறையை அக்கிருமிகள் மேற்கொள்கின்றன. அதன் மூலமாகவே அவை சில நோயை உண்டாக்கவும், பரப்பவும் மற்றும் தற்பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து காரணிகளை உருவாக்கி கொள்கின்றன. கூட்டு அறிதல் நடைமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதலில் கிருமிகளின் அடர்த்தி குறைவாக இருக்கும்பொழுது, அவை மனித செல்களை தாக்குவதற்கான காரணிகளை வெளிவிடுவதில்லை, மாறாக தங்களை மருந்துகளிடம் இருந்து பாதுகாக்க ஒரு உயிர்த்திரை (bio-film) உருவாக்குகின்றன. அவற்றை தாண்டி எந்த மருந்தாலும் செயல்பட முடியாத சிறப்பான அரணாக அது அமைகிறது. அதே வேளையில், கிருமிகளின் அடர்த்தி அதிகமாக உயரும்பொழுது, அவை தங்களில் கொடூர முகத்தை வெளிக்காட்டுகின்றன. மனித செல்களை அழிக்க தேவையான விசேட காரணிகளை களம் இறக்குகின்றன, வெற்றியும் காண்கின்றன. ஆக, கூட்டறிதலை அழித்தால் அவைகளால் ஒருபோதும் நம்மை தாக்க இயலாது. இதையே அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட மருந்துகள் உருவாக்கப்படுகின்றன. 



படம் 1: கூட்டு-அறிதலும் கூட்டு-அறிதல் தடுப்பும் 

சிறுநீர்த் துவாரங்களின் வழியேறி,  நீர்ப்பை வரை பயணித்து மேலும் ஒரு படி மேலெழும்பி சிறுநீரகத்தையே பாதிக்கும் ஒரு கிருமி இ.கோலி (படம் 2). அவற்றால் ஏற்படும் பதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு இக்கிருமி ஒரு பெரும் பிரச்சனை. இந்த சிறுநீரக வழிதொற்று நோய்க்கான மருந்துகள் இருக்கின்றன, ஆனாலும் மேற்சொன்ன காரணங்களால் அவை எதிர்பார்த்த பயனை தருவதில்லை. மேற்சொன்ன கிருமிக்கும், மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றி மருந்து கண்டறிவதே எங்கள் ஆராய்ச்சி. 



படம் 2: சிறுநீரக வாழ் இ.கோலி உருவாக்கிய உயிர்த்திரை 

தென் தமிழகத்தில் பெரும்பாலும் இந்த நோய் கண்டவர்களுக்கு மலை வேம்பின் (melia dubia) கசாயமே வழங்கப்படுகிறது. இந்த மலை வேம்பில் (படம் 3) உள்ள ஏதேனும் ஒரு வேதி மூலக்கூறு நாங்கள் எதிர்பார்க்கும் கூட்டறிதல் தடுப்பியாய் இருக்கலாம் என்பது எங்களில் கணிப்பாக இருந்தது. அதை நிரூபிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டோம்.  



படம் 3: மலைவேம்பு


முதலில் மலை வேம்பு மரத்தில் இருந்து இலை, தண்டு,  வேர், விதை மற்றும் பட்டை ஆகிய அனைத்தையும் பறித்து உலர்த்தினோம். பின்னர் அதனுடைய தன்மைகள் மற்றும் வேதி கூறுகள் ஆராயப்பட்டன. பின்னர் கணினிகளின் உதவியோடு எந்த மூலக்கூறு எவ்வாறு அக்கிரிமியின் உடலிலுள்ள சமிக்ஞை- வாங்கிகள் உடன் வினை புரிகின்றன என பரிசோதித்த பின்னர் அந்த மூலக்கூறு ஆய்வக முறைப்படி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட அதன் ஏனைய பண்புகள் பரிசோதிக்கப்பட்டு, அதுதான் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. 

பின்னர்  அந்த முன்-மருந்து (pro-drug) அந்த கிருமிக்களுக்கு எதிராக எத்தனை முறையில் சோதிக்க முடியுமோ, அத்தனை முறைகளிலும் பரிசோதிக்கபட்டது. முடிவுகள் எதிர்பார்த்தபடி சாதகமாக இருந்ததால், மேலும் ஒருபடி மேலேபோய் அவற்றை ஆய்வக பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும் எலிகளுக்கு கொடுத்து சோதித்தோம். இத்தனை எலிகளைத்தான் உபயோகிக்க வேண்டும் என்ற நீதிநெறி அமைப்பின் கட்டுபாடுகளுக்கு உட்பட்டு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் இதிலும் சாதகமாகவே வந்தது. நோய் தொற்று தோற்றுவிக்கப்பட்ட எலிகளில் எங்களின் மருந்து எதிர்பார்த்த வேலையை செய்திருந்தது. அடுத்ததாய் மனித செல்களில் பரிசோதிக்கப்பட்டது. முடிவில் அது ஏனைய மனித செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் கண்டறியப்பட்டது. இம்மருந்தும் இதையொத்த மருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும்முன் 5-8 வருடங்கள் மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளிவரும். கிருமிகள் தங்களை தற்காத்துக்கொள்ள வேறு வேறு உத்திகளை மேற்கொண்டாலும், மனிதர்களாகிய நாம் வேறு உத்திகளை பற்றி யோசித்தே தீருவோம், ஏனெனில் தக்கன மட்டுமே தழைக்குமென  (survival of the fittest) நாம் நன்கறிவோம்.

முனைவர். இர. வினோத்கண்ணன் தேன்மொழி

(https://www.facebook.com/vinothkannan.ravichandiran)

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மருத்துவனும் நானே, மருந்தும் நானே-Theranostic tool பற்றிய சிறுவிளக்கம்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள் 948

என்று நம்மின் முன்னோடி, மூத்தோன் திருவள்ளுவர் சொல்கிறார்,
அவர் சொல்படி, "நோயின் அறிகுறிகளை முதலில் ஆராய்ந்து, அதன் காரணம் அறிந்து பின் அந்நோயினை அணுகி குணப்படுத்த வேண்டிய முறைகளை பின்பற்றல் வேண்டும்",

நோயின் அறிகுறிகளை ஆராய்ந்து அறிதல் 'Diagnosis',
அந்நோயை குணப்படுத்துதல் 'Therapy',

மேலே குறிப்பிட்ட இரு வேலைகளையும் ஒரே பொருள் செய்தலுக்கு பெயரே 'Theranostics'.

Diagnosis + Therapy = Theranostics

அதாவது ஒரே பொருளானது நோயின்,

1. இருப்பிடம் 
2. தன்மை 
3. நிலை 
ஆகியவற்றை துல்லியமாக வெளிப்படுத்தும் பண்பு வேண்டும், 
மேற்கூறிய வேலைகளை துரிதமாய் செய்து முடித்தபின், அந்நோய்க்கான மருந்தை மெதுவாய் வெளிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் செவ்வனே செய்து முடிப்பதற்கு ஏதுவாய் 'Theranostic' பொருள் அமையவேண்டுமெனில், 

அப்பொருள்,
1. அளவில் மிகச்சிறியதாய் இருத்தல் வேண்டும்  (nano to micro meter size)
2. நோயுராத இயல்பான செல்களை பாதிக்காதவண்ணம் இருக்க வேண்டும் (no toxicity)
3. உடலில், அயல் பொருட்கள் நுழையும் பொழுது, இயற்கையாய் தூண்டப்படும் எதிர்ப்பாற்றல்கள், 'theranostic' பொருளின் மீது செயல்படாதிருத்தல் அவசியம் (no immune response)
3. உடலில் பயணிக்கும் 'theranostic' பொருளை, வெளியிலிருந்து பின்தொடர ஏதுவாய்  அமைக்கப்பெற்றிருக்க வேண்டும் (trackability

இவையாவும் கைகூட, அதிநுண்ணணுவியல் தொழில்நுட்பத்தின் (Nanotechnology) தேவை இன்றியமையாமையாகிறது...

நம் மூத்தோள் ஔவை பாட்டி சொன்னாளே 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'-என்று, அத்தகைய அணு போன்ற மிகநுண்ணிய பொருளை பற்றி படித்தல்தான் (குறிப்பாக 100 nm க்கு குறைவான அளவு கொண்ட பொருட்கள்) 'அதிநுண்ணணுவியல்' தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. 

'Theranostic' பொருள் பற்றியும் அது எப்படி உடலில் வேலை செய்கிறது என்பது பற்றியும், மிக எளிதாய் புரிந்துகொள்ளும் விதமாய் இங்கே ஒரு காணொளி கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் தோழமைகளே,

(இந்த காணொளி, Adobe Flash என்ற மென்பொருளின் உதவியுடம் உருவாக்கப்பட்டுள்ளது)


சனி, 12 ஜூலை, 2014

அறிவியலாளர்களின் 'h-index'-யை எப்படி கணக்கிடுவது....?

உங்களின் மொத்த கட்டுரைகளில் (published articles), எத்தனை எண்ணிக்கையிலான உருப்படிகள்அது பெற்றுள்ள 'மேற்கோள்'களின் (citation) எண்ணிக்கைக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கிறதோஅதுவே உங்களின் h-index-ஆக அமையும்...

எடுத்துக்காட்டாக,
நீங்கள் இதுவரை 20 கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதில் 5 கட்டுரைகள் தலா 10 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 3 கட்டுரைகள் தலா 9 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 5 கட்டுரைகள் தலா ஒரு முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், மற்றவை இன்னும் மேற்கோள்கள் பெறவில்லை என்றும் வைத்துக்கொள்வோம்..,
இதில், அதிக எண்ணிக்கையிலான மேற்கோள் '10',
ஆனால் உங்கள் கட்டுரைகளில் 5 இல் மட்டுமே '10' மேற்கோள்கள் உள்ளன,
அடுத்த எண்ணான '9'-க்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் '9' மற்றும் '9' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை '8' மட்டுமே.
எனில்,
'8'-யை எடுத்துக்கொள்வோம்,
 '8' மற்றும் '8' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கையாக  '8' கட்டுரைகள் உள்ளன.
எனவே உங்களின் h-index '8' ஆகும்....
அடுத்து உங்களின் h-index '9' ஆக வேண்டுமென்றால், உங்களின் '9' மற்றும் '9'க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற '8' கட்டுரைகளுடன் சேர்த்து, இன்னுமொரு கட்டுரைக்கு, '9' அல்லது '9'க்கு மேற்பட்ட மேற்கோள்கள் கிடைக்கப்பெறவேண்டும்...