மலேரியா நோய்க்கான காரணங்களும், அது ஏற்படுத்திய பாதிப்புகளும்
மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) எனும் தாவரத்திலிருந்து ஆர்மிசினின் (Artemisinin) எனும் உயிர்வேதிப்பொருளை பிரித்தெடுத்து, அது மலேரியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்றும் நிரூபித்துள்ளார். இந்த தாவரத்தை, பாரம்பரிய சீன மருத்துவ முறையிலிருந்து அவர் தெரிவு செய்திருக்கிறார்.
மலேரியா என்பது ப்ரோட்டோசொவன் எனும் ‘ஒரு செல்’ உயிரியால் உருவாகும், அனபிலஸ் எனும் பெண் கொசுவின் உமிழ் நீரினால் பரப்பப்படும் ஒரு தொற்று நோயாகும். காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். முற்றிய நிலையில் இது மஞ்சள் சுரத்தையும், கோமா நிலையையும் உண்டு செய்யும், மிகவும் முற்றிய நிலையில் இது மரணத்திற்கும் கூட வழி வகுக்கும். தொற்றுநோய்க் கிருமி, கொசுவின் உமிழ் நீரில் இருந்து தாக்கப்படுபவரின் இரத்தத்தில் கலக்கிறது. பின்பு இக்கிருமி கல்லீரலை அடைந்து வளர்ந்து, முதிர் தன்மை அடைந்து மீண்டும் குருதியில் கலக்கிறது. பின்னர் குருதியில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் தங்கி வளர்ந்து, இனவிருத்தி அடைந்து பின்பு இவற்றை அழிக்கின்றன.
பூமத்திய ரேகையை ஒட்டிய நாடுகளின் மலேரியாவின் பாதிப்புகள் அதிகம், குறிப்பாக ஆப்பிரிக்காவில். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, சுமார் 5,84,000 பேர் மலேரியாவின் கோரப் பிடியில் சிக்கி இறந்திருக்கிறார்கள். ஏழ்மைக்கும் இநோயிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவதில் எந்த அளவு உண்மை இருக்க முடியுமென தெரியவில்லை, ஆனால் தேங்கிய நீர் நிலைகளில் தான் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் குடிகொள்கின்றன. ஆகவே. இந்த கொசுக்களை கொல்வதே தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கை ஆகும். மேலும் இக்கொசுக்களை கொல்ல டிடிடி, சிப்ளுத்ரின் மற்றும் டெல்டாமெத்ரின் போன்ற மருந்துகளை தெளித்து அழிக்கவும், கொசுவலை பயன்படுத்துவதும் சிறந்த தற்காப்பு முறைகளாகும்.
மலேரிய தடுப்பு மருந்தின் ஆரம்ப நிலை
ஆண்டிஸ் மலைத்தொடரில் காணப்படும் ஒரு வகையான மரம் ‘சின்கோனா’. பெரு நாட்டின் மக்கள் இம்மரத்தின் பட்டைகளை ஊறவைத்து, அதன் தண்ணீரை குடிப்பதை (கியாயம்) காய்ச்சலை தணிக்கும் மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற சில மத போதகர்களின் மூலமாக இது லண்டனை அடைந்துள்ளது. சின்கோனா எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து தருவிக்கப்பட்ட வேதிப் பொருளான குய்னைன் தான் மலேரியாவிற்கு சிறந்த மருந்தாக இன்றளவும் பாவிக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய்க்கிருமிகள் தங்கள் மரபணுக்களை மாற்றியமைத்து இந்த மருந்துகளுக்கு மட்டுப்படாமல் எதிர்ப்புத் தன்மை பெற்றுவிட்டன. இவ்வாறான அக்கிருமியின் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே ஆர்மிசினின் கண்டறிய வேண்டியதற்கான தேவை உண்டானது.
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் சுமார் 60,000 பேர் மலேரியாவால் இறந்ததாக அறியப்படுகிறது. மலேரியா மருந்தான க்ளோரோகுய்நோன் சரிவர செயல்படாததால் (மருந்து செயல்படா தன்மை) தெற்கு வியட்நாமுடனான போரின்போது வடக்கு வியட்நாமின் துருப்புகள் அதிக அளவில் மலேரியாவால் இறந்து போயினர். தென் சீனத்தின் பல பகுதிகளிலும் மலேரியாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததாலும், வடக்கு வியட்நாம் கேட்டுகொண்டதற்கு இணங்கவும் அப்போதைய சீன அதிபர் சோவ் என்லை அவர்களால் ப்ராஜெக்ட் 523 (May 23, 1967) தொடங்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், திருமதி டு அவர்கள், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் சீனாவின் ஹெய்னான் மாகாணத்திற்கு, நோயாளிகளை ஆராய்வதற்காக செல்லும்படி பணிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் பீஜிங் பல்கலைகழகத்தில் மருந்தாளுனர் பட்டம் பெற்றிருந்தார். மேலும் மேற்குலக நவீன மருத்துவம் படித்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "சீன பாரம்பரிய மருத்துவ" பயிற்சியையும் முடித்திருந்தார். இளம் தாவர-வேதியியல் அறிஞர்களையும், மருந்தியல் அறிஞர்களையும் உள்ளடக்கிய ப்ராஜெக்ட் 523 அதுவரை ஏதும் சிறப்பான மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், அவர்களின் பார்வை சீன பாரம்பரிய மருத்துவ முறையை நோக்கி விழுந்தது.
படம் 1: ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) தாவரம்.
படம் 1: ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) தாவரம்.
தற்பொழுதைய மலேரிய தடுப்பு மருந்து உருவாக்கம்
முதலில் சுமார் 2000 தாவர சாறுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அதில் 640 மட்டுமே மலேரியாவிற்கு எதிரான செயலபாடுகளை காட்டின. அடுத்த கட்டமாக 200 தாவரங்களில் இருந்து பெறப்பட்ட 380 சாறுகள் சுண்டெலிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிராக செயல்படுகிறதா என் சோதனை செய்யப்பட்டன. ஆனால் இம்முறையும் அவர்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைக்கவில்லை. ஆர்டிமிசிய அனுவ (Artemisia annua L.) (தமிழில்: மாசிப்பத்திரி) மலேரியா எதிர்ப்பு செயல்பாட்டை காட்டிய போதிலும், ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ ஏடுகளில் கொடுக்கப்பட்டுள்ளது போல சிறப்பானதாக இல்லை. அப்போது அவர், மனம் தளராமல் மீண்டும் அந்த மருத்துவ புத்தகத்தை வாசிக்கத தொடங்கினார். ஆழமாக வாசித்த போது ஓன்று புரிந்தது, அது சாறு எடுக்கும் முறையில் உபயோகப்படுத்தும் வெப்பத்தின் அளவை மாற்றம் செய்யலாம் என்பதே. அதிக வெப்பத்தினால், சாறு எடுக்கும் போது சில முக்கிய வேதிபொருட்கள் சிதைவடைய வாய்ப்பு இருப்பதாக கருதினார். அதனால் மீண்டும், அவ்வாய்வுகளை குறைந்த வெப்பத்தில் எடுக்கப்பட்ட சாற்றைக் கொண்டு செய்து பார்த்தார். இது அவருக்கு தக்க பலனை தந்தது, ஆம் இம்முறை சிறப்பான செயல்பாடு காணப்பட்டது. மேலும் அது சில பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, மனிதக் குரங்குகளில் சோதனையிடப்பட்டு, உறுதி செய்யப்பட்டது.
1970களில் புதிதாக கண்டறியப்பட்ட மருந்துகளை சோதிக்க தகுந்த வழியமைப்புகள் இல்லை. ஆகவே திருமதி. டு வும் அவரது குழுவினரும் ஒரு தைரியமான முடிவை எடுத்தனர். அவர்கள் அனைவரும் அந்த மருந்தை அருந்தினர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று உறுதியான பின்னரே, மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹுய்னான் மாகாணத்து நோயாளிகளுக்கு வழங்கி சோதித்தனர். எதிர்பார்த்தபடியே, நோய்க்கான அறிகுறிகள் குறைய ஆரம்பித்தன. மருந்து சிறப்பாக செயல்பட தொடங்கியதை உணர்ந்த குழுவினர், அடுத்ததாக அச்சாற்றின் மூலப் பொருட்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். பின்னர் 1972 ஆம் ஆண்டு, 282 மூலக்கூறு எடையுள்ள ஆர்மிசினினை கண்டறிந்தனர். பீஜிங் அருகில் கிடைத்த செடிகளில் அதிக அளவு ஆர்மிசினின் இல்லை, ஆனால் அதுவொரு தேசிய செயல்திட்டம் என்பதால், தேசத்தில் பிற பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் மூலம் செறிவான ஆர்மிசினின் உள்ள தாவரம் கண்டறியப்பட்டது. பின்னர் மாத்திரையாக உருமாற்றப்பட்டு சோதித்தனர். ஆனால் பழங்காலத்து மாத்திரை உருவாக்கும் எந்திரத்தில் இருந்த சில குறைபாடுகளினால் எதிர்பார்த்த செயல்பாடு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் கூடுடை மாத்திரைகள் மூலம் சோதித்தனர், இம்முறை சிறப்பான செயல்பாடு கிடைக்கப்பெற்றது. மேலும் அவர்கள் இதை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல, அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. அதே சமயத்தில், அந்த தாவர சாற்றில் ஆராய்ச்சி செய்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டனர். ஆனால் சீன அறிவியல் கழகம் இவர்களின் ஆராய்ச்சியை அங்கீகரித்தது. பீஜிங்கில் 1981 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு நடத்திய "மலேரியா மருந்துகள்" எனும் ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கத்தில் திருமதி. டு இவ்வாராய்ச்சியைப் பற்றி பேசினார். பின்னர் இக்குழுவினர் அம்மருந்திலிருந்து பல வேதியியல் வழித்தோன்றல்களை உண்டாக்கி அதையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டனர். அம்மருந்தை உலக சுகாதார மையம் (எசிடி-ஆர்மிசினின் கூட்டு மருந்து) உலக அளவில் அங்கீகரித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் லட்ச கணக்கானோர் இதனால் பயனடைந்தனர். திருமதி டு அவர்களின் கடும் உழைப்பிற்கு பலனாய், தற்பொழுது அவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
படம் 2: மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டின் (2015) மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்கள்.
படம் 2: மலேரியாவிற்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டின் (2015) மருத்துவத்திற்கான நொபெல் பரிசை வென்றிருக்கும் திருமதி. டு யோயோ (84 வயது) அவர்கள்.
நாம் உற்று நோக்க வேண்டிய மூன்று விடயங்கள்
1. மேற்கத்திய அறிவியல் படித்தவர்களுக்கு சீன பராம்பரிய மருத்துவ முறை சார்ந்த பயிற்சியை அளித்தது. இது ஒரு சிறந்த முறை. ஏனெனில் ஒரு துறையில் உள்ளவர்கள், மற்றொரு துறையை பற்றி தெரிந்திருக்கும் பொழுதுதான் நிறைய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். நிறைய துறை அறிஞர்கள் ஒரு புள்ளியில் கூட வேண்டும். அல்லது பல துறைகளையும் ஒரு அறிஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.
2. சீன அரசின் ப்ராஜெக்ட் 523: அந்தத் துறையில் அனுபவம் மிக்க தேசத்தின் அனைத்து அறிஞர்களையும் ஓர் புள்ளியில் நிற்க வைத்தது. அதற்கான நிதி உதவியை தாராளமாக்கியது.
3. திருமதி. டு, எதிர்மறை முடிவுகளை கண்டு தொய்வுராமல், மீண்டும் மீண்டும் பரிசோதித்தது. மேலும் அந்த மருத்துவ ஏடுகளை மீண்டும் தெளிவாக படிக்க முற்பட்டது.
மேற்கண்ட விடயங்கள் நம்மை நம் சித்த மருத்துவத்தை நோக்கி பார்வையை செலுத்தத் தூண்டுகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தின் நிலை மற்றும் எதிர்கால பார்வை
நமது சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் போகாமலில்லை. ஆனால் எந்த அளவு? சித்தர்பாடல்களை புரிந்துகொள்வதில் இருந்தே நமக்கு இடர்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தவறாக பொருள்விளக்கம் கொள்ளப்பட்டு பல மருந்துகள் கைவிடப்படுகின்றன அல்லது செயல் திறன் குறைவாக உள்ளன. சித்த மருத்துவ ஆராய்ச்சி இன்னும் ஏட்டளவில்தான் உள்ளன. சித்த மருத்துவ முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டி தேசிய சித்தா கழகத்தில் (சென்னை) இருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர். ஒரு தேசிய நிறுவனம், தொன்மை வாய்ந்த ஒரு மருத்துவ முறையை ஆராய்ந்து மேற்குலகிற்கு நிரூபிக்க தேவையான அறிவியல் கருவிகளை கொணரக் கூடாதா? மாநிலத்தின், பல்வேறு பல்கலைகழகங்களில் தாவரவேதியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மேற்குலகம் எற்றுக்கொள்ளும்படியான நிரூபணங்களை தரக் கூடிய கருவிகளுக்கு எங்கே போவது? கூட்டு முயற்சி மட்டுமே ஒரு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பை வெளிக்கொணர உதவும், முக்கியமாக நாம் குறைந்த வசதிகளுடன் ஆராயும் போது. பத்து தமிழ் ஆசிரியர்கள், பத்து தாவரவியலாளர்கள், பத்து சித்த மருத்துவர்கள், பத்து வேதியியல் அறிஞர்கள், பத்து உயிர்-வேதியியல் அறிஞர்கள், பத்து நுண்ணுயிர் அறிஞர்கள், பத்து உயிர்-கணினி ஆய்வாளர்கள், பத்து மருந்தியல் அறிஞர்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கு சிறந்த தலைமையை உருவாக்கி, அவர்களுக்கு நல்ல ஊதியமும், அவர்களின் கீழ் பணிபுரியிம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நல்ல கல்வி உதவித்தொகையும், நுண்-அரசியல் அற்ற ஒரு ஆராய்ச்சிகூட சூழலையும், ஆராய்ச்சியாளர்களுக்கு நடுவே போட்டியற்ற ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவுமேயானால், சித்த மருத்துவத்திற்கு வருடத்திற்கு ஒரு நொபெல் பரிசு சாத்தியமே !!!
முனைவர். இர. வினோத்கண்ணன் தேன்மொழி
https://www.facebook.com/vinothkannan.ravichandiran