குழந்தையின்மை என்பது
உடல்ரீதியான குறையாகவே கருதப்படும் இக்கால நிலையிலும், அது ஒரு சமூகரீதியான
குறையாகவே நம்மூரில் பார்க்கப்படுவது சற்று மனம்தளர வைக்கும் செய்தியே.
இருப்பினும், இக்குறையை சரிகட்ட அறிவியல் ஆய்வுகள் பலவாறான சாளரங்களை
அமைத்துக்கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆய்வுகளின் அதீத வடிவம்தான் தற்பொழுது
குருத்தணுக்களை வைத்து மனிதனின் விந்தணுவையும், கருமுட்டையையும் உருவாக்கி
காண்பித்திருக்கும் நிலை. உலக அளவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஆய்வானது பல
நிலைகளைக் கடந்து இன்று அறிவியல் அறியா ஒருவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியா
உயரத்தை எட்டிப்பிடித்துவிட்டது. எனில் இன்றைய மருத்துவம் அறிய, சற்று அறிவியல்
அறிந்திருப்பது மிக முக்கியமே. பொருளாதாரத்திற்கு மட்டும் பரிவட்டம் கட்டி, வளரும்
இச்சமூகத்தில் எண்ணெற்ற புதுவிதமான நோய்க்கிருமிகள் தாக்கிக்கொண்டேதான்
இருக்கின்றன. அவற்றுள் பலவற்றிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலாதது
இன்னுமொரு பேரதிர்ச்சிதான். அவற்றுள், உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ், எபோலா,
சார்ஸ், மெர்ஸ் என்று சொல்லப்படுகிற மத்திய கிழக்கு பகுதிகளை தாக்கும் சுவாச நோய் போன்றவை அடங்கும். இவ்வாறான நோயெதிர்ப்பு மருந்துகளே இல்லாத நோய்களுக்கும், மிகக்கடினமாய்
செயல்பட்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை எளிமைப்படுத்தும் விதமாகவும்
பலவாறான ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்றவாறே உள்ளன. இருந்தும், குழந்தையின்மை என்ற
கேட்க எளிதான தனிமனித குறை என்பது பெருகிக்கொண்டே வந்தால் ஒரு இனமே அழியும் நிலை
ஏற்படலாம். இதனை முன்னிறுத்தி பல ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுகளை முன்னோக்கி
பயணப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதன்பொருட்டு விளைந்ததுதான், தற்பொழுது
ஆய்வாளர்களின் மத்தியில் கொண்டாடப்படும் ‘குருத்தணு’வின் உதவியுடன் மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும் உருவாக்கியிருக்கும்
செயல்.
படம் 1: (அ) குருத்தணு, (ஆ) அணு பெருக்கமடைதல், (இ) குருத்தணு, வேறுஏதேனும் அணுவாய் மாற்றம் பெறுதல்.
நம் உடலில்
பாக்டீரிய நுண்ணுயிர்களைவிட குறைவாய் இருக்கும் நம்மின் அணுக்கள் அனைத்தும் வெவ்வேறு
இடங்களில், வெவ்வேறு பண்புகளுடன் காணப்பட்டாலும் அனைத்தும் ஒரே உயிரியல் பண்பு
கொண்டதே. எடுத்துக்காட்டாய், நம் இதயத்திலுள்ள அணுக்கள் அது சுருங்கி விரியும்
தன்மைக்கேதுவாகவும், கை,கால்களிலிலுள்ள அணுக்கள் அவை மடக்கி விரிக்கும்
தன்மைக்கேதுவாகவும் அமையப்பெற்றுள்ளது. ஆனால், இந்த குருத்தணுக்கள் என்பது
குழந்தையைப் போல என வைத்துக்கொள்ளலாம். குழந்தை எப்படி தான் பார்த்து வளர்பவரின்
பண்புகளைப்பார்த்து தன் பண்புகளையும் மாற்றிக்கொள்கிறதோ, அதேபோல்தான், குருத்தணுக்களும்
தான் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள அணுக்களின் பண்புகளையே பிரதிபளிக்கும்
அணுவாக மாறும் தன்மைகொண்டது. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த குருத்தணுக்களை வைத்து
பலவாறான நோய்களுக்கு மருத்துவ தீர்வு கண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதில்
ஒன்றுதான் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும்.
இதனை மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து, இஸ்ரேலிய, ஐரோப்பிய ஆய்வாளர்கள்
உருவாக்கியிருக்கிறார்கள்.
முன்னரே, ஜப்பானிய
அறிவியலாளர் முனை. மிட்டினொரி சைடோ [1], கியோட்டா பல்கலைகழகத்தில் தன் ஆய்வகத்தில்
முதன் முதலாய் 2012ல் செயற்கை கரு அணுக்களை (PGCs – primordial germ cells) உருவாக்கிக்காட்டினார். இந்த கரு அணுவானது, இயற்கையாய் கருவளர்ச்சியின் பொழுது
உருவாகும் ஒன்று. இவைதான் பின்னர் ஆணிடம் விந்தாகவோ, இல்லை பெண்ணிடம்
கருமுட்டையாகவோ மாற்றம் பெறுகிறது. இதனை, முனை. சைடோ செயற்கையாய் உருவாக்கி
காண்பித்துவிட்டார். உருவாக்கப்பட்ட செயற்கை கரு அணுக்களை, உடலிலுள்ள
விந்தணுவுடனோ, கருமுட்டையுடனோ சேர்கையில், அவையும் விந்தணுவாகவோ, கருமுட்டையாகவோ
மாற்றம் பெறுகிறது. பின்னர், முற்றிலும் வளர்ந்த அந்த விந்தணுவையும்,
கருமுட்டையையும் உடலில் இருந்து பிரித்து செயற்கை வெளியில் (in-vitro) கருத்தரிக்க செய்ய இயலுகிறது. ஆனால், அவரால் அந்த விந்தணுவையும்,
கருமுட்டையையும் கரு அணுவிலிருந்து செயற்கைவெளியிலேயே உருவாக்க இயலவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், முனை. சைடோவின் ஆய்வை அடிப்படையாய் வைத்து, செயற்கை
வெளியில் மனிதனின் விந்தணுவையும், கருமுட்டையையும், கரு அணுவிலிருந்து இஸ்ரேலிய
(ஜாக்கப்), ஐரோப்பிய (அஸிம் சுரானி) அறிவியலாளர்கள் உருவாக்கி
காண்பித்துவிட்டார்கள். இதன் உதவியால், ஒரு செயற்கை வெளியில், தோல் அணுக்களை
வைத்து மனிதனின் விந்தணுவும், கருமுட்டையும் உருவாக்கி, அதனை அச்செயற்கை
வெளியிலேயே கருத்தரிப்புக்கு உட்படுத்தி, பின் அதனை உடலினுள் செலுத்தி வளரவைக்க
முடியும். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இரு ஆண்கள் இணைந்து குழந்தை
பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான். ஆம், ஒரு ஆணிண் தோலிலிருந்து விந்தணுவையும்,
மற்றுமொரு ஆணிண் தோலிலிருந்து கரு முட்டையையும் உருவாக்கி, இரண்டையும் செயற்கை
வெளியில் கருத்தரிப்பு செய்து, ஒரு பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தையை
பெற்றுக்கொள்ளலாம்.
எது எப்படியோ,
இவையெல்லாம் ஒரு செயற்கை பரிணாம வளர்ச்சிக்கு மனித இனத்தை இட்டுச்செல்கிறதே தவிர
இயற்கையான பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய உதவும் ஆய்வாய்
அமையவில்லை என்பது என் கருத்து.
http://www.sciencemag.org/content/338/6109/971
தரவுகள்:
சொற்களஞ்சியம்:
அணு-Cell; குருத்தணு-Stem cell; கரு அணுக்கள்-Primordial germ cells; அணு பெருக்கம்-Cell multiplications.
எந்த அளவுக்கு இது படிக்கச் சுவையாக இருக்கிறதோ அதே அளவுக்குத் திகிலாகவும் இருக்கிறது. ஏனெனில், இயற்கையாகப் பிறந்து வளரும் மனிதர்களின் உடலில் இருக்கும் இயல்பான அணுக்களே தங்கள் உருவாகி அழியும் தன்மையிலோ, பெருகும் தன்மையிலோ மாறுதல் அடைந்துவிட்டால் புற்று நோயாக அது பரிணமிக்கிறது. அப்படியிருக்க, இப்படிச் செயற்கையாக உருவாக்கும் அணுக்கள் ஒழுங்காக உருவாகவும் வளரவும் அழியவும் செய்யுமா? இப்படி உருவாகக்கூடிய குழந்தைக்கு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்! நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது! இருந்தாலும் இப்படி ஒரு கட்டுரைக்காக நன்றி தோழரே!
பதிலளிநீக்குஉண்மைதான் தோழர்...
நீக்குஇங்கு நோய்களே திட்டமிட்டுதான் பரப்பப்படுகின்றன. ’வளர்ந்த நாடுகளின் பணமுடை, புது நோயின் கண்டுபிடிப்பு’, இவை இரண்டிற்கும் எப்பொழுதுமே நேரடியான தொடர்பு இருந்துவருகிறது.
நோய் உருவாக்கும் கிருமிக்கான மருந்து கண்டுபிடிப்பதை விடுத்து, தன்னிடம் இருக்கும் மருந்திற்கான நோயை உருவாக்கும் கிருமிகளை கண்டுபிடித்து பரவவிடுகின்றன இந்த வல்லாதிக்க நாடுகள்....
மனிதனிற்கோ, மற்றைய உயிர்களுக்கோ ஏதேனும் குறைபாடுகள் ஏற்படும்பொழுது, இந்த குருத்தணுக்களை பயன்படுத்தி சரிசெய்யும் அறிவியலை ஏற்றுக்கொள்ளலாம்... ஆனால் அதே அறிவியலைப் பயன்படுத்தி, ஒரு உயிரையே உருவாக்குதல் என்பது உண்மையில் இயற்கையுடன் நாம் செய்யும் போராகத்தான் அமையும்...