முதல் படத்தில் இருக்கும், பறக்கும் பட்டத்தைப்போல காட்சிதரும் மூலக்கூறு கட்டமைப்பை மட்டும் கொடுத்து, ஒரு கேள்வியை ஆங்கில இந்து நாளிதழில் நேற்று கேட்டிருந்தார்கள்..
பெனிசிலின் மற்றும் கார்பபெனெம் என்ற இருவேறு பாக்டீரியா கொல்லி மருந்துகளில் பொதுவாக காணப்படும் இந்த மூலக்கூறு கட்டமைப்பின் பெயர் என்ன? என்பதுதான்..இந்த கட்டமைப்பின் பெயர் பீட்டா லேக்டம் வளையம் என்பதாகும்.. இரண்டாவது படத்தில் இந்த கட்டமைப்பு எவ்வாறு இரண்டுக்கும் பொதுவாக இருக்கிறது என்பதைக் காணலாம்.. இந்த குறிப்பிட்ட மூலக்கூறு கட்டமைப்புதான் பாக்டீரியாவின் செல்சுவரை உடைத்து, அதனை அழிக்க பெரும்பங்கு வகிக்கிறது..
பின்குறிப்பு: இந்த தகவலை பாக்டீரியாவிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்..
டேக் டைவர்சன்..
இந்த படங்களில் நீங்கள் பார்க்கும் மூலக்கூறுகளின் வடிவங்களை போடுவதற்கு இளங்கலை வேதியியல் படிக்கும்பொழுது பெரும்பாடு படவேண்டியிருந்தது.. முதுகலை பயிலும்பொழுது, கெம் டிரா என்றொரு செயலியின் அறிமுகம் கிடைத்தது.. அதன் உதவியுடன், எளிதில் பல வேதியியல் மூலக்கூறு வடிவங்களை வரையமுடிந்தது..
அந்த காலகட்டத்தில் ஓஎச்பியில் வரைந்து, அதனை சுவரின் மீது திரையிட்டு, ஆசிரியர்கள் பாடமெடுப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு மெடிசினல் கெமிஸ்ட்ரி பாடமெடுத்த பேராசிரியர் சுலோச்சனா அவர்கள், ஒவ்வொரு பாடவேளையின் பொழுதும் ஏறத்தாழ நூறு ஓஎச்பி தாள்களுடன் வகுப்பிற்கு வருவார்.. அவரின் சிரமத்தைக்கண்டு, அந்த ஓஎச்பி தாள்களை கையாடல் செய்து, அனைத்து மூலக்கூறு வடிவங்களையும் அப்பொழுதைய மாற்று அரசியல் பேசிய கெம் டிரா உதவிகொண்டு வரைந்து, பவர்பாய்ண்டில் போட்டுக்கொடுத்தேன்..
இப்பொழுதும் கெம் டிராவில்தான் வரைகிறேன்.. என்னுடைய ஆய்வு மாணவர்களும் அப்படிதான் செய்கிறார்கள், ஆனால், சிலர் இப்பொழுதெல்லாம் ட்ரெண்டிங்கான செயற்கை நுண்ணறிவின் உதவியையும் நாடுகிறார்கள்.. கடைசியில் ஒரே மூலக்கூறுதான்.. ஒரே வடிவம்தான்.. செய்முறை மட்டும்தான் எளிமையாகியிருக்கிறது..
எனவே மக்களே, நீங்கள் மாற்றமாக நினைப்பதுவும், இப்பொழுது வெறுத்து ஒதுக்கிய அதே வடிவத்தில்தான் இருக்கப்போகிறது என்பதை சொல்லிக்கொண்டு, வேதிவினையைத்தவிர, வேறு யாருக்கும் எந்த வினையும் செய்யாத என்னுடைய, இன்றைய அறிவியல் உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..
சகா...