வியாழன், 10 ஜூன், 2021

மின்மினியுடன் ஒரு உரையாடல் # 1 (How to teach science to your stars?)


தென்னங்காற்று சிலுசிலுவென மேனியை முத்தமிட்டு சென்றுகொண்டிருந்தது.. கும் இருட்டு.. சென்ற வாரம் இறந்துபோன அந்த முக்கத்து வீட்டுப் பெண், வெள்ளை வெளேரென்று புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றாலும் அந்த இருட்டில் தெரிவதிற்கில்லை.. அப்படி ஒரு இருட்டு.

பல்லாயிரக் கணக்கான மின்மினிகள் வானத்தில் பறப்பது போல விண்மீன்கள் வீற்றிருந்தன.. மின்மினிகளின் வெளிச்சம் ஒரு நாளும் நிழலைக் கொடுத்ததில்லை.. இல்லையேல் அந்நிழலைக் கண்கள் கண்டதில்லை..
கொட்டாங்கச்சி ஓட்டை வழியாக, அப்பாவிடம் அடிவாங்கி ராப்பகலாய் கண்ணயர்ந்து திரித்து உருவாக்கப்பட்ட தேங்காய் நார் கயிற்றால் வேயப்பட்ட கட்டிலின் மீது, நார் பிசிறுகள் தென்றல் முத்தமிடும் மேனியை சீண்டாமலிருக்க சற்றே தடிமனான சமுக்காலத்தை போட்டு, ஒற்றை தலையணையின் மீது பின்மண்டையை, அவதாரில் சடையை குதிரை பிடரியுடன் பொருத்துவது போல அழுத்திவிட்டு, கண்களும் கண்கள் வழி மூளையும் அந்த மின்மினிகள் மீது வீழ்ந்துகிடந்தன..
என்னையா இந்த இயற்கை, இப்படியான அழகை எப்படி அது உருவாக்கியிருக்க முடியும் என்றவாறான நியூட்ரான்களின் இடப்பெயர்ச்சிகளால் கிரங்கடிக்கப்பட்டு எண்ணத்தை பல வண்ணங்களாக வானின் மீது சிதறடித்துக்கொண்டிருந்தான் அந்த சிறுவன்...
இயற்கையா கடவுளா என்றொரு பெரும் கேள்வி அவனுள்.. கடவுள் என்று நம்புபவர்களுக்கு அவனிடையே ஒற்றை கேள்வி இருந்தது.. அந்த கடவுளை உருவாக்கியது யார் என்பதே அது..!
அது எளிமையான கேள்வியும் கூட.. அந்த கேள்வியினால் அவனை ஒரு நாத்திகவாதியாக அந்த மின்மினிகள் நினைத்துவிடவில்லை.. மாறாக அவனிடம் மிகவும் எளிமையாக உரையாடிக்கொண்டிருந்தன அவைகள்..
நீ கடவுளை யார் உருவாக்கினார் எனக் கேட்கிறாய், இது எப்படி இருக்கிறதென்றால் உன் தாத்தாவின் தாத்தா பெயரை கேட்பது போல இருக்கிறது... உனக்கு அவரின் பெயரோ, அவரைப்பற்றியோ தெரியுமா என்ன..
எளிதில் கேள்வி அம்பை எய்தவனுக்கு, மின்மினி எய்த எதிர் அம்புகளை எதிர்கொள்ள தயங்கிப்போனான் சிறுவன்..
சற்றே விழி பிதுங்க தன் வியாக்யானத்தை எடுத்துரைக்க முற்படுகிறான் அவன்.. உனக்கு பெருவெடிப்பு தெரியும் தானே..
என்ன வெடிப்பு அது.. நீங்கள் நிகழ்த்திய உலகப்போரில் வெடித்த வெடிப்புகளை விட என்ன பெரிய வெடிப்பு...
அது பல கோடி ஆண்டுக்கு முன் நிகழ்ந்த ஒன்று.. அந்த பெரு வெடிப்பிலிருந்து வெளிவந்த தீப்பொறிகள்தானே நீங்களெல்லாம்..
அதை மின்மினிகள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.. நாங்கள் கடவுள்கள் கைப்பட கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணை திரட்டுகள் என்றே சொல்லிக்கொள்ள விருப்பப்பட்டன.. ஆனால் அவற்றுக்கான சாட்சி எதுவும் அவைகளிடம் இல்லை..
ஆனால் மின்மினிகளைவிட பல லட்சம் கோடி அளவுக்கு சிறிய அந்த மனிதனின் மூளை சில அறிவியல் துணைகொண்ட பதில்களை வைத்திருந்தது..
பெரு வெடிப்பில் நீங்கள் பிறந்தவுடன் சிறியதாகத்தான் இருந்திருந்தீர்கள்.. பூ தெரியுமா உங்களுக்கு.. அந்த பூவின் உள் கட்டமைப்புகளை கண்டிருக்கிறீர்களா.. அது போலத்தான் நீங்கள்.. ஒரு விதையிலிருந்து வெடித்துவரும் செடியில் முளைக்கும் மொட்டு இருக்கிறதே, அதிலேயே அந்த பூவின் உட்கட்டமைப்பு இருந்திருக்கும்.. பூ பெருக்க, பெருக்க அதன் உள் அமைப்புகள் விரிந்து அழகாகுமே.. அது போலத்தான். நீங்களும் பெரு வெடிப்பில் பிறந்து பின் பெருத்தீர்கள்..
நீ நாத்திகன்தான்... புரிந்துவிட்டது..
ஹஹ.. அது சரி.. உனக்கு E = mc2 தெரியுமா!
அது என்ன எழவோ, எனக்கு தெரியாது..
அது ஒன்றுமில்லை, ஆற்றலானது நிறையுடன் நேரடித் தொடரிபில் இருக்கும்.. நிறை கூட கூட, ஆற்றல் அதிகமாகும்.. இல்லையேல் ஆற்றல் அதிகமாக அதிகமாக நிறை அதிகரிக்கும்..
புரியலையே..
ஒரு 10 கிராம் மற்றும் 10 கிலோகிராம் எடை கொண்ட இரு பந்துகளை எடுத்துக்கொள்ளலாம், அதனை ஒத்த திசைவேகத்தில் ஒரு சுவற்றின் மீது அடித்தால் என்ன நிகழும்...
இது நேத்து பொறந்த புது மின்மினிக்கே தெரியுமே.. 10 கிலோகிராம் பந்து பட்ட இடத்தில் பாதிப்பு அதிகமிருக்கும்..
அதேதான்.. நிறை கூடும்பொழுது ஆற்றல் அதிகமாகிறது..
இதுதான் அந்த எழவு அறிவியலா.. நல்லாருக்கே. எங்கே இன்னும் கொஞ்சம் சொல்லேன்..
பெருவெடிப்பு நிகழ்ந்த மாத்திரத்தில் உருவான நெருப்பு குழந்தைகள், அவர்களின் நிறை மற்றும் திசைவேகத்தை பொறுத்து ஆங்காங்கே சிதறுண்டனர்.. அப்படி சிதறுகையில் ஆங்காங்கே உருவாகியிருந்த கருந்துளை ஏற்படுத்தியிருந்த வளைவுகளுள் வீழ்ந்தனர்..
இந்தபாத்தியா. அறிவியலில் புரியாத கெட்டவார்த்தைகள் அதிகம். இதுக்குத்தான் கடவுளென்ற ஒற்றை சொல்லோடு கடந்துவிடுவதை விரும்புகிறேன்..
எளிமையாக சொல்கிறேன்.. ஒரு பெரிய புடவையை நான்கு பக்கங்களையும் இறுக்கமாக கட்டிவிடு.. இப்பொழுது ஒரு பெரும் குழி ஒன்றை நடுவில் உருவாக்கிவிட்டு, நான்கைந்து கோள உருண்டைகளை அந்த புடவைக்குள் தூக்கி எறிந்தால் என்னவாகும்..?
அனைத்து கோள உருண்டைகளும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுகளுக்குதான் செல்லும்..
சரியாக சொன்னாய்.. இப்பொழுது, இரண்டு பெரிய கோள உருண்டைகளையும் பத்து சிறிய உருண்டைகளையும் தூக்கி எறிந்தால் என்னவாகும்..
அனைத்தும் அந்த பெருங்குழி உருவாக்கிய வளைவுக்குள்தான் செல்லும்.. அதே வேளை இரண்டு பெரும் கோள உருண்டைகள் என்பதால் அவைகளும் அவைகளின் எடைகளுக்கு தகுந்த வளைவுகளை உருவாக்கும், அந்த வளைவுகளுக்கு மிக அருகில் எந்தெந்த சிறு கோள உருண்டைகள் செல்கின்றனவோ அவைகளனைத்தும் அந்த வளைவுகளால் உள்ளிழுக்கப்படும்..
அட இதுதான் அறிவியல்.. பெரு வெடிப்பில் உருவான பிள்ளைகள் சிதறுண்டு, அவரவர் நிறைக்கு தகுந்தார் போல ஆற்றலை வெளிப்படுத்தி, space fabricல் சிறு சிறு வளைவுகளை ஏற்படுத்த, அந்த வளைவுக்கு அருகாமையில் உள்ள சிறு சிறு பிள்ளைகள் உள்ளிழுக்கப்பட்டன.. இதற்கு பெயர்தான் ஈர்ப்பு விசை.. இப்படித்தான் கதிரவன் என்றொரு மின்மினி உருவாக அதன் அதீத நிறையால் உருவான குழி அருகிலிருந்த எட்டு கோள்களையும் உள்ளிழுக்க, அந்த ஒவ்வொரு கோள்களும் அவரவர்கள் நிறைக்கு தகுந்தாற்போல மேலும் space fabricல் வளைவுகளை உருவாக்க, அதனுள் வீழ்ந்தன இந்த துணைக் கோள்கள்..
அடடடா.. இது தெரியாம இருந்துட்டேனே... ஆனா ஒரு சந்தேகம்.. அதென்ன சில வேளைகளில் நிறை என்றும், சில வேளைகளில் எடை என்றும் குறப்பிடுகிறாய்.. ஒற்றை சொல்லில் குறிப்பிட்டால் என்னவாம்.. இதற்குதான் இந்த அறிவியலாளர்களை பிடிப்பதில்லை..
அட அன்பு மின்மினியே, எடை ஈர்ப்புவிசைக்கு உட்பட்டது நிறை அப்படியல்ல.. எங்கும் நிறை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. மீண்டும் ஒருமுறை நான் சொன்னவற்றை நினைத்துப்பார், எங்கெங்கு எடை நிறையானது என்பதை..
ஓ.. இதுல இவ்ளோ செய்தி இருக்கா..
இது மட்டுமல்ல.. நீங்களெல்லாம் மின்மினிகள்.. உங்களிடம் வேதிவினைபுரிந்து எரியும் வேதி பொருட்கள் இருக்கின்றன.. அதாவது எரி பொருட்கள்.. அதனால்தான் ஒளி கொடுக்கிறீர்கள் நீங்கள்... கதிரவனை எடுத்துக்கொண்டால், அதில் ஹைட்ரஜன் வாயு அதிகமாக இருக்கிறது.. இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் உருவாவது மூலமாக கதிரவன் எங்களுக்கு கதிர்களை ஏவி விடுகிறான்..
அந்த கதிரவன் அண்ணன் எரிந்து கொண்டேதான் இருப்பாரா கடைசி வரையில்..
ஒரு வேளையில் அனைத்து எரிபொருளும் தீர்ந்துபோகும் அப்பொழுது அனைத்து ஹைட்ரஜனும் ஹிலியமாக மாறும்.. ஹைட்ரஜனைவிட ஹீலியம் பருத்த ஆள் என்பதால், கதிரவனின் விட்டம் பெருக்கும், புதனின் சுற்றுவட்டபாதை வரைகூட வரலாம்.. அப்படி பெருக்கையில் பூமியில் வெப்பம் அதிகமாகும்.. பின் அந்த மின்மினி முற்றிலுமாக அழிந்து கருந்துளையாக மாறும் வாய்ப்பிருக்கிறது.. கருந்துளைக்கு ஈர்ப்புவிசை அதிகம், நிறை அதிகரிப்பால்.. எனவே அனைத்து கோள்களையும் உள்ளிழுக்கும் ஆபத்து ஏற்படலாம்.. ஆனால் கிதிரவன் கருந்துளையாக மாறும் அளவுக்கு அதற்கு ஆற்றல் இல்லை என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.. இருந்தாலும் என்றோ ஒரு நாள் கதிரவன் அழிவான்.. அவனின் எரிபொருள் ஒருநாள் இல்லை ஒரு நாள் முடியதானே செய்யும்..
அப்டினா, ஏன் அங்கே படுத்துக்கொண்டு கதை அளந்துகொண்டிருக்கிறாய், ஒரு ராக்கெட் எடுத்து செயற்கைகோள் மூலமாக எங்காவது போய்விடவேண்டிதானே..
ஹஹ... அது நடக்க பல கோடி ஆண்டுகள் ஆகும்.. இருந்தாலும் நாங்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம், ஏதேனும் மற்ற மின்மினி குடும்பத்திலுள்ள கோள்களில் உயிர் வாழ முடியுமா என்று...
என்னது, அப்ப எல்லா கோள்களிலும் உயிர் வாழ முடியாதா..
முடியாது.. உயிர் வாழவென ஒரு சூழல் வேண்டும்..
அதென்ன சூசல்.. சாரி, சூழல்..
பூமி, பெருவெடிப்பிலிருந்து சுகப்பிரசவத்தில் பிறந்து வந்த பிறகு, இங்கு வெறுமனே பாறைகளும், நெருப்பும்தான். பின் பலமுறை வால்நட்சத்திரங்கள் படையெடுக்கவே, நீர் கட்டிகள் இடம்பெயற, பின் அமிலக் குளங்கள் உருவாகின.. பல இடி மின்னல்கள் தாக்குதலால், அமிலக்குளங்களில் இருந்த நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன், ஆக்ஸிஜன் அனைத்தும் சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவாகி பின் அதிலிருந்து ஒரு செல் உயிரிகள் தோன்றி, பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவாகினான்.. இது நேரம், காலநிலை என பல கூறுகள் ஒரே நேர்கோட்டில் அமைந்ததால் ஏற்பட்ட விளைவு.. இதே விளைவு வேறு எங்கும் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியே..
அய்யடா.. தம்மாதுண்டு அறிவ வச்சி வளரவும் செய்றீங்க, உங்கள நீங்களே அழிச்சிக்கவும் செய்றீங்க... ஏதோ நாங்கள் மின்மினிகளாக பிறந்தோம்.. மனிதர்களாக பிறந்திருந்தால் எவ்வளவு பிரச்சினைகள்...
அத விடு.. உனக்கு பீட்டல் ஜூஸ் (Betelguese) தெரியுமா..
பீட்ரூட் ஜூஸ் தெரியும்.. அதென்ன அந்த பீடா ஜூஸ்..
பீடா இல்ல மின்மினி.. அது பீட்டல் ஜூஸ். அதுவும் உன்னைப் போலொரு மின்மினிதான்.. அதற்கு திருவாதிரை என்றொரு பெயரும் உண்டு..
மே பி.. மே பி.. எனக்கு ஒன்னுவிட்ட தம்பியா இருக்காலாம்.. ஏன்னா நாங்க ஒரே சாதிதான..
கொடும.. நீயும் சாதியப் பத்தியேதான் பேசுறியா..
எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்.. ஆமா, நீ பேசுறது ஏன் எனக்கு ரொம்ப லேட்டாவே கேக்குது..
நீ பேசுவதும் எனக்கு நேரம் கடந்துதான் கேட்கிறது.. ஏனென்றால் நீ பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறாய்..
அதென்ன ஒளிக்கு ஆண்டு.. பைத்தியக்காரனுங்கடா நீங்க..
அவசரப்பட்டு மனிதர்களைப்போல தவறான சொற்களை நட்டுவிடாதே. அப்புறம் மகசூலும் அதேதான் கிடைக்கும் உனக்கு..
கோவிக்காம, பதில சொல்லுங்க ஏட்டய்யா..
ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தொலைவு, ஒரு ஒளியாண்டு.. எடுத்துக்காட்டாக, நீ பத்து ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறாய் என வைத்துக்கொண்டால், நீ இப்பொழுது உமிழும் ஒளி பத்து ஆண்டுகள் கழித்துதான் எனக்கு வந்தடையும்.. அப்படியானால் ஒலி இன்னும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்.. ஏனெனில் ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிக்கும்.. ஆனால் ஒலி, ஒளி போன்றல்ல, அதற்கு ஒரு ஊடு பொருள் வேண்டும்.. அதாவது கடத்தி.. பெருவெடிப்பு கூட மியூட் செய்யப்பட்ட பாடல் காட்சிபோலத்தான் நடனமாடியிருக்கும் அந்தரத்தில்..
அப்பறம் நாம எப்படி...
எட்டு கட்டங்களில் உச்சம் பெற்ற ஒருவன் பல கோடி ஓளியாண்டில் உள்ள மின்மினியிடம் போன் இல்லாமலும் பேசலாம்.. சரி அத விடு.. அந்த திருவாதிரைக்கு வருகிறேன்..
ஆமாமா.. மறந்துட்டேன்.. சொல்லு சொல்லு..
திருவாதிரை தற்பொழுது இல்லை.. அது கருந்துளையாக மாறிவிட்டது.. இருந்தும் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டேதான் இருக்கிறது.. இன்னும் சில நூறு கோடி ஆண்டுகள் கிடைக்குமாம்.. என்னே அறிவியலின் விந்தை பார்த்தாயா மின்மினி..
ஆமாம்.. ஒரு கேள்வி கேட்கலாமா உன்னிடம்..
அப்கோர்ஸ்.. ஒய் நாட்..
பெரு வெடிப்பு என்று சொன்னாயல்லவா, அந்த பெருவெடிப்புக்கு முன் உலகம் எப்படி இருந்தது.. பெரு வெடிப்பு எதற்காக நிகழ வேண்டும்.. முதல் அணுவின் பருப்பொருட்கள் உருவானது எப்படி..
அவ்..... கேட்டுபுட்டியே இப்படி ஒரு கேள்விய.. இதற்கு கடவுளென ஒற்றை சொல்லைக்கொண்டோ, இயற்கை என்று சொல்லியோ, இயற்கைதான் கடவுள் என்றோ சமாளித்துவிடலாம்.. ஆனால் அறிவியல் அப்படி சொல்லிக்கொடுக்கவில்லை.. பெருவெடிப்பின் காரணமோ, பெரு வெடிப்பிற்கு முந்தைய நிலையையோ அறியும் அளவுக்கு நாம் இன்னும் அறிவியலை வளர்த்தெடுக்கவில்லை.. உன் கேள்விக்கான பதிலை அறிவியல் என்றாவது ஒரு நாள் கொடுக்கும்.. நம்பிக்கையின் அடிப்படையிலானது இல்லை அறிவியல், சட்டென பதிலை கொடுத்துவிட.. அஃது ஆய்வுகளையும், முகாந்திரங்களையும், காரணிகளையும், நிரூபணங்களையும் அடிப்படையாகக் கொண்டது..
ஆகா.. நல்லா சமாளிக்குற.. இருந்தாலும் அறிவியலில் ஏதோ இருக்கிறது என்றே நினைக்கிறேன்.. யாரோ உன்னை கூப்புடுற மாதிரி இருக்கே..
ஆமாம். அப்பா கூப்புடுறாங்க.. நாளைக்கு திருவாதிரை திருவிழா.. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு இன்று இரவே செல்லவேண்டும்.. நாளைக்கு இரவு சந்திக்கலாம்..
டேய்டேய்.. இப்பதான் திருவாதிரை செத்து போச்சின்ன..
........... (சிறுவன் கயிற்று கட்டிலிலிருந்து எழுத்து சத்தமின்றி நடக்கத் தொடங்குகிறான்..)
-சகா..
04/05/2021


புதன், 9 ஜூன், 2021

கிணற்றுத் தவளைகளா நம் குழந்தைகள்..!

நீண்ட நாட்களாக வெளியில் சுற்றித்திரிந்த தவளை ஒன்று எதிர்பாராத வேளையொன்றில் தவறி கிணற்றுள் விழுந்தது..
ஆகா
அருமையாக
இருக்கிறதே, நம்மை உண்ணும் பாம்புகள், பறவைகள் இங்கில்லையே, எப்பொழுதும் சில்லென தண்ணீர், விதவிதமான சுவையுடன் நீர்ப்பூச்சிகள் என அனைத்தும் இருக்கின்றனவே.. இதுதான் நம் முன்னோர்கள் சொல்லிய சொர்க்கமோ.. இவ்வளவு நாள் தெரியாத்தனமாக நரகத்தில் இருந்திருக்கிறோமோ.. என்றெல்லாம் பிதற்றியது அந்த தவளை..
நாட்கள் சென்றன.. தவளையோ உணவை பிடிக்க அதீத ஆற்றலை செலவழிக்க தேவையில்லை என்பதால் சற்றே பருத்திருந்தது..
ஒரு கட்டத்தில் பசி என்றால் என்னவென்றே மறந்திருந்த அந்த தவளைக்கு எந்த பூச்சியும் சுவை நல்குவதாக இல்லை..
தூக்கமும், உணவும் மட்டுமே வாழ்வென கழிந்த நாட்கள் என்னவோ தவளையின் கபாலத்திற்குள் பதிவாக மறுத்தன..
என்றோ ஒரு நாள் தன்னை பிடிக்க வந்த பாம்பிடமிருந்து தப்பிய அந்த நொடியும், தப்பித்த பின்னான மகிழ்வும், பசியும், பசித்தப்பின்னான உணவின் ருசியும், கபாலத்துள் கையாமுயாவென கத்தியது..
ஒரு நாள், தூங்கிக்கொண்டிருந்த தவளை சட்டென எழுந்து, ஏதோ நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று எண்ணியது.. எண்ணிய மாத்திரத்தில், அதன் கபாலத்தில் உதித்தது ஒரு எண்ணம்..
இந்த பாம்பின் பிடியில் இருந்து தப்புவது கூட எளிது, ஆனால் இந்த சோம்பேறி தனமிருக்கே.. மிகவும் ஆபத்து..
சற்றே யாருக்கும் பயனற்று இந்த கிணற்றுள் வாழ்வதுதான் ஏனோ என்று சலிப்படைந்த தவளை, தட்டுதடுமாறி எப்படியோ கிணற்றிலிருந்து மேல்வந்து தன் இயல்பு வாழ்வை தொடர்ந்தது..
எந்த ஆபத்துமற்ற கிணற்றைவிட, பாம்புகள் நிறைந்த இந்த இடம்தான் நம் நிரந்தர வாழ்வென கருதி, பாம்பை எதிர்க்க கற்றுக்கொள்ள தொடங்கியது..
ஆக குழந்தைகளே,
தடைகளே நம்மை இயக்குகின்றன..
எதிரிகளே நம்மை உருவாக்குகிறார்கள்.. உழைப்பே நம்பை ஓய்வெடுக்க வைக்கிறது..
வலியே நமக்கான சுகத்தை கொடுக்கிறது..
எனில், வாருங்கள் குழந்தைகளே, பள்ளிக்குச் செல்வோம்...
நம்மின் அறிவுச் சிறகை விரிக்க நேரம் வந்துவிட்டதை எண்ணி பள்ளிக்கு செல்வோம்!
- சகா..
19/01/2021

வெள்ளி, 29 நவம்பர், 2019

black hole கருந்துளை

ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky way) எண்ணலாம். மொத்த பால்வழித்திரளும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இறந்த விண்மீன்கள்தான், அதாவது கருந்துளைகள் (black holes). 

கருந்துளைகள் எனப் பெயர்பெற காரணம், உண்மையில் அவைகள் ஒளியையும் விட்டுவைக்காது விழுங்கும் தன்மையினால்தான். எளிமையாக கூறினால், நான்கு பக்கங்களை இறுக்கமாய் கட்டிய ஒரு துணியில் பந்துகளை போட்டு, அத்துணியின் நடுவில் ஒரு துளையினை இட்டால், அந்த பந்துகள் எப்படி அந்த துளை நோக்கி ஒடி, கீழ் விழுமோ அப்படிதான் பந்துகள் போலுள்ள கோள்களும், விண்கற்களும், சூரியன்களும், விண்மீன்களும், கருந்துளையினால் ஈர்க்கப்பட்டு வீழ்ந்துவிடுகின்றன. 

நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வழித்திரளிலே மூன்று வகையான கருந்துளைகள் இருப்பதாக நாசா குறிப்பிடுகிறது. ஒன்று அணு அளவில் இருக்கும் கருந்துளைகள், இரண்டாவதாக stellar வகைகள் (interstellar படம் ஞாபகம் வருகிறதா), மூன்றாவது super massive வகைகள். கருந்துளைகள் என்றாலே அதன் ஆற்றல் அதிகமென்பதை நாமறிவோம். ஆற்றல் (energy), நிறையுடன் தொடர்புடையது, எப்படி? அதாங்க நம்ம நித்யானந்தா சொன்னாரே, sorry sorry, ஐன்ஸ்டீன் சொன்னாரே, E = mc2. இதனையும் நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ள, ஒரு சிறு கயிறை எடுத்து ஒரு முனையில் 100 கி கல் ஒன்றை கட்டி, மறுமுனையை உங்கள் கையில் வைத்து வேகமாக சுற்றுங்கள், 100 கி கல்லின் எடை அதிகமாவதை உணர்வீர்கள். அதாவது, பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றல், எடையாய் மாறும் (E = mc2) அது போலவே, ஒரு அதீத நிறைகொண்ட விண்மீன் இறக்கையில், அது ஆற்றலாய் மாறுகிறது, அப்படி வெளிப்படும் ஆற்றல் அதன் நிறையை மேலும், மேலும் அதிகரிக்கிறது. அப்படிதான் கருந்துளைகளின் ஆற்றலோ, நிறையோ அதிகமாகிறது. அப்படி அதிகமாகையில், தனக்கருகில் இருக்கும் அனைத்து விண்மீன்களையும், கோள்களையும் விழுங்கிவிடுகின்றன, அவற்றை விழுங்குவதாலும் அதன் நிறையும் ஆற்றலும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

அப்படிதான், சிறிய அணுவளவு கருந்துளைகள், மலையளவு நிறைகொண்டதாக இருக்கிறது, Stellar எனப்படும் கருந்துளைகள் சூரியனை விட 20 மடங்கு அதிக நிறைகொண்டதாகவும், super massive வகைகள் சூரியனை விட 1 மில்லியன் மடங்கு அதிக நிறைகொண்டதாகவும் இருக்கின்றன. நம்பால்வழித்திரளின் நடுவே இப்படியொரு super massive கருந்துளை இருப்பதாலேயே நம் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாமிருக்கும் சூரியக்குடும்பத்தில் ஒரு கருந்துளை உருவாக வேண்டுமானால், அத்துளை, சூரியன் இறப்பால்தான் நிகழ முடியும். அப்படி நாளைக்கே சூரியன் இறந்து கருந்துளையை உருவாக்கினாலும், அடுத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அக்கருந்துளையை (bcz, mass increases due to increasing energy) சூரியக்குடும்ப கோள்கள் சுற்றிவர வாய்ப்பிருக்கிறது!

கல் விழுந்த இடம்தான், அந்த super massive கருந்துளை! சிறுகற்கள் - stellar வகைகள்! உருவாகும் அலைகள் தான் - ஈர்ப்பலைகள் (gravity)! அந்த அலைகளின் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் சூரியக்குடும்பம் இருக்கிறது, அப்புள்ளியின், ஒரு ஓரத்தில்தான் பூமியும் உருண்டு கொண்டிருக்கிறது உயிர்ப்புடன்!

-சக்தி

வியாழன், 24 அக்டோபர், 2019

தமிழில் அறிவியல்

ஒருவரின் எண்ண வெளிப்பாடுகளை அறிவு-சார், உணர்வு-சார் என்று பொத்தாம் பொதுவாக பிரிப்பது நம்முடைய நடைமுறை. ஒரு செயல், அறிவியலுக்கு ஒவ்வாதவையாகவோ, தம்முடைய எண்ணஓட்டத்திற்குள் அடங்காதவையாகவோ இருந்தால் அச்செயலை உணர்வு-சார் பெட்டிக்குள் அடைத்துவிடுவது நம் பழக்கம். அப்படி உணர்வு-சார் செய்கைகளெல்லாம் அறிவுசார்ந்து இருப்பதில்லையா எனக்கேட்டால், இல்லை என்பதே பெருப்பாலானவர்களின் பதிலாக இருக்கக்கூடும்.

இப்படியாய் நாம் புரிதலற்று பொத்தாம் பொதுவாய் உணர்வு-சார் பெட்டிக்குள் மட்டுமே காலம்காலமாய் அடக்கிவைத்த ஒன்றுதான் மொழி. தம் தாய்மொழியைப் பற்றி யாரேனும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்துவிட்டால் போதும், அவர் அன்றிலிருந்து வெறும் அறிவற்ற வெற்று மொழி உணர்வாளர் என்றளவிலேயே மதிக்கப்படுவர். தாய்மொழி என்பது வெறுமனே ஒருவனின் உணர்வு மட்டுமல்ல, அஃது ஒருவனின் மண்சார்ந்த வாழ்வியலை, பண்பை, இயல்பை, கோபத்தை,  கலையியலை, இறையியலை, கற்பியலை, கல்வியை இன்னும் பலவற்றை பறைசாற்றும் ஒரு சாளரம். அப்படியாயின், அந்த சாளரம் அறிவற்றோ, அறிவுக்கு புறம்பாகவோ, அறிவை முற்றிலும் சாராமலோ இயங்க வாய்ப்பே இல்லை.

அறிவின் களஞ்சியம்தான் மொழி. தான் பெற்ற தனியறிவை, மற்றவர்களுக்கு பயன்படும் பொது அறிவாய் மாற்ற இங்கு மொழியென்ற மிகப்பெரிய அறிவு ஆயுதம் இன்றியமையாதது. அப்படி ஆயுதம் ஏந்திய இந்த மொழித்தீவிரவாதியை விருது கொடுத்து தட்டிக்கொடுத்திருக்கிறது கொரிய தமிழ்ச் சங்கம் (KTS).

நான் பெறும் முதல் 'தமிழ்' விருது இது. நான் இதுவரை அறிவியல் ஆய்விற்காக பெற்ற விருதுகள் அனைத்திற்கும் தலையாய விருது இது என்று கூறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழகத் தமிழர்களை விட மூன்றரை மணிநேரம் முன்பே கதிரவனை சுற்றித்திரிந்துகொண்டிருக்கும் கொரிய வாழ் தமிழ் நண்பர்களுக்கும், என்னை இவ்விருதுக்காக வழிமொழிந்த நண்பர்களுக்கும், தமிழிற்கும் எனது நனிமிகு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

-சக்தி

Halo பரிவேடம் அகல்வட்டம்

Halo - பரிவேடம் - அகல்வட்டம்
'அகல்வட்டம் பகல் மழை' என்பர்!
பொதுத்தமிழில் கோட்டை கட்டுதல் என்றுகூட சொல்வர்!
'வானம் கோட்ட கட்டுதுடா, காயவச்ச நெல்ல அள்ளி பத்தாயத்துல கொட்டுங்கடா'ன்னு எங்க அப்பா சொல்வார்!
Halo is nothing but photon (light) refraction by crystalized water.

As like Selected Area Electron Diffraction (SAED) create patterns of crystals, photons that comes from sunlight gets scattered by the crystalized water molecules present in the cloud!
So, this phenomena may be named as Selected Area Photon Refraction (SAPR)!

மிக எளிமையாய் கூறவேண்டுமானால், இது ஒரு நிறப்பிரிகை நிகழ்வுதான். மேகத்தில் ஒருங்கிணையும் நீர் மூலக்குறுகள், தங்களுக்குள் ஹைட்ரஜன் பிணைப்பினை ஏற்படுத்தி ஒத்துருபடிகத்தை (crystalization - ice formation) அடைகின்றன. அப்படிகமான நீர் மூலக்கூறுகள் முப்பட்டக கண்ணாடி (prism) போல செயல்பட்டு பரிதி (கதிரவன்) ஒளியையோ, நிலவொளியையோ சிதறடிக்கின்றன. இப்படியான நிகழ்வால்தான் Halo என்று அழைக்கப்படும் பரிவேடம் - அகல்வட்டம் - கோட்டை கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

சக்தி.
பதிவு: 08/09/2019, தஞ்சையிலிருந்து.

#தமிழ் #இயற்பியல் #physics #chemistry_of_physics #chemistry #physicalchemistry #physics_of_chemistry #halo #haloscience #refraction #scattering #ramanscattering #ice #cloud #naturephotography #nature #naturelover #cryatalization #crystal #hydrogenwater #hydrogenbonding

வியாழன், 5 செப்டம்பர், 2019

சிறந்த ஆசிரியன்

நண்பரொருவர், உங்கள் அலைபேசியில் MS word இருக்கிறதா என்றார், இருக்கிறதே, ஆனால் தேடுவது கடினம் என்று மைய பொத்தானை (Home key) நீண்ட நேரம் அழுத்தி, Hey google, open MS word என்றேன், உடனே MS word திறக்கப்பட்டது. அதைக் கண்டு அசந்து போன அதில் பரிச்சயம் இல்லா அந்த நண்பர், Google தான் சிறந்த ஆசிரியரென்றார்.

அவர் கூற்றுப்படி, கற்பிப்பவரெல்லாம் ஆசிரியரென்றால் இவ்வுலகின் மிகப்பெரிய அறிவு களஞ்சியமும், செயற்கை நுண்ணறிவை சிறுகச்சிறுக பெற்றுக்கொண்டிருக்கும் கையடக்க மிடுக்கலை பேசியே உலகின் ஆகச்சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும்!

ஆனால், அறிவாற்றல் மட்டுமே ஒருவனை ஆசிரியனாய்  உருமாற்றிவிடாது. அஃது அறிவுடன் கூடிய மனிதத்தின் உச்சமாகவே நான் எண்ணுகிறேன். பொருளிருந்தால் போதும் இவ்வுலகில் எதனையும் எளிதில் பெற்றுவிடமுடியும் என்ற பொதுபுத்திக்குள் அடங்காத ஒரே பண்டம் அறிவுதான். அப்படிப்பட்ட அறிவை ஊட்டவல்ல ஒருவர் எப்படி இருக்கவேண்டும், எப்படியான ஆடையை அணிய வேண்டும், ஆங்கில மொழியில் பேசவேண்டும், என்பதான தட்டை வடிவத்தைதான் சுற்றத்தார் பலர் சிறந்த ஆசிரியனுக்கு கொடுக்கிறார்களே ஒழிய ஆசிரியனின் கற்பித்தல் திறனை மதிப்பிடுவதே இல்லை. கற்பித்தல் திறனென்பது, ஆசிரியர் எவ்வாறு தாம் பெறும் அறிவை, தம்மின் உணர்வுகளுக்கோ, தற்பிடித்தத்திற்கோ, இடமளிக்காமல், ஒரு மாணவனுக்கு மடைமாற்றம் செய்கிறார் என்பதைப் பொறுத்தது!

உணர்வு மற்றும் தற்பிடித்தம் என்பது ஒருவற்கு பாலினம், குடும்பம், அரசியல், மதம், சாதி என்று எந்தவித தளத்திலும் இருக்கலாம். அப்படியான தமக்கான இறுக்கத்தையெல்லாம் பொருட்படுத்தாது, அறிவுக்கு எது உகந்ததோ அதனை மட்டும் மூளைகளுக்கிடையே பகிர்பவரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். மற்றபடி அவ்விறுக்கத்தை, தற்பிடித்தத்தை சார்ந்தே ஒருவரின் கற்பித்தல் இருக்குமாயின், அவர் சிறந்த பேச்சாளனாய் ஆகலாம், சிறந்த ஆசிரியனாய் அல்ல!

வாருங்கள் சிறந்த ஆசிரியனை உருவாக்க!

சக்தி.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன்



வானம் நீல நிறம்!
மேகம் வெள்ளை நிறம்!
மாலைக் கதிரவன்
சிவப்பு நிறம்!
சுற்றுச்சூழல் மாசுபாட்டால்
மேலும் அழகாகும் செங்கதிரவன்!
இவை நான்கிற்குமான
தொடர்பு ஒன்று உண்டு!!!
என்ன தெரியுமா?
தொடர்பு: 'ராலே ஒளிச்சிதறல்' (Rayleigh scattering).
நுண்ணிய துகள்களின் வழி ஒளி பயணிக்கும் பொழுது அதிக ஆற்றலும், குறைந்த அலைநீளமும் கொண்ட நீல நிறம் சிதறடிக்கப்படுகின்றன.

1. வானம் - நுண்ணிய துகள்களால் நிரம்பிய ஒரு பகுதி - ராலே ஒளிச்சிதறல் நடைபெறுவதால் நீலமாக காட்சி தருகிறது.

2. மேகம் - சிறிய முதல் பெரிய மூலக்கூறுகளால் நிரப்பப்பட்ட பகுதி - பெரும்பாலான நிறங்கள் சிதறடிக்கப்பட்டு நிறங்களின் கூட்டமைப்பால் வெண்மையாய் காட்சி தருகிறது. மழை மேகமாக இருப்பின், அது ஒளியை எதிரொளித்து மறுபக்கம் ஒளியை ஊடுருவவிடாமல் தடுப்பதால் கருநிறத்தில் காட்சிதருகிறது.

3. மாலையில் கதிரவன் நம் கண்பார்வைக்கு நீண்ட தொலைவில் இருப்பதால் அனைத்து நிறங்களும் வானம் மற்றும் மேக கூட்டங்களால் சிதறடிக்கப்பட்டு அதிக அலைநீலம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் நம் கண்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறது.

4. எனவே, சுற்றுச்சூழல் அதிகம் மாசடையும் நேரத்தில், அனைத்து நிறங்களும் செவ்வனே சிதறடிக்கப்படுவதால், கதிரவனின் சிவப்பு நிறம் மேலும் மெருகேறும். எனில், சுற்றுச்சூழல் மாசுபட்ட பகுதிகளில் நின்று மிக அழகிய கதிரவ மறைவை கண்டுகளிக்கலாம்.


சக்திவேல்