திங்கள், 1 ஜூன், 2026

இந்தக் கட்டுரையை ஞாயிறு அன்று வாசித்துவிடாதீர்கள்..

 கிரிஸ்டோபர் நோலனிடம் திறன்பேசி கிடையாதாம்.. அவர் ஒரு நேர்காணலில் சொல்கிறார்,

 

இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் க்யூஆர் குறியீடை கொடுக்கிறார்கள் அதனால் பெரிய சிக்கல் வருகிறது. அதுவும் கோவிட்டிற்கு பிறகு இந்த க்யூஆர் குறியீட்டின் பயன்பாடு அதிகமாகிவிட்டது.. என்னிடம் திறன்பேசியே கிடையாது, வெளியில் பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் ஒரு மடிப்பு அலைபேசியை வைத்திருப்பேன்.. அதில் தொடுதிரையோ, வேறு செயலிகளோ இருக்காது.. தொலைபேசியாக மட்டுமே பயன்படுத்தமுடியும்.. எனக்கு இந்த டிஜிட்டல்-சங்கிலிகளை (digital shackles) பிடிப்பதே இல்லை.. மேலும், எனக்கு கடிதங்களே அதிகமாக வருவதுண்டு.. கடிதத்தை வாசிப்பதே எனக்கு பிடிக்கிறது.. எனக்கு வரும் மின்னஞ்சல்களும், கடிதமாக அச்சடித்தே என்னிடம் வரும்.. (அந்த நேர்காணலில், நோலன் குறிப்பிட்டவற்றின் சாரம் மட்டுமே)

 

பாருங்கள், ஐமேக்ஸ் கேமராக்களை பயன்படுத்தி பல திரைப்படங்களை எடுத்தவர், அதுவும் ஒரு இண்டர்ஸ்டெல்லார் என்ற மிகச்சிறந்த திரைப்படத்தை கொடுத்தவர், இப்படி கூறுகிறார்.. காரணம் என்னவாக இருக்கும்..

 

அதேபோல, நான் என்ஐடி திருச்சியில் படித்தபொழுது, மாணவர்களாக நடத்தும் ஹரைசான் என்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்குகொண்டு பேச ஐஐடி சென்னையில் இருந்து பேராசிரியர் பிரதீப் அவர்களை அழைத்தோம்.. அவரிடம் அலைபேசியே கிடையாதாம் என்று அனைவரும் அன்று வியந்துகொண்டிருந்தனர்.. அன்று, அனைவரிடத்திலும் நோக்கியா 1100 புழங்கிய நாட்கள்.. பிற்பாடு நான் ஆய்வு மாணவனாக இருந்தபோதும் அவர் ஒரு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.. அப்பொழுதும், அவரிடம் ஒரு திறன்பேசிகூட கிடையாது என்பதாக சிலர் கூறினர்.. அந்த நாட்களில் என் கையில் எல்ஜி நிறுவனத்தின் மிடுக்கு திறன்பேசி குடிகொண்டிருந்தது.. என்னுடைய அண்ணன், சிங்கப்பூரில் இருந்து அதனை எனக்காக வாங்கிக்கொடுத்திருந்தார்.. அந்த திறன்பேசியில் ஒரு ஸ்டைலஸ் பேனாவும் இருந்தது.. அதனைக்கொண்டு அந்த தொடுதிரையில் என்னால் எழுதமுடிந்தது.. சப்பானில் இருந்து எலெக்ட்ரான் நுண்ணோக்கி ஒன்றை நிறுவ, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த ஒரு வல்லுனர், அந்த திறன்பேசியில், அவர் ஆசிலோஸ்கோப்பைவைத்து எலெக்ட்ரான் உமிழ்வானை அளந்துகூறிய எண்களை, நான் எழுதிவைத்ததைக்கண்டு வியந்தார்.. உன்னிடம் இப்படி ஒரு திறன்பேசியா..

 

ஒரு ஆய்வு மாணவனான என்னிடம் இருந்த அந்த திறன்பேசியை கூட வைத்திருக்காத, இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த அறிவியலாளர்களுள் ஒருவரான பேராசிரியர் பிரதீப் அவர்களைப் பார்த்து அன்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.. (நானோ) அதிநுண் அறிவியல் மற்றும் அதன் தொழிற்நுட்பத்தைப்பற்றி தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் நூலை எழுதியவர்.. தன்னுடைய நூலில் கட்டாயம் குறைகடத்திகள் பற்றியும், அதன் பயன்பாடுகளில் மிக முக்கியமான மிடுக்கு திறன்பேசிகளைப்பற்றியும், கரிம ஒளியுமிழ் சில்லுகள் பற்றியும், குவாண்டம் டாட்சின் ஒளி உமிழ்வு பற்றியும், மூர்ஸ் விதி பற்றியும் விவரித்திருப்பார்தானே.. பின்னேன் மனிதனின் கண்டுபிடிப்பில் மிகமுக்கியமான இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கிறார்.. என்றெல்லாம் வியப்பு கேள்வியாக பெயர்ந்தது..

 

இந்த கட்டுரையைத் தொடங்கி, இந்த வரியை நான் எட்டுவதற்குள் விசிலடித்து கூப்பிட்ட என்னுடைய திறன்பேசியின் திரையை ஏறத்தாழ ஐந்து முறை தொட்டுவிட்டு வந்துவிட்டேன்.. எவ்வளவு கவனச்சிதறல்கள்.. அதனையும் மீறி நம்மால் கவனமாக இருக்க முடியும்தான்.. ஆனால், அதற்கு மிகப்பெரிய பயிற்சி வேண்டும்.. அதற்கு கடினப்படுவதற்கு பதில், திறன்பேசியையே துறந்துவிட்டால்..!

 

தேவைக்கு பேசுவதற்கு நம்மிடம் அலைபேசியை மட்டும் வைத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று என்னால் இன்று சிந்தித்துக்கூட பார்க்கமுடியவில்லை..

 

ஃப்வீட்.. (விசில் சத்தம்)

வெயிட் வெயிட்.. ஏதோ குறுஞ்செய்தி வந்திருக்குறது, பார்த்துவிட்டு தொடர்கிறேன்..

..5 நிமிடம்

..10 நிமிடம்

..20 நிமிடம்

..30 நிமிடம்

ஒன்றுமில்லை, நேற்று இரவு கிண்டிலில் ஒரு புத்தகம் ஒன்றை வாங்கினேன், அதற்கான தொகை சரியாக 357 ரூ எடுக்கப்பட்டுவிட்டதற்கான குறுஞ்செய்திதான்..

 

ஃபௌண்டைன் பேனாவால் மை சொட்ட சொட்ட எழுதப்பட்ட நேரடிக்கட்டுரையின் டிஜிட்டல் வடிவம் இது.. இந்த கட்டுரை நேரடியாக உங்கள் கையில் சுடச்சுட கிடைத்திருந்தால், சற்று கையைவைத்து இழுத்து தெரிந்துகொண்டிருக்கலாம், கடைசி பத்தியில் இருக்கும் எழுத்துகளுக்கும், அதற்கு முன்னால் இருக்கும் பத்தியில் இருக்கும் எழுத்துகளுக்கும் இடையேயான கால இடைவெளியை..

 

தேங்காய் இல்லாமல் எப்படி தேங்காய்ச்சட்னி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை ஒரு கப், ரெடிமேட் தேங்காய் பவுடர் ஒரு கப்..

 

மேலுள்ள வரி உங்களை எரிச்சலூட்டியதுதானே.. ஏறத்தாழ முப்பது நிமிடங்கள், இப்படியான சம்பந்தமற்ற, தேவையற்ற தகவல்களைத்தான் தொடுதிரையில் பார்த்து கழித்தேன்.. ஆனால், எழுத்துகளாக டைவர்சன் ஒரு எரிச்சலை கொடுத்தாலும், காணொளியாக அது எரிச்சலை கொடுப்பதில்லை.. அதற்கு காரணம் டோப்பமைன் என்கிறது ஆய்வு.. டோப்பமைன் என்பது வெறும் மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் அல்ல, எதிர்பார்ப்பு, தூண்டுதல், மீண்டும் அதையே செய்யும் விருப்பம் ஆகியவற்றோடு தொடர்புடைய வேதிப்பொருள். நம்முடைய மூளை, ஏதோ ஒரு புத்துணர்வான, விறுவிறுப்பான ஒரு வஸ்துவை கண்டுகொள்வதற்கான தூண்டுதலுக்காக இந்த வேதிப்பொருள் அதிகமாக மூளையில் சுரக்கிறது.. இந்த தூண்டுதல் எதிர்பார்ப்பை அதிகமாக்கி, தொடர்ந்து அதையே செய்ய வைக்க, நாம் செய்யும் வேலையிலேயே நம்முடைய முழு ஆற்றலையும் செலவழிக்க வைக்கிறது.. கடைசியில், அந்த தூண்டுதல் வெற்றியடையாமல், ஒரு எரிச்சலையே தருகிறது.. ஏனென்றால், நாம் செய்த வேலை நமக்கு எந்த வெகுமதியையும் பெற்றுத்தரவில்லை.. இந்த வெகுமதியை தேடுவதற்கும் அதே டோப்பமைன்தான் காரணமாக அமைகிறது..

 

ஆனால், அந்த காணொளி வழி எளிதாக கிடைக்கும் ஒரு வித தூண்டல், மீண்டும் அதே வேதிப்பொருளுக்கான குழாயை தங்குதடையின்றி திறந்துவிடுகிறது.. மீண்டும் மீண்டும் ஸ்வைப்பிங்.. மீண்டும் மீண்டும் எரிச்சல்..

 

இதிலிருந்து மீள, நமக்கு பயிற்சி மிகமுக்கியம்.. வாசிப்பு எளிமையான வழி.. இசை, நடனம், விளையாட்டு.. என எதைவேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.. அதில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும்பொழுது, அந்த டோப்பமின் குழாய், எஸ் பெண்ட் வைத்து திருப்பப்பட்டு அந்த வேலைகளுக்கான காத்திருப்பிற்கு திறக்கப்பட்டுவிடும். ஆனால், நீண்ட பயிற்சி இதற்கு மிகமுக்கியம், அந்த பயிற்சியின் பொழுது, பேராசிரியர் பிரதீப் போல, இயக்குநர் நோலன் போல திறன்பேசிகளை நாம் துறக்க வேண்டும்..

 

முடியாதென்றால், குறைந்தது திறன்பேசி இல்லா ஞாயிறு என்ற முழக்கத்தை முன்னெடுக்கவேண்டும்.. நான் அதைத்தான் செய்யப்போகிறேன்.. வெறும் முழக்கம் மட்டுமல்ல.. வாரத்தில் ஒரு நாள், திறன்பேசி இல்லா கையுடன் கிண்டிலில் வாங்கிய கு.அழகிரிசாமி, கிராவுக்கு எழுதிய கடிதங்கள் என்ற நூலை வாசிக்கப்போகிறேன்..

 

சகா..

புதன், 27 மே, 2026

மரபும், மரபணுவும்

 “மரபணு சார்ந்த குறைகள் அதனால் ஏற்படும் நோய்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே.. அதையெல்லாம் ஏற்க இயலாது.. அது என்ன பிறப்பின் அடிப்படையில் சாதிபோல, பிறப்பின் அடிப்படையில் நோயா” என்று.. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு எழுதாளர், அதுவும் சாகித்ய அகாடமி விருது பெற்ற, மரபு சார்ந்த மருத்துவத்தை உயர்த்திப்பிடிக்கும் எழுத்தாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.. அதற்கான எதிர் கருத்தை வைத்ததும் அவரின் கோபத்திற்கு அன்று ஆளானேன்..


உண்மையில் மரபணு சார்ந்த, அதாவது பிறப்பால் ஏற்படும் நோய் என்று ஒன்று உண்டா என்றால், உண்டு என்பதே அறிவியல் தெரிந்தவர்கள் கூறுவார்கள். அதற்காக அதனை நாம் சாதியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சிறப்பானதாக இருக்காது. ஆனால், அந்த சாதிய பகுப்புமுறையும் இங்கு அந்த மரபணு சார்ந்த நோய்களை, குறைகளை தோற்றிவிக்க மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.

முதலில் மரபு பஞ்சாயத்தை தீர்த்துவிடலாம்..

தமிழர்கள் தன்னுடைய பாரம்பரியம், பண்பாடு போன்ற தொன்றுதொட்டு தொடரும் ஒரு நடைமுறையை மரபு என்று அழைக்கிறார்கள்.
அதே வேளை, ஜீன் எனக்கூறப்படுகிற சொல்லையும் மரபுடன் இணைத்து மரபணு என்று வழங்குகிறார்கள்.
மரபணு என்பது சிறப்பான மொழியாக்கம். இது தமிழின் மரபிற்கு கிடைத்த வெற்றி.. மரபணு என்று வழங்கப்படுவதன் நோக்கம், அது மீண்டும் மீண்டும் தொடர்வதால்தான்.. மரபு என்ற சொல்லின் பொருளை தாங்கிவருவதால், பண்பாட்டு மரபுக்ளுடன் இதனை கலப்பது, சிறந்த அறிவாகிவிடாது. ஆனால் பண்பாட்டு மரபுகள், இந்த மரபணுவில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளை, மரபு - பாரம்பரியம் - பண்பாடு என்பது ஒரு புறவெளியில் ஒரு குழுவாலோ, தனி மனிதனாலோ ஏதோவொரு காரணத்திற்காக செய்யப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டு, தொன்றுதொட்டு காரணம் அறியாமலேயே அதனை பின்தொடர்தல்... மரபும் ஒரு அறிவியல் இல்லையா என்றால், அதுவும் அறிவியல்தான்.. ஆனால், அறிவியல் தொடர்ச்சியற்ற, ஆரம்ப புரிதலுடன் நின்றுபோன ஒரு அறிவியல்.

எளிமையாக புரிந்துகொள்ள ஒரு ஒப்புமையை பார்க்கலாம்,

ஒருவரிடம் எழுதப்பட்ட காகிதத்தை கையில் கொடுத்து, அதனை பிரதி எடுத்து வர அனுப்புகிறீர்கள் என்றால், அவர் அதற்கான கடையைத்தேடி செல்வார்.. அப்படி ஒரு கடையை கண்டுபிடித்து, அதனை பிரதி எடுத்தும் வருவார்.. அடுத்தமுறையும் அவரிடம் அதே காகிதத்தைக்கொடுக்கிறீர்கள் என்றால், அவர் முன்பே கண்டுவிட்ட அதே கடையையே நாடுவார், பிரதியும் எடுத்துவருவார். இப்பொழுது, அந்த கடையில் இருக்கும் பிரதி எடுக்கும் கருவியில் ஏற்பட்ட சில பிரச்சனையால், இரண்டாவது வரியிலும், நாற்பதாவது வரியிலும் கறுப்பு மை அப்பிவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் இப்பொழுது, வேறு கடைக்கு சென்று பிரதி எடுத்தால் பிரச்சனை இல்லை, ஆனால், அதே கடைக்குதான் செல்வேன் என அடம்பிடித்து, பிரதியும் எடுத்து வருவார் என்றால் அந்த கறுப்பு மை அனைத்து பிரதிகளிலும் படர்ந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும். இப்பொழுது, அவரிடம், கறுப்பு மை படர்ந்திருக்கும் பிரதியை கொடுக்கிறீர்கள் என்றால்.. என்னவாகும்..!
பிரதியில் ஏற்கனவே கறுப்பு மை அப்பியிருக்கிறது, மீண்டும் அதே பிரச்சனையான கருவி.. இன்னும் சிக்கல் அதிகமாகும்தானே..

அதே மாதிரிதான், நம்முடைய மரபணுக்களும்.. தொடர்ச்சியாக அந்த மரபணுக்கள் வந்துகொண்டிருக்கும்பொழுது ஏதோவொரு காரணத்தால், (அது புறக்காரணியாக இருக்கலாம், அல்லது அகக்காரணியாகக்கூட இருக்கலாம்..) அந்த மரபணு தொடர்ச்சியில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த கறுப்பு மையாக அப்பியிருக்கும் சிக்கலானது, உறவுக்குள்ளே திருமணம் செய்யும்பொழுதோ, சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும்பொழுதோ, வெளிப்படும் நிகழ்தகவானது அதிகமாகும். அப்படி அந்தக்குறிப்பிட்ட சிக்கல் வெளிப்படும் பட்சத்தில், குறைபாடுகளும், நோய்களும் ஏற்படுகின்றன. இந்த நோய்களைத்தான் மரபணு சார்ந்த நோய்கள் அல்லது குறைபாடுகள் என்கிறார்கள்.
இந்தியாவில், அப்படியான பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன.. அதனால், மரபணு சார்ந்த நோய்களும் அதிகமாக காணப்படுகின்றன.

இதனை தன்னுடைய ஆய்வாக எடுத்து செய்துவரும் ஒரு ஆறிவியல் ஆய்வாளர்தான் முனைவர் கு. தங்கராஜ் அவர்கள்.. அவர் அறிவியலில் ஆற்றிய பணிக்காக, அவருக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டிருக்கிறது..

அவருடைய சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது என்றால், பொதுவாக இந்த அலோபதி மருத்துவமுறை என்பது ஐரோப்பிய மரபணுக்களின் அடிப்படையிலேயே மொத்த மக்களுக்கும் அணுகப்படுகிறது.. ஆனால், அவர்களின் மரபணுக்கள் போலவே உலகத்தில் வாழும் மற்றவர்களின் மரபணுக்களும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. குறிப்பாக, இந்தியாவில் எண்ணெற்ற புதிய மரபணுக்களை காணமுடிகிறது.. அதனால், இந்த தனித்துவம் வாய்ந்த மரபணுக்கள், அந்த ஐரோப்பிய மரபணுக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட மருந்துகளுக்கு சரியாக இயைந்துகொடுக்கும் என்று சொல்லமுடியாது. சிலவேளை, முற்றிலும் எதிரான விளைவு கூட ஏற்படலாம். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிற்கு உள்ளேயே, நிறைய வேறுபட்ட மரபணுக்கள் காணக்கிடைக்கின்றன.. திராவிடம், இந்தோ-ஐரோப்பியம் (ஆரியம்), பழங்குடி இனங்கள் (Dravidian, Indo-European, Tibeto-Burman, Austro-Asiatic, Tibeto-Burman tribe, Indo-European tribe, Dravidian tribe, Austro-Asiatic tribe, etc.) என பல்வேறுபட்ட இனங்கள் இந்தியாவில் வாழ்ந்துவருவதால், ஒரே மருந்துகூட, வெவ்வேறு மரபணுக்கள் கொண்ட இனங்களுக்கு வெவ்வேறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.



இதிலிருந்து என்ன தெரிகிறது,
மருத்துவம் ஒரு இனத்தின் கையில் இருக்கவேண்டும். மாநில அரசு இந்த ஆய்வை இன்னும் முடுக்கிவிட்டு, மக்களையும் அறிவியல் வயப்படுத்தவேண்டும். ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என்பதெல்லாம் எந்த அளவிற்கு ஏற்றதில்லையோ, அதே போல ஒரே மருத்துவமும் ஏற்றதல்ல.. personalized medicine – தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தின் தேவை அறிந்து, அதை நோக்கி அரசு ஆய்வுகளை நடத்தவேண்டும். அதற்கான வழிகாட்டுதலையும், பொருளாதார பங்கீட்டையும் மட்டுமே ஒன்றிய அரசு செயல்படுத்தவேண்டும்.

- சகா..

(Ref.,
https://www.nature.com/articles/d44151-026-00082-0
https://www.medrxiv.org/content/10.64898/2026.03.20.26348801v1
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D)

புதன், 6 மே, 2026

பீட்டா லேக்டம் வளையமும், அரசியலும்..

முதல் படத்தில் இருக்கும், பறக்கும் பட்டத்தைப்போல காட்சிதரும் மூலக்கூறு கட்டமைப்பை மட்டும் கொடுத்து, ஒரு கேள்வியை ஆங்கில இந்து நாளிதழில் நேற்று கேட்டிருந்தார்கள்..

பெனிசிலின் மற்றும் கார்பபெனெம் என்ற இருவேறு பாக்டீரியா கொல்லி மருந்துகளில் பொதுவாக காணப்படும் இந்த மூலக்கூறு கட்டமைப்பின் பெயர் என்ன? என்பதுதான்..


இந்த கட்டமைப்பின் பெயர் பீட்டா லேக்டம் வளையம் என்பதாகும்.. இரண்டாவது படத்தில் இந்த கட்டமைப்பு எவ்வாறு இரண்டுக்கும் பொதுவாக இருக்கிறது என்பதைக் காணலாம்.. இந்த குறிப்பிட்ட மூலக்கூறு கட்டமைப்புதான் பாக்டீரியாவின் செல்சுவரை உடைத்து, அதனை அழிக்க பெரும்பங்கு வகிக்கிறது..

பின்குறிப்பு: இந்த தகவலை பாக்டீரியாவிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்..

டேக் டைவர்சன்..

இந்த படங்களில் நீங்கள் பார்க்கும் மூலக்கூறுகளின் வடிவங்களை போடுவதற்கு இளங்கலை வேதியியல் படிக்கும்பொழுது பெரும்பாடு படவேண்டியிருந்தது.. முதுகலை பயிலும்பொழுது, கெம் டிரா என்றொரு செயலியின் அறிமுகம் கிடைத்தது.. அதன் உதவியுடன், எளிதில் பல வேதியியல் மூலக்கூறு வடிவங்களை வரையமுடிந்தது..

அந்த காலகட்டத்தில் ஓஎச்பியில் வரைந்து, அதனை சுவரின் மீது திரையிட்டு, ஆசிரியர்கள் பாடமெடுப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு மெடிசினல் கெமிஸ்ட்ரி பாடமெடுத்த பேராசிரியர் சுலோச்சனா அவர்கள், ஒவ்வொரு பாடவேளையின் பொழுதும் ஏறத்தாழ நூறு ஓஎச்பி தாள்களுடன் வகுப்பிற்கு வருவார்.. அவரின் சிரமத்தைக்கண்டு, அந்த ஓஎச்பி தாள்களை கையாடல் செய்து, அனைத்து மூலக்கூறு வடிவங்களையும் அப்பொழுதைய மாற்று அரசியல் பேசிய கெம் டிரா உதவிகொண்டு வரைந்து, பவர்பாய்ண்டில் போட்டுக்கொடுத்தேன்..

இப்பொழுதும் கெம் டிராவில்தான் வரைகிறேன்.. என்னுடைய ஆய்வு மாணவர்களும் அப்படிதான் செய்கிறார்கள், ஆனால், சிலர் இப்பொழுதெல்லாம் ட்ரெண்டிங்கான செயற்கை நுண்ணறிவின் உதவியையும் நாடுகிறார்கள்.. கடைசியில் ஒரே மூலக்கூறுதான்.. ஒரே வடிவம்தான்.. செய்முறை மட்டும்தான் எளிமையாகியிருக்கிறது..

எனவே மக்களே, நீங்கள் மாற்றமாக நினைப்பதுவும், இப்பொழுது வெறுத்து ஒதுக்கிய அதே வடிவத்தில்தான் இருக்கப்போகிறது என்பதை சொல்லிக்கொண்டு, வேதிவினையைத்தவிர, வேறு யாருக்கும் எந்த வினையும் செய்யாத என்னுடைய, இன்றைய அறிவியல் உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..

சகா...

புதன், 29 ஏப்ரல், 2026

அகலமாக அல்ல… ஆழமாக வளர்ந்தால் தான் ஒரு நாடு முன்னேறும்

 பொழுதுபோக்குவதற்காக என்றில்லாமல், உண்மையிலேயே எதன் மீதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று வரிசைப்படுத்திப் பாருங்கள்.. ஒரு நீண்ட அட்டவணையை கையில் வைத்திருப்பீர்கள்.. எனக்கும் அப்படித்தான்.. என் கையில் இருக்கும் அட்டவணையில், நான் எதில் சிறந்தவனாக இருக்கிறேன் என்றால், எதிலும் இல்லை..


இது என்னுடைய பிரச்சனை மட்டும் இல்லை, மொத்த தமிழர்களின், மொத்த இந்தியர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கொரியாவில், ஒருவன் வேதியியல் படிக்கிறான் என்றால், அதனை மட்டுமே சிந்திக்கும் படி, தன் மூளையை அவன் மாற்றிவைத்திருப்பான்.. குறிப்பாக அந்த வேதியியலில், பருப்பொருள் வேதியியல், அதிலும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் சிலிக்கானை பயன்படுத்தும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் ஒற்றை படிம சிலிக்கான்.. என மிக நுண்ணிய ஒரு பகுதியில், அனைத்து நுணுக்கங்களையும் அறிந்துவைத்திருப்பார்கள்..

அவரிகளிடம், படிகமற்ற சிலிக்கானைப்பற்றி கேட்டாலோ, சிலிக்காவைப்பற்றி கேட்டாலோ, தெரியாது என்று சட்டென கூறிவிட்டு கடந்துவிடுவார்கள். எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபொழுதும் வருவதே இல்லை.

ஆனால், நம்மவர்களுக்கு, ஒரு மணிநேரமும், வாசிக்க ஒரு பக்கத்தையும் கொடுத்துவிட்டால், அந்த பக்கத்தில் என்ன இருந்தாலும் அதில் தனக்கென ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்.

கொரியாவில், ஒரு தனிப்பட்ட கொரியனை நீங்கள் சந்தித்து உரையாற்றுகிறீர்கள் என்றால், இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி இவர்கள் இவ்வளவு பணக்கார நாடாகவும், என்னெற்ற தொழிற்நுட்பம் கொண்ட நாடாகவும் உருவாகியிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயம் சந்தேகிப்பீர்கள்.. ஆனால், அந்த ஒரு கொரியனின் துறையை அறிந்துகொண்டு, நம்மூரில் அதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஒருவருடன் உரையாட வைத்தீர்கள் என்றால், உங்களுக்கு புரியும் அந்த கொரியனின் உண்மையான திறமை..

நாம் நிறைய தெரிந்துகொள்கிறோம், ஆனால் நுனிபுல்லை மட்டுமே அசை போட விரும்புகிறோம்.. ஆனால் அவர்கள் ஒற்றை துறையில் தங்களின் முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள். அப்படியே, பலரும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொழுது, மொத்த நாடும் வளர்ச்சி அடைகிறது.

ஒரு துறை தேர்வு
        ↓
அதன் உட்பிரிவு தேர்வு
        ↓
அதிலும் மிக நுணுக்கமான பகுதி
        ↓
அதிலேயே முழு கவனம்
        ↓
ஆழமான நிபுணத்துவம்

ஆனால், நாம் ஒற்றைத்துறையில் நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சூழலோ, அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களோ இந்தியாவில் இருக்கிறதா..!

இந்தியாவில் இப்பொழுது அடிப்படை அறிவியலுக்கு போதுமான பணத்தை ஒதுக்குவதே இல்லை.. ஆயிரம் ஆய்வு செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டால், அதில் அதிகபட்சம் நூறு செயல்திட்டங்களுக்குக் கூட பண உதவி கிடைப்பதில்லை. அணுக்கரு ஆய்விலோ, ஆற்றல் சம்பந்தமான ஆய்வுகளிலோ, இயற்கை அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் போன்றவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை.

அடிப்படை அறிவியலுக்கு குறைந்த நிதி
        ↓
ஆய்வு வாய்ப்புகள் குறைவு
        ↓
அரசு திட்டங்கள் – Trend அடிப்படையில்
        ↓
ஆய்வாளர்கள் திணிப்பு
        ↓
நிலையான வளர்ச்சி இல்லை

அறிவியல் துறையில் அடிப்படை அறியாமல், எந்த தொழில்நுட்பத்தையும் நாம் கண்டறியும் வாய்ப்பு குறைவே.. உலகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதை நோக்கியே ஓடவேண்டும் என்பதற்காக, மொத்த அரசு சார்ந்த திட்டங்களும் அதற்கு மடைமாற்றப்படுகின்றன. ஆய்வு நிறுவனங்களும், அதற்குள் ஒன்றிக்கொள்வதற்காக, ஏற்கனவே நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, புதிய திட்டத்திற்கு செல்வதற்கு ஆய்வாளர்களை நிர்பந்திக்கிறார்கள்.

அடிப்படை அறிவியல் இல்லை
        ↓
புதிய தொழில்நுட்பம் இல்லை
        ↓
மற்ற நாடுகளை பின்தொடரும் நிலை

ஆனால் பெரும்பாலான நாடுகள் அப்படி செய்வதில்லை, அடிப்படை அறிவியலுக்கு செய்துகொண்டிருக்கும் செலவை குறைக்காமல், புதிய திட்டங்கள் வகுக்கப்படும்பொழுது, கூடுதல் பணத்தை அதற்கு ஒதுக்குகிறார்கள்..

அடிப்படை அறிவியல் அற்ற சமூகம் எதை உருவாக்கும், நல்ல வேலையாட்களையும், அடிமைகளையுமே உருவாக்கும். அதனால் நாம் இனியாவது, எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை விடுத்து, ஒற்றை துறையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய மொத்த ஆற்றலையும் செலவு செய்து, கற்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது இன்னொரு ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய், போஸ், ராமன், ராமசந்திரன், சந்திரசேகர், இராமானுஜம் உருவாக வேண்டும்..

சகா..

புதன், 8 ஏப்ரல், 2026

ஆர்டிமிஸ் 2 - விக்டரின் செய்தி

 நிலவை சுற்றிவந்து, இப்பொழுது பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஆர்டிமிஸ் 2 விண்கலன், நாளை காலை (ஏப்ரல் 10, 2026) இந்திய நேரம் 05:37 போல பசுபிக் பெருங்கடலில் தரையிறங்கப்போகிறது.. அந்த விண்கலத்தில் பயணப்பட்டவர்களில் ஒருவரான விக்டர், பூமியில் இருக்கும் நமக்கு கொடுத்த ஒரு முக்கிய செய்தியை கீழே தமிழில் மொழிமாற்றி கொடுத்திருக்கிறேன்..

அனைத்து விண்வெளி வீரர்களும் நாளை நலமுடன் திரும்ப இயற்கை துணைபுரியட்டும்..



“நாங்கள் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கும் பூமியிலிருந்து மிகவும் தொலைவில், ஒரு விண்கலத்தில் இருக்கிறோம். இது மிகப் பெரிய சாதனை என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், நீங்களும் ஒரு விண்கலத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். அந்த விண்கலத்தின் பெயர் பூமி. இந்த பரந்துபட்ட பிரபஞ்சத்தில் வாழ நமக்காக உருவாக்கப்பட்ட ஓர் இடம் அது.

நாங்கள் இவ்வளவு தொலைவிற்கு (4,06,771 கிமீ வரை) பயணப்பட்டு வந்திருப்பதால், இந்த பயணம் சிறப்பானதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோமோ, அதே தொலைவில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். எனில், நீங்களும் ஒரு சிறப்பான பயணத்தைதான் மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த பரந்துதுபட்ட வெற்றிடத்தில், நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள். வெறுமை மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு அழகான சோலை போல. அப்படியான சோலைதான் நாம் அனைவரும் ஒன்றாக வாழும் இடம்.

ஈஸ்டர் ஞாயிறு நெருங்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதை கொண்டாடினாலும் இல்லையென்றாலும், நீங்கள் கடவுளை நம்பினாலும் இல்லையென்றாலும், இது ஒரு முக்கியமான சிந்தனைக்கான நேரம்.
நாம் எங்கே இருக்கிறோம், நாம் யார் என்பதைத்தாண்டி நாம் எல்லோரும் ஒன்றே என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.
இந்த பயணத்தை நாம் ஒன்றாகத்தான் கடக்க வேண்டும்.”

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தொடரும் ஆய்வுப்பணி..

இந்த ஆண்டின் உங்கள் ரிசொலியூசன் என்ன என்று கேட்டார் ஒரு மாணவர்.. அப்பொழுது இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டு பிறந்திருந்தது.. எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லாமல், இந்த ஆண்டாவது நான் முனைவர் பட்ட ஆய்வை முடித்துவிடவேண்டும் என கூறினேன்..
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் என்னால் முடிக்கமுடிந்தது..

நான் ஆய்வகத்தில் உருவாக்கிய மெட்டீரியல்ஸ் பல நாடுகளுக்கு பறந்துசென்றிருந்தது.. குறிப்பிட்ட சில கருவிகளைத்தவிர ஏனையவற்றை நான் எங்கோ யாரிடமோதான் உதவியாக கேட்டு பெறமுடிந்தது.. இந்தியாவிற்குள் கூட TIFR, AIIMS, IISc, IITM என பல ஆய்வு நிறுவனங்களையும், TA instruments, Bruker, Micromeritics, Perkin Elmer, Agilent போன்ற ஆய்வு கருவிகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களையும் சார்ந்து இருக்கவேண்டி இருந்தது..

சுருக்கமாக சோல்லவேண்டுமானால், காந்தத்தன்மை வாய்ந்த சிலிக்காவை, 7 நானோமீட்டர் துளைகளுடன் உருவாக்கி அதன் உட்புறத்தில் புற்றுநோய்க்கான மருந்தை புற தூண்டல் மூலம் (எக்ஸ்டர்னல் ஸ்டுமுலய்) வெளியேறுவது போல வைத்து வெளிப்புறத்தில், புற்று நோயை சரியாக கண்டறிந்து, அதனை சென்றடைவது என்றவாறு வேதியியல் மாற்றம் செய்யப்பட்டது. பிற்பாடு சில காரணங்களுக்காக 7 நானோமீட்டர் துளைகளின் சுவர்கள் எங்கும் 1-2 நானோமீட்டர் அளவுள்ள துளைகள் உருவாக்குவது என முடிவு செய்து, அதுவும் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது..

மூன்று கோணங்களில் இந்த மெட்டீரியலை ஆய்வு செய்யவேண்டியிருந்தது.
1. மெட்டீரியல் சரியாக உருவாக்கப்பட்டிருக்கிறதா?
2. துளைகளுக்குள் உட்பொதிக்கப்பட்ட, காந்தப்புலம் கொடுக்கும் இன்னொரு பொருளான அயர்ன் ஆக்ஸைடு வெளியில் வராமலும், அதே வேளை சரியாகவும் வேலை செய்கிறதா?
3. இன்விட்ரோ என்று சொல்லப்படுகிற, எந்த ஒரு உயிரியல் சூழலின் சார்பற்ற நிலையில் (Cell viability, Bioimaging, in-vitro MRI imaging) அந்த மெட்டீரியல் எவ்வாறு தீங்கிழைக்காமல் வேலை செய்கிறது? இன்வைவோ எனப்படுகிற ஒரு உயிர்ச்சூழலில், ஒரு மாதிரி விலங்கின் உட்புறத்தில் (Biodistribution, Biocompatibility, Tissue compatibility, in-vivo MRI imaging, Theranostics) எவ்வாறு தீங்கிழைக்காமல் செயல்படுகிறது?

இவற்றை எல்லாம் செய்துமுடிக்க அன்றைய காலகட்டத்தில் எங்களிடம் பெரும்பாலான கருவிகள் கைவசம் இல்லை. என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளரும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலரும் உறுதுணையாக என்னை ஆதரித்ததன் விளைவால், பல ஊர்களுக்கு பயணப்பட்டேன்.. TEM, BET, 29Si NMR, MRI, VSM, ICPMS, SAXS என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்..

மும்பையில் தங்கி ICPMS எடுத்தபொழுதும், பெங்களூரில் தங்கி TGA, DSC எடுத்தபொழுதும் ஒரு நாள் கூடுதலாக தங்கி அந்தந்த கருவிகளை தனியாக இயக்க கற்றுக்கொண்டது, இதுநாள் வரையில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.. AIIMSக்கு சென்று விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு MRIஐ பயன்படுத்த கற்றுக்கொண்டபொழுது, யாரிடமும் சொல்லாமல் ஆக்ராவிற்கு சென்று தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு திரும்பியது எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது..

நான் என்னதான் இந்தியா முழுவதும் இதற்காக சுற்றித்திரிந்தாலும், என்னுடைய மெட்டீரியல்ஸ் அதனையும் தாண்டி நாடு நாடாக சுற்றித்திரிந்தது.. என்னைவிட என் மெட்டீரியல்ஸ்தான் அதிகமாக தன்னை விளங்கிக்கொள்ள பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன்..

எல்லாம் முடிந்து, ஒருவழியாக ஆய்வறிக்கை முடித்து அனுப்பியவுடன் காத்திருந்தது இன்னொரு சோதனை.. ஆமாம், 300க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அந்த ஆய்வறிக்கை, பரிசோதனைக்காக சென்று சேர்ந்த இடம் ஐஐடி கல்கத்தாவில் பணியை நிறைவு செய்யும் நிலையில் இருந்த பேராசிரியரின் கையில்.. அவர், வைவாவிற்கு வந்திருந்தபொழுது சொன்ன முதல் சொல், இன்னொரு ஆய்வறிக்கை இருந்தால் எனக்கு அனுப்பிவை, என்னுடைய மனைவிக்கும் ஒரு தலையணை வேண்டுமாம் என்றார்..

ஆனால் அந்த வைவா எனக்கு ஆய்வின் மீதான தாகத்தை குறைந்திருந்தது.. வேறு ஏதேனும் செய்யலாமே தவிர எதற்கு மேலும் ஆய்வுப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது அந்த ஐஐடி பேராசிரியரின் கேள்விகள்.. பெருங்கூட்டத்தின் மத்தியில், என்னுடைய ஆய்வறிக்கையிலிருந்து ஒரு கேள்வியை கூடவா அவரால் எடுத்துவைக்கமுடியவில்லை என பெருத்த ஆதங்கம் என்னுள் தேங்கத்தொடங்கியது.. கண்களிலும் அது வெளிப்பட்டது, யாருமில்லா தனியரங்கில்.. இருந்தாலும் அவர் கேட்ட மிகவும் எளிமையான கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டதற்கு காரணமும் இருந்தது, அது அவரின் ஸ்லாங்.. அவரின் ஆங்கிலம், பெங்கால் சாயலில் இருந்தது.. அப்பொழுது எனக்கு பீடித்த பதட்டமும் என் காதுகளை இறுக்கமாக அடைத்துக்கொண்டது.. பல ஆண்டுகளாக என் தூக்கத்தையும், என் உணவுகளையும், மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் பறித்துக்கொண்ட அந்த முனைவர் பட்டம், என்னை வந்து அணைக்கையில்,  அவ்வளவாக அது மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை..

இருந்தும், காலம் என்னை ஆய்வுப்பணியிலேயே தொடர நிர்பந்தித்தது.. இதோ தொடர்ந்துகொண்டிருக்கிறேன், வெற்றியும் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.. ஆனால், திருப்தி அடைந்தேனா என்றால்.. இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும்.. இந்த 2008 முதல் 2025 வரையான ஆய்வுப்பணி, எனக்கு பல மனிதர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது, பலவற்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.. என்றோ கற்றுக்கொண்ட பாடங்கள் இன்றும் எனக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன, நானும் பலருக்கு முகம் சுளிக்காமல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.. கற்றுக்கொள்ளுவதைவிட, கற்றுக்கொடுப்பது ஒரு மகிழ்ச்சியை உணரவைத்திருக்கிறது.. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை நிம்மதியாக இருக்கவிடமறுக்கிறது.. அது என்ன என்பதை இப்பொழுது ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறேன்..


- சகா..
04/01/2025 

புதன், 18 ஜூன், 2025

அறிவியல் பேசுவோம்#02: கள்ளு vs பதனீர்


இன்று அதிகாலையில், ஏணிப்படிகள் இல்லா, பனைமரம் ஏறிக்கொண்டிருந்த வேளையில் திடீரென கீழே விழுந்துவிட்டேன்… விழித்துப்பார்த்தால், படுக்கையிலிருந்து கீழ்விழுந்திருக்கிறேன்.. இதென்ன எனக்கு வந்த சோதனை என சமூக ஊடகங்களை கண்ட பின்தான் தெரிந்தது, எனக்கு கொடுக்கப்பட்ட இன்றைய கேள்வித்தாளில், ஒரே கேள்வியாய் இருந்தது, “பனை மரம் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக” என்று.

தென்னை மரம், மாடு கதை போலத்தான்.. நானும் மாட்டைப்பற்றி, அதாவது அறிவியல் பற்றிதான் ஓரளவிற்கு தெரிந்துவைத்திருக்கிறேன். அதனால், அதைப்பற்றி எழுதிவிட்டு, இப்படிப்பட்ட மாடு அந்த மரத்தில் கட்டப்படுகிறது என்றே முடிக்கப்போகிறேன்..

கள்ளு, பதனீர்… நல்லதா? இதற்கான வேறுபாடு என்ன? எது சிறந்தது? இன்றைய சாராயத்திற்கு சிறந்த மாற்றா கள்ளு? அரசு ஏன் அதனை தடை செய்யவேண்டும்? இதற்கு பதில் கிடைக்குமா இந்த கட்டுரையில் என நினைத்து வாசிக்கத்தொடங்கினால், தக் லைஃப் படம் போல்தான் ஆகும். எனவே, எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாசிக்கத்தொடங்குங்கள்..

வாசிப்பு எனக்கு பிடித்த ஒன்று என்பதால், நான் பல வாசிப்பு பற்றியான குழுக்களில், பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பயணிக்கிறேன். அங்கெல்லாம், ‘கள்ளு என்பது நம் மரபு, அதனையும் தாண்டி அதில் உடல் நலக்கேடு என்பது இல்லை, சாராயம் குடிப்பதற்கு பதில் அதைக் குடிக்கலாம், அரசு அதனை ஊக்கப்படுத்தவேண்டும்’, என்று பல பதிவுகளைக் காண முடிந்தது இன்னும் ஒரு படி மேலே, கள்ளுண்ணாமை என்பதை வள்ளுவர் கூறினார், ஆனால் அது பனங்கள்ளு அல்ல, அது வேறு வகையான சரக்கு என பல தரவுகளையும் காண்பிக்கிறார்கள்.

சரி, இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அறிவியல்தான்.. வேறென்ன..

சிறுவயதில், என்னுடைய கிராமத்து சாலைகளில், பதனீ.. பதனீஈஈயேஏ…. என்று ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தையோ, மண் பாண்டத்தையோ மிதிவண்டியின் பின் வைத்துக்கொண்டு விற்றுக்கொண்டு செல்வார்கள்.. சில வயதானவர்கள், பெண்கள், நடந்து பதனீரை விற்று செல்வதை பார்த்திருக்கிறேன்.. அவ்வப்பொழுது, அம்மா என்னை வாங்கிவரச்சொல்லி, என்னையும் குடிக்கச்சொல்வார்கள்.. உடம்புக்கு ரொம்ப நல்லதுடா என்ற அவர்களின் அறிவுரையை கேட்டுக்கொண்டே குடித்திருக்கிறேன்…

ஆனால் வரலாற்றை கவனித்தால், கள்ளுக்கடையில் வாழ்க்கையை தொலைத்த பல குடும்பங்களின் கதை தமிழ்நாட்டில் உண்டு, கள்ளுக்கடைகளுக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட்ட மக்களை மாற்றி, நல்வாழ்வு வாழ வைக்கும் பொருட்டு, பலர் கள்ளுண்ணாமையை எடுத்தியம்பினர். கள்ளு இறக்கப்படுவதை தவிர்க்க, பனைமரங்களை வெட்டிய வரலாறும் தமிழ்நாட்டில் உண்டு. (அது சரியான நடைமுறையா என்றால், இல்லை என்பதே என்னுடைய பதில்.. அதற்கான உரையாடலை தனியாக வைத்துக்கொள்ளலாம்..)

கள்ளு vs பதனீர்

சுண்ணாம்பை கலயத்தில் தடவி, பனைமரத்திலிருந்து இறக்கினால் அது பதனீர் என்றும், சுண்ணாம்பு தடவாமல், அப்படியே எடுத்து, பயன்படுத்தினால் அதனை கள்ளு என்றும் கூறுகிறார்கள். அப்படி சுண்ணாம்பு என்ன செய்கிறது.

பனைமர பாலையிலிருந்தோ, நுங்கு தண்டிலிருந்தோ வடியும் திரவத்தில் பல்வேறுபட்ட வேதி மூலக்கூறுகளும், நுண்ணியிரிகளும் இருக்கும். நுண்ணியிரிகள் என்றால் பாக்டீரியா, பூஞ்சை என அனைத்தும் அடங்கும். அந்த திரவம், சொட்டு சொட்டாக பானையில் விழும் நொடியிலிருந்து, நொதிக்கத் தொடங்கிவிடும். நொதித்தல் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. அது ஒரு பால் தயிராகும் நிகழ்வு போலோ, இட்லி மாவு புளிக்கும் நிகழ்வு போலோதான்.

அந்த நொதித்தலை நிகழ்த்துவது, அந்த திரவத்தில் இருக்கும் நுண்ணியிரிகள்தான். இந்த நிகழ்வில், அந்த திரவத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை மூலக்கூறுகள், ஒருவேளை கூட்டு சர்க்கரையாக இருப்பின் ஒற்றை சர்க்கரைகளாக உடைபடும். பின் அந்த சர்க்கரை, ஆல்கஹாலாகவும் (எத்தனால்), கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றம் அடையும். எனில், கலயத்தில் வடியும் முதல் சொட்டிலேயே இந்த நொதித்தல் நிகழ்வு தொடங்கிவிடும், மாத தவணையில் அடைக்கப்படும் கடனில் வட்டி இணைவது போல, நொதிதல் நிகழ்வும், வடியும் ஒவ்வொரு சொட்டுகளிலும் நிகழும்.

அந்த கலயத்தை இறக்கி, அதனை வடிக்கட்டி, ஒரு பாத்திரத்தில் சேகரிப்பார்கள். அந்த பாத்திரத்திலும், தொடருந்து நொதித்துக்கொண்டே இருக்கும். இதற்கு தமிழர்கள் தம்முடைய மரபில் வைத்திருக்கும் பெயர் புளித்தல். இது மிகச்சரியான பெயர்.. ஏனென்றால், நொதிதல் நிகழ்வில் அதிகப்படியான அமிலங்கள் உருவாகும். கார்பன் டை ஆக்சைடு வாயுவும் கூட நீருடன் சேர்ந்து கார்போனிக் அமிலமாக மாறி, அமிலத்தன்மையை உருவாக்கும் (CO2 + H2O à H2CO3). முதல் வினாடியிலிருந்து நொதிக்கத்தொடங்கியவுடன் உருவாகும் எத்தனால், நுண்ணுயிரிகளின் ஆசியுடன், மேலும் ஆச்சிசனேற்றம் அடைந்து அசிட்டிக் அமிலமாக மாறும். அதனால்தான், கள்ளு இறக்கிய நேரத்திலிருந்து குறிப்பிட்ட நேரம் வரை அதில் ஆல்கஹால் அதிகரிக்கும், பின் ஆல்கஹாலின் அளவு குறையத் தொடங்கும். குறைந்தது 4-5% முதல் அதாவது ஒரு பியரில் இருக்கும் ஆல்கஹால் அளவிலிருந்து அதிகபட்சம் 10-15% வரை ஆல்கஹாலானது அதிகரிக்கும் (நொதிப்பிற்கு தேவையான நுண்ணியிர்களின் அளவை பொறுத்தது), பிறகு அந்த அளவு குறையத்தொடங்கும். இதனை எளிதில் கண்டறிய, அதனுடைய அமிலத்தன்மையை அதாவது புளிப்புத்தன்மையை ஆராய்ந்தால் போதும். (பூஞ்சை – ஈஸ்டானது இரட்டை/கூட்டு சர்க்கரைகளை ஒற்றை சர்க்கரைகளாக மாற்றும், பின் கிளைக்கோலைசிஸ் நடைபெறும் – பின் பாக்டீரியாவிலிருந்து உருவான நொதிகள் – அந்த சர்க்கரையை எத்தனாலாகவோ, பிற வேதி பொருட்களாகவோ மாற்றும் – நொதித்தலின் கடைசி நிலையாக எத்தனால் – அசிட்டிக் அமிலமாக மாறும்)

கலயத்தில் சுண்ணாம்பைத்தடவி அந்த வடிநீரை சேகரிக்கும்பொழுது, அந்த சுண்ணாம்பின் வேதியியல் பண்பிற்கு தகுந்தாற்போல, வேதிவினைகள் நடைபெறும். மரபு சார்ந்து பார்த்தால், பதனீருக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பானது, நீர்வாழ் உயிரிகளின் ஓடுகளிலிருந்து பெறப்படுவதால், அதில் அதிகப்படியான கால்சியம் கார்பனேட் இருக்கும். இந்த கால்சியம் கார்பனேட் நீரில் கரையாத கனிம உப்பு. உப்பு என்றால், அமிலமும் காரமும் இணைந்து உருவாகும் கலவை. (எகா: சோடியும் குளோரடு நமக்கு தெரிந்த உப்பு – அதில் சோடியம் ஹைட்ராக்சைடு என்பது காரம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் – அமிலம்: NaOH + HCl à NaCl).

இந்த கால்சியம் கார்பனேட், நீருடன் அவ்வளவு எளிதில் வினைபுரிவதில்லை, ஆனால் பனை நீரானது அதில் படுகையில், இரண்டு வகையில் வினைக்கு உட்பட வாய்ப்புள்ளது. ஒன்று, இந்த கால்சியம் கார்பனேட், பஃபராக (Buffer - கார அமில நிலைப்படுத்தி) செயல்பட்டு நொதிக்கும் நிகழ்வை கட்டுப்படுத்தும். இரண்டு, நொதித்தலின்பொழுது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு உதவியுடன், நீருடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட் என்ற நீரில் கரையும் உப்பை உருவாக்கும். இந்த நீரில் கரையும் உப்பு, முன்பு குறிப்பிட்டது போல ஒரு கார அமில நிலைப்படுத்தியாக செயல்படும்.

(CaCO3 + H2O + CO2 à Ca(HCO3)2)

பொதுவாக, ஒரு நொதித்தல் நிகழ்வின்பொழுது அதிக்கப்படியான கரிம அமிலங்கள் உருவாகும், அந்த அமிலங்கள்தான், ஆல்கஹால் உருவாக்கத்திற்கும், தொடர்ந்து நொதித்தல் நிகழ்வை செயல்படுத்தவும் காரணமாகின்றன. அந்த அமிலம், வடிநீரில் ஒரு அமிலத்தன்மையை உருவாக்கும், அதனை இந்த கால்சியம் கார்பனேட் மாற்றியமைக்கும். எனவே நொதித்தல் தடைபடுகிறது, ஆல்கஹால் உருவாக்கம் நடைபெறுவதில்லை.

இப்பொழுது இந்த அறிவியலின் வழி, கள்ளு/பதனீரின் நன்மை தீமைகளை பார்ப்போம்..

கள்ளோ, பதனீரோ, எதுவானாலும் அதில் பல்வேறு உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கின்றன. அதாவது, வைட்டமின்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆற்றலை கொடுக்கவல்ல கார்போ ஹைட்ரேட், நுண்சத்துகளான, பொட்டாசியம், கால்சியம், சோடியம், நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் என பல இருக்கின்றன. அதே வேளை தீமையை கொடுக்கும் நுண்ணியிர்களும் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக, நொதித்தல் நிகழ்வானது, அது நிகழும் மொத்த நேரத்தைப்பொறுத்து அதில் பல்வேறு சத்து இழப்பானது நிகழ்கிறது. நொதிக்கும் நேரம் அதிகமாக அதிகமாக, எத்தனால் அதிகமாகிறது, அதே வேளை வைட்டமின்களின் அளவுகள், கார்போ ஹைட்ரேட்டின் அளவுகள் குறைகின்றன.

எனில் பதனீர், கள்ளை விட சிறந்தது எனலாம்.

இப்பொழுது அறிவியல் கொண்டு, சமூக சிக்கல்களையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்..

1.   என்னதான் பல நன்மைகள் இந்த கள்ளிலும், பதனீரிலும் இருந்தாலும், அந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு, மற்ற வெகு சாதாரண உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் கிடைக்கப்பெறும். அவ்வளவு ஏன், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். எனவே அந்த குறிப்பிட்ட சத்துகளுக்காகவேண்டி, கள்ளை தேடிப்போக அவசியம் இல்லை.

2.   என்னதான் பதனீர் நல்லது என்றாலும், அதிலும் பல பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, அதில் செய்யப்படும் கலப்படம், அதீதமாக பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு, சுண்ணாம்பில் இருக்கும் கழிவுகள், திரந்த பரப்பில் தயாரிக்கப்படும்பொழுது ஏற்படும் சுகாதார பிரச்சனை, கெடுதல் விளைவிக்கும் நுண்ணியிரிகளின் இருப்பு என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

3.   பதனீர் இறக்க தடையென்றால், எப்படி நமக்கு கருப்பட்டியும், பனக்கற்கண்டும் கிடைக்கும்!

4.   பதனீரில் இருக்கும் பிரச்சனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றிலும் இருக்கத்தானே செய்யும் என்றால், இல்லை.. ஏனெனில் அவற்றை நன்கு கொதிக்கவைத்தே உருவாக்குகிறார்கள், மேலும், அதனை பயன்படுத்தும்பொழுதும் நாம் நன்கு கொதிக்கவைத்துவிடுகிறோம் அதனால், அதில் உள்ள சிற்சில பிரச்சனைகள் நீங்கி, நன்மை மட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால், கள்ளு/பதனீரில் அப்படியல்ல.. நேரடியாக உட்கொள்கிறோம்.

5.   இப்பொழுது இருக்கும் செயற்கை சாரயத்திற்கு மாற்றாக கள்ளை முன்னிலைப்படுத்தும் சிந்தனையாளர்கள், ஏன் கள்ளில் உள்ள சமூக பிரச்சனையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? கள்ளு இறக்கும் கடினமான நடைமுறை (அனைத்து பனைமரங்களிலும் ஏணிப்படிகளை அமைத்து, அனைத்து கருக்குகளையும் நீக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது), அந்த வேலையை செய்யும் ஒரே சாதி நடைமுறை, அதிக தேவை ஏற்பட்டால் அதிகமாகிவிடும் கலப்படம், சுகாதாரமற்ற செய்முறை என பலவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். கள்ளு இறக்கும் தொழில் செய்யப்போகிறேன் என உங்களின் மகனோ, மகளோ கூறினால், அதனை ஆதரிக்கும் செயல்பாட்டாளர்கள் யாரும் இருப்பார்களோ!

6.   மனிதன் ஒரு போதை விரும்பி – இந்த சமூக சிக்கலை தீர்ப்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், உடல் வலிக்காக போதையை நாடி செல்பவர்கள் மீதுமட்டும்தான் நம்முடைய கண்கள் பெரும்பாலும் துடிக்கின்றன. அவர்கள் உடல் நலத்திற்காகவும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அரசு ஒரு நடைமுறையை கையாளவேண்டும். நட்சத்திர விடுதியில் கிடைக்கும் தரமான சாராயம், எளிய மக்களுக்கும் கிடைக்கசெய்யவேண்டும். அந்த சாராயத்தில், எத்தனாலின் அளவை குறைத்து, புரதம், மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும்வண்ணம் அதனை முறைப்படுத்தவேண்டும்.

7.   கள்ளு ஒரு போதைப்பொருளே, அது என்றும் இப்பொழுது விற்கப்படும் சாராயத்திற்கு மாற்றாகாது. ஆனால், இந்த சாராயத்துடன், கள்ளும் விற்கப்படவேண்டும். ஆனால், அதன் தயாரிப்பை முறைப்படுத்தி, சந்தைக்கு கொண்டுசெல்லவேண்டும்.

8.   ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு போதை பொருள் இருக்கவே செய்கின்றன. அரிசியில், பார்லியில், பனையில், தென்னையில், ஈச்சையில், கோதுமையில், பழங்களில், என பலவற்றிலிருந்தும் ஆல்கஹாலை/போதைப்பொருளை உலகம் முழுவதும் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அனைத்திற்கும் உரிமை உண்டு ஆனால், பனைக்கு மட்டும் இல்லை என்பது வேடிக்கையானது. அதனால், அதனை முறைப்படுத்தி, தரச்சான்றிதழ் கொடுத்து அனுமதிக்கவேண்டும்.

9.   ஒரு நாளில் கெட்டுவிடும் இந்த கள்ளை அதிக நாட்களுக்கு எப்படி கெடாமல் வைக்கலாம், எப்படியான வேதிவினைகள் நிகழ்கின்றன, எப்படி தரத்தை உயர்த்தலாம் போன்ற அறிவியல் ஆய்வுகளை நடத்த அரசு முன்வர வேண்டும்.

10. இந்த ஆய்வுகளுக்கு GC-MS, LC-MS, LC-MS-MS, MALDI-TOF, ICP-MS, XRF/XPS போன்ற பொறிகள் அவசியமாதலால், அதனை பெற ஆய்வாளர்களுக்கு பண உதவியையும் செய்துகொடுக்கவேண்டும், அரசு. (GC-MS: எளிதில் ஆவியாகும் அதே வேளை, வெப்ப நிலைப்புத்திறன் இருக்கும் மூலக்கூறுகளை அறிய; LC-MS/LC-MS-MS: எளிதில் ஆவியாகாத, வெப்ப நிலைப்புத்திறன் இல்லாத, ஆனால் கரையும் தன்மையில்/போலாரிட்டி குறியீட்டில் வேறுபாடு இருப்பின் அந்த மூலக்கூறுகளை அறிய; MALDI-TOF: நிலைபுத்தன்மையும் இல்லாமல் மிகப்பெரிய மூலக்கூறாகவும் இருக்கும் மூலக்கூறுகளை அறிய; ICP-MS: தனிமங்களை அறிந்துகொள்ள; XRF/XPS: வெளிப்புற தனிமங்களை அறிய)

(குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும், குடிக்கு அடிமையாகாமல், நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்)

 

- சகா…