புதன், 18 ஜூன், 2025

அறிவியல் பேசுவோம்#02: கள்ளு vs பதனீர்


இன்று அதிகாலையில், ஏணிப்படிகள் இல்லா, பனைமரம் ஏறிக்கொண்டிருந்த வேளையில் திடீரென கீழே விழுந்துவிட்டேன்… விழித்துப்பார்த்தால், படுக்கையிலிருந்து கீழ்விழுந்திருக்கிறேன்.. இதென்ன எனக்கு வந்த சோதனை என சமூக ஊடகங்களை கண்ட பின்தான் தெரிந்தது, எனக்கு கொடுக்கப்பட்ட இன்றைய கேள்வித்தாளில், ஒரே கேள்வியாய் இருந்தது, “பனை மரம் பற்றி இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக” என்று.

தென்னை மரம், மாடு கதை போலத்தான்.. நானும் மாட்டைப்பற்றி, அதாவது அறிவியல் பற்றிதான் ஓரளவிற்கு தெரிந்துவைத்திருக்கிறேன். அதனால், அதைப்பற்றி எழுதிவிட்டு, இப்படிப்பட்ட மாடு அந்த மரத்தில் கட்டப்படுகிறது என்றே முடிக்கப்போகிறேன்..

கள்ளு, பதனீர்… நல்லதா? இதற்கான வேறுபாடு என்ன? எது சிறந்தது? இன்றைய சாராயத்திற்கு சிறந்த மாற்றா கள்ளு? அரசு ஏன் அதனை தடை செய்யவேண்டும்? இதற்கு பதில் கிடைக்குமா இந்த கட்டுரையில் என நினைத்து வாசிக்கத்தொடங்கினால், தக் லைஃப் படம் போல்தான் ஆகும். எனவே, எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாசிக்கத்தொடங்குங்கள்..

வாசிப்பு எனக்கு பிடித்த ஒன்று என்பதால், நான் பல வாசிப்பு பற்றியான குழுக்களில், பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பயணிக்கிறேன். அங்கெல்லாம், ‘கள்ளு என்பது நம் மரபு, அதனையும் தாண்டி அதில் உடல் நலக்கேடு என்பது இல்லை, சாராயம் குடிப்பதற்கு பதில் அதைக் குடிக்கலாம், அரசு அதனை ஊக்கப்படுத்தவேண்டும்’, என்று பல பதிவுகளைக் காண முடிந்தது இன்னும் ஒரு படி மேலே, கள்ளுண்ணாமை என்பதை வள்ளுவர் கூறினார், ஆனால் அது பனங்கள்ளு அல்ல, அது வேறு வகையான சரக்கு என பல தரவுகளையும் காண்பிக்கிறார்கள்.

சரி, இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அறிவியல்தான்.. வேறென்ன..

சிறுவயதில், என்னுடைய கிராமத்து சாலைகளில், பதனீ.. பதனீஈஈயேஏ…. என்று ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தையோ, மண் பாண்டத்தையோ மிதிவண்டியின் பின் வைத்துக்கொண்டு விற்றுக்கொண்டு செல்வார்கள்.. சில வயதானவர்கள், பெண்கள், நடந்து பதனீரை விற்று செல்வதை பார்த்திருக்கிறேன்.. அவ்வப்பொழுது, அம்மா என்னை வாங்கிவரச்சொல்லி, என்னையும் குடிக்கச்சொல்வார்கள்.. உடம்புக்கு ரொம்ப நல்லதுடா என்ற அவர்களின் அறிவுரையை கேட்டுக்கொண்டே குடித்திருக்கிறேன்…

ஆனால் வரலாற்றை கவனித்தால், கள்ளுக்கடையில் வாழ்க்கையை தொலைத்த பல குடும்பங்களின் கதை தமிழ்நாட்டில் உண்டு, கள்ளுக்கடைகளுக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட்ட மக்களை மாற்றி, நல்வாழ்வு வாழ வைக்கும் பொருட்டு, பலர் கள்ளுண்ணாமையை எடுத்தியம்பினர். கள்ளு இறக்கப்படுவதை தவிர்க்க, பனைமரங்களை வெட்டிய வரலாறும் தமிழ்நாட்டில் உண்டு. (அது சரியான நடைமுறையா என்றால், இல்லை என்பதே என்னுடைய பதில்.. அதற்கான உரையாடலை தனியாக வைத்துக்கொள்ளலாம்..)

கள்ளு vs பதனீர்

சுண்ணாம்பை கலயத்தில் தடவி, பனைமரத்திலிருந்து இறக்கினால் அது பதனீர் என்றும், சுண்ணாம்பு தடவாமல், அப்படியே எடுத்து, பயன்படுத்தினால் அதனை கள்ளு என்றும் கூறுகிறார்கள். அப்படி சுண்ணாம்பு என்ன செய்கிறது.

பனைமர பாலையிலிருந்தோ, நுங்கு தண்டிலிருந்தோ வடியும் திரவத்தில் பல்வேறுபட்ட வேதி மூலக்கூறுகளும், நுண்ணியிரிகளும் இருக்கும். நுண்ணியிரிகள் என்றால் பாக்டீரியா, பூஞ்சை என அனைத்தும் அடங்கும். அந்த திரவம், சொட்டு சொட்டாக பானையில் விழும் நொடியிலிருந்து, நொதிக்கத் தொடங்கிவிடும். நொதித்தல் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. அது ஒரு பால் தயிராகும் நிகழ்வு போலோ, இட்லி மாவு புளிக்கும் நிகழ்வு போலோதான்.

அந்த நொதித்தலை நிகழ்த்துவது, அந்த திரவத்தில் இருக்கும் நுண்ணியிரிகள்தான். இந்த நிகழ்வில், அந்த திரவத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை மூலக்கூறுகள், ஒருவேளை கூட்டு சர்க்கரையாக இருப்பின் ஒற்றை சர்க்கரைகளாக உடைபடும். பின் அந்த சர்க்கரை, ஆல்கஹாலாகவும் (எத்தனால்), கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றம் அடையும். எனில், கலயத்தில் வடியும் முதல் சொட்டிலேயே இந்த நொதித்தல் நிகழ்வு தொடங்கிவிடும், மாத தவணையில் அடைக்கப்படும் கடனில் வட்டி இணைவது போல, நொதிதல் நிகழ்வும், வடியும் ஒவ்வொரு சொட்டுகளிலும் நிகழும்.

அந்த கலயத்தை இறக்கி, அதனை வடிக்கட்டி, ஒரு பாத்திரத்தில் சேகரிப்பார்கள். அந்த பாத்திரத்திலும், தொடருந்து நொதித்துக்கொண்டே இருக்கும். இதற்கு தமிழர்கள் தம்முடைய மரபில் வைத்திருக்கும் பெயர் புளித்தல். இது மிகச்சரியான பெயர்.. ஏனென்றால், நொதிதல் நிகழ்வில் அதிகப்படியான அமிலங்கள் உருவாகும். கார்பன் டை ஆக்சைடு வாயுவும் கூட நீருடன் சேர்ந்து கார்போனிக் அமிலமாக மாறி, அமிலத்தன்மையை உருவாக்கும் (CO2 + H2O à H2CO3). முதல் வினாடியிலிருந்து நொதிக்கத்தொடங்கியவுடன் உருவாகும் எத்தனால், நுண்ணுயிரிகளின் ஆசியுடன், மேலும் ஆச்சிசனேற்றம் அடைந்து அசிட்டிக் அமிலமாக மாறும். அதனால்தான், கள்ளு இறக்கிய நேரத்திலிருந்து குறிப்பிட்ட நேரம் வரை அதில் ஆல்கஹால் அதிகரிக்கும், பின் ஆல்கஹாலின் அளவு குறையத் தொடங்கும். குறைந்தது 4-5% முதல் அதாவது ஒரு பியரில் இருக்கும் ஆல்கஹால் அளவிலிருந்து அதிகபட்சம் 10-15% வரை ஆல்கஹாலானது அதிகரிக்கும் (நொதிப்பிற்கு தேவையான நுண்ணியிர்களின் அளவை பொறுத்தது), பிறகு அந்த அளவு குறையத்தொடங்கும். இதனை எளிதில் கண்டறிய, அதனுடைய அமிலத்தன்மையை அதாவது புளிப்புத்தன்மையை ஆராய்ந்தால் போதும். (பூஞ்சை – ஈஸ்டானது இரட்டை/கூட்டு சர்க்கரைகளை ஒற்றை சர்க்கரைகளாக மாற்றும், பின் கிளைக்கோலைசிஸ் நடைபெறும் – பின் பாக்டீரியாவிலிருந்து உருவான நொதிகள் – அந்த சர்க்கரையை எத்தனாலாகவோ, பிற வேதி பொருட்களாகவோ மாற்றும் – நொதித்தலின் கடைசி நிலையாக எத்தனால் – அசிட்டிக் அமிலமாக மாறும்)

கலயத்தில் சுண்ணாம்பைத்தடவி அந்த வடிநீரை சேகரிக்கும்பொழுது, அந்த சுண்ணாம்பின் வேதியியல் பண்பிற்கு தகுந்தாற்போல, வேதிவினைகள் நடைபெறும். மரபு சார்ந்து பார்த்தால், பதனீருக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பானது, நீர்வாழ் உயிரிகளின் ஓடுகளிலிருந்து பெறப்படுவதால், அதில் அதிகப்படியான கால்சியம் கார்பனேட் இருக்கும். இந்த கால்சியம் கார்பனேட் நீரில் கரையாத கனிம உப்பு. உப்பு என்றால், அமிலமும் காரமும் இணைந்து உருவாகும் கலவை. (எகா: சோடியும் குளோரடு நமக்கு தெரிந்த உப்பு – அதில் சோடியம் ஹைட்ராக்சைடு என்பது காரம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் – அமிலம்: NaOH + HCl à NaCl).

இந்த கால்சியம் கார்பனேட், நீருடன் அவ்வளவு எளிதில் வினைபுரிவதில்லை, ஆனால் பனை நீரானது அதில் படுகையில், இரண்டு வகையில் வினைக்கு உட்பட வாய்ப்புள்ளது. ஒன்று, இந்த கால்சியம் கார்பனேட், பஃபராக (Buffer - கார அமில நிலைப்படுத்தி) செயல்பட்டு நொதிக்கும் நிகழ்வை கட்டுப்படுத்தும். இரண்டு, நொதித்தலின்பொழுது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு உதவியுடன், நீருடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட் என்ற நீரில் கரையும் உப்பை உருவாக்கும். இந்த நீரில் கரையும் உப்பு, முன்பு குறிப்பிட்டது போல ஒரு கார அமில நிலைப்படுத்தியாக செயல்படும்.

(CaCO3 + H2O + CO2 à Ca(HCO3)2)

பொதுவாக, ஒரு நொதித்தல் நிகழ்வின்பொழுது அதிக்கப்படியான கரிம அமிலங்கள் உருவாகும், அந்த அமிலங்கள்தான், ஆல்கஹால் உருவாக்கத்திற்கும், தொடர்ந்து நொதித்தல் நிகழ்வை செயல்படுத்தவும் காரணமாகின்றன. அந்த அமிலம், வடிநீரில் ஒரு அமிலத்தன்மையை உருவாக்கும், அதனை இந்த கால்சியம் கார்பனேட் மாற்றியமைக்கும். எனவே நொதித்தல் தடைபடுகிறது, ஆல்கஹால் உருவாக்கம் நடைபெறுவதில்லை.

இப்பொழுது இந்த அறிவியலின் வழி, கள்ளு/பதனீரின் நன்மை தீமைகளை பார்ப்போம்..

கள்ளோ, பதனீரோ, எதுவானாலும் அதில் பல்வேறு உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கின்றன. அதாவது, வைட்டமின்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆற்றலை கொடுக்கவல்ல கார்போ ஹைட்ரேட், நுண்சத்துகளான, பொட்டாசியம், கால்சியம், சோடியம், நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் என பல இருக்கின்றன. அதே வேளை தீமையை கொடுக்கும் நுண்ணியிர்களும் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக, நொதித்தல் நிகழ்வானது, அது நிகழும் மொத்த நேரத்தைப்பொறுத்து அதில் பல்வேறு சத்து இழப்பானது நிகழ்கிறது. நொதிக்கும் நேரம் அதிகமாக அதிகமாக, எத்தனால் அதிகமாகிறது, அதே வேளை வைட்டமின்களின் அளவுகள், கார்போ ஹைட்ரேட்டின் அளவுகள் குறைகின்றன.

எனில் பதனீர், கள்ளை விட சிறந்தது எனலாம்.

இப்பொழுது அறிவியல் கொண்டு, சமூக சிக்கல்களையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்..

1.   என்னதான் பல நன்மைகள் இந்த கள்ளிலும், பதனீரிலும் இருந்தாலும், அந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு, மற்ற வெகு சாதாரண உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் கிடைக்கப்பெறும். அவ்வளவு ஏன், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். எனவே அந்த குறிப்பிட்ட சத்துகளுக்காகவேண்டி, கள்ளை தேடிப்போக அவசியம் இல்லை.

2.   என்னதான் பதனீர் நல்லது என்றாலும், அதிலும் பல பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, அதில் செய்யப்படும் கலப்படம், அதீதமாக பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு, சுண்ணாம்பில் இருக்கும் கழிவுகள், திரந்த பரப்பில் தயாரிக்கப்படும்பொழுது ஏற்படும் சுகாதார பிரச்சனை, கெடுதல் விளைவிக்கும் நுண்ணியிரிகளின் இருப்பு என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

3.   பதனீர் இறக்க தடையென்றால், எப்படி நமக்கு கருப்பட்டியும், பனக்கற்கண்டும் கிடைக்கும்!

4.   பதனீரில் இருக்கும் பிரச்சனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றிலும் இருக்கத்தானே செய்யும் என்றால், இல்லை.. ஏனெனில் அவற்றை நன்கு கொதிக்கவைத்தே உருவாக்குகிறார்கள், மேலும், அதனை பயன்படுத்தும்பொழுதும் நாம் நன்கு கொதிக்கவைத்துவிடுகிறோம் அதனால், அதில் உள்ள சிற்சில பிரச்சனைகள் நீங்கி, நன்மை மட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால், கள்ளு/பதனீரில் அப்படியல்ல.. நேரடியாக உட்கொள்கிறோம்.

5.   இப்பொழுது இருக்கும் செயற்கை சாரயத்திற்கு மாற்றாக கள்ளை முன்னிலைப்படுத்தும் சிந்தனையாளர்கள், ஏன் கள்ளில் உள்ள சமூக பிரச்சனையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? கள்ளு இறக்கும் கடினமான நடைமுறை (அனைத்து பனைமரங்களிலும் ஏணிப்படிகளை அமைத்து, அனைத்து கருக்குகளையும் நீக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது), அந்த வேலையை செய்யும் ஒரே சாதி நடைமுறை, அதிக தேவை ஏற்பட்டால் அதிகமாகிவிடும் கலப்படம், சுகாதாரமற்ற செய்முறை என பலவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். கள்ளு இறக்கும் தொழில் செய்யப்போகிறேன் என உங்களின் மகனோ, மகளோ கூறினால், அதனை ஆதரிக்கும் செயல்பாட்டாளர்கள் யாரும் இருப்பார்களோ!

6.   மனிதன் ஒரு போதை விரும்பி – இந்த சமூக சிக்கலை தீர்ப்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், உடல் வலிக்காக போதையை நாடி செல்பவர்கள் மீதுமட்டும்தான் நம்முடைய கண்கள் பெரும்பாலும் துடிக்கின்றன. அவர்கள் உடல் நலத்திற்காகவும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அரசு ஒரு நடைமுறையை கையாளவேண்டும். நட்சத்திர விடுதியில் கிடைக்கும் தரமான சாராயம், எளிய மக்களுக்கும் கிடைக்கசெய்யவேண்டும். அந்த சாராயத்தில், எத்தனாலின் அளவை குறைத்து, புரதம், மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும்வண்ணம் அதனை முறைப்படுத்தவேண்டும்.

7.   கள்ளு ஒரு போதைப்பொருளே, அது என்றும் இப்பொழுது விற்கப்படும் சாராயத்திற்கு மாற்றாகாது. ஆனால், இந்த சாராயத்துடன், கள்ளும் விற்கப்படவேண்டும். ஆனால், அதன் தயாரிப்பை முறைப்படுத்தி, சந்தைக்கு கொண்டுசெல்லவேண்டும்.

8.   ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு போதை பொருள் இருக்கவே செய்கின்றன. அரிசியில், பார்லியில், பனையில், தென்னையில், ஈச்சையில், கோதுமையில், பழங்களில், என பலவற்றிலிருந்தும் ஆல்கஹாலை/போதைப்பொருளை உலகம் முழுவதும் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அனைத்திற்கும் உரிமை உண்டு ஆனால், பனைக்கு மட்டும் இல்லை என்பது வேடிக்கையானது. அதனால், அதனை முறைப்படுத்தி, தரச்சான்றிதழ் கொடுத்து அனுமதிக்கவேண்டும்.

9.   ஒரு நாளில் கெட்டுவிடும் இந்த கள்ளை அதிக நாட்களுக்கு எப்படி கெடாமல் வைக்கலாம், எப்படியான வேதிவினைகள் நிகழ்கின்றன, எப்படி தரத்தை உயர்த்தலாம் போன்ற அறிவியல் ஆய்வுகளை நடத்த அரசு முன்வர வேண்டும்.

10. இந்த ஆய்வுகளுக்கு GC-MS, LC-MS, LC-MS-MS, MALDI-TOF, ICP-MS, XRF/XPS போன்ற பொறிகள் அவசியமாதலால், அதனை பெற ஆய்வாளர்களுக்கு பண உதவியையும் செய்துகொடுக்கவேண்டும், அரசு. (GC-MS: எளிதில் ஆவியாகும் அதே வேளை, வெப்ப நிலைப்புத்திறன் இருக்கும் மூலக்கூறுகளை அறிய; LC-MS/LC-MS-MS: எளிதில் ஆவியாகாத, வெப்ப நிலைப்புத்திறன் இல்லாத, ஆனால் கரையும் தன்மையில்/போலாரிட்டி குறியீட்டில் வேறுபாடு இருப்பின் அந்த மூலக்கூறுகளை அறிய; MALDI-TOF: நிலைபுத்தன்மையும் இல்லாமல் மிகப்பெரிய மூலக்கூறாகவும் இருக்கும் மூலக்கூறுகளை அறிய; ICP-MS: தனிமங்களை அறிந்துகொள்ள; XRF/XPS: வெளிப்புற தனிமங்களை அறிய)

(குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும், குடிக்கு அடிமையாகாமல், நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்)

 

- சகா…

அறிவியல் பேசுவோம்#01: அறிமுகம்

 அறிவியல்... இன்னமும் நம்முடைய சமூகம் இதை எப்படி அணுகுகிறது? அறிவியல்வயப்பட்டதா நம் சமூகம்?

உண்மையை சொல்லவேண்டுமானால், அறிவியல் வளர்ச்சி என்பதை இயற்கைக்கு எதிரானது என்ற பார்வையில்தான் அணுகுகிறது நம் தமிழ்ச் சமூகம்..
அறிவியல் என்பது இயற்கையை அறிதல்தான்.. இயற்கை எப்படி வேலை செய்கிறது? எந்த மாயமந்திரமோ, கடவுளின் அருளோ இல்லாமல், மூலக்கூறுகளின் அமைப்பினாலோ, அம்மூலக்கூறுகளில் இருக்கும் நுண்ணிய அணுக்கள் மற்றும் துணை அணுத்துகள்களாலோ எப்படி இயற்கை இயங்குகிறது என்பதை அறிவதே இயற்கை.
ஆனால் தொழில்நுட்பம் என்பது, அறிவியல் கொண்டு தெரிந்துகொண்ட இயற்கை விதிகளை வைத்து அதனை மிமிக் செய்வதுபோல உருவாக்கப்படும் கருவி. அது அறிவியலின் வளர்ச்சி என்று கூறுவதைவிட, அறிவியலைக் கொண்டு மனிதன் உருவாக்கிக்கொண்ட, மனித வாழ்வை எளிமைப்படுத்தும் ஒரு பொறி என்றுவேண்டுமானால் புரிந்துகொள்ளலாம்.
எப்படி வெறும் மரக்கலப்பை கொண்டு உழுவது எளிதாக இல்லையென உலோகத்தில் கலப்பை செய்தோமோ, அப்படிதான்...
என்னதான் இயற்பியல் (அறிவியலில் ஆதி) விதிப்படி நேரத்தை முன் பின் என இருபுறமும் கடக்க இயலும் எனினும், ஒளியின் வேகத்தை எட்டிப்பிடிக்கும் ஒரு கருவி வரும் வரை, நாம் முன்னோக்கி மட்டுமே பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படியான பயணம், ஒரு நிலைப்புதன்மையில் இருந்துவிடுவதில்லை.. அடுத்தடுத்த நிலைக்கு செல்வதுதான் வழக்கமான ஒன்று. அப்படிதான் வெற்றுடலாய் இருந்த மனிதனுக்கு இலைதழை வைத்து மறைக்கும் அறிவு கிட்டியது, பின் பருத்தியை தெரிந்துகொண்டான், அதை ஆடையாக்கினான்.. பட்டு, வுல் என சென்று பின் நைலான் போன்ற இயற்கை உதவியுடன் மனிதன் உருவாக்கிய இழைகள் கொண்டு ஆடை செய்தான்..
இன்னும் அடுத்த நிலையில் ஸ்மார்ட் ஆடைகள் வந்துவிட்டன.. அதுவே பெண்களின் மாதவிடாய் நேரத்தில் அணிய நாப்கின்களுக்கு பதில் ஸ்மார்ட் நாப்கின்கள் என்ற புதிய கண்டுபிடிப்பும் வந்திருக்கிறது. அதில் இருக்கும் சிறிய கருவி, அந்த மாதவிடாய் இரத்தத்தில் இருக்கும் சில பயோமார்க்கர்களை அறிந்துகொண்டு, அந்த பெண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என தெரிந்துகொள்ள உதவுகிறது.
எனில் அறிவியல் என்பது இயற்கை அறிதல்
தொழில்நுட்பம் என்பது மனித வாழ்வை எளிமைப்படுத்தும் பொறி உருவாக்கல்..
அந்த பொறி மனிதவாழ்வை மேம்படுத்தும், எளமைப்படுத்தும், மெருகூட்டும்.. ஆனால் சில வேளைகளில் அது மனிதனுக்கு எதிராகவும் அமையலாம். அதற்கு அறிவியலை, அதாவது இயற்கை அறிதலை குறை கூறுதல் அர்த்தமற்றது. அந்த அறிவியல் கொண்டு, தனி மனிதன், தன் லாபத்திற்காக, மனிதமற்று நடந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல் அது. எப்படி மன்னராட்சி முறை சமூகநீதிக்கு எதிராக இருந்ததால், அதனை அப்புறப்படுத்திவிட்டு மக்களாட்சி முறையை கொண்டுவந்து அதை முறைப்படுத்தி வைக்கிறோமோ, அப்படிதான் இந்த தொழில்நுட்பத்தையும் முறைப்படுத்த வேண்டும். பல ஆய்வுகள் நடக்கவேண்டும்..
அதைவிடுத்து, அறிவியலைவிட பாரம்பரியம், மரபு மட்டுமே முக்கியம் என நினைத்தால், ஆடையற்ற நிலைக்குதான் அந்த எண்ணம் கொண்டுபோய்விடும். அதனால் மரபையும் முழுவதும் மறக்கவேண்டுமன கூறவில்லை. மரபு என்பது தொடர்ச்சியற்ற அறிவியல்..
அதனை அடுத்தநிலைக்கு எடுத்துசெல்வதை விடுத்து இன்னமும் மரபையே பிடித்துக்கொண்டு இருப்பது, சமூகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவாது. அதன் விளைவுதான் இன்னமும் நம்மிடம் இருக்கும் சாதி, மத, சோதிட நம்பிக்கைகள்..
அறிவியல் பேசுவோம்#01
(அறிவியல் - இயற்கை அறிதல்
தொழில்நுட்பம் - அறிவியல் கொண்டு மனிதன் உருவாக்கிக்கொண்ட பொறி
மரபு - தொடர்ச்சியற்ற நிற்கும் அறிவியல்)
- சகா..

ஞாயிறு, 30 மார்ச், 2025

அதீத வெப்பத்திலும் நிறம் மங்கா ஒளியுமிழ் சில்லுகள் – ரிமோட் நிறமாற்றிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு:




நீங்க ஒரு சிறந்த பிரகாசமான ஒளியுமிழ் சில்லு வகை விளக்கை உருவாக்கணும், அதுவும் எப்போதுமே ஒளி மாறாம ஒளிரணும் என்றால், அது பெரிய சவால்தான்! இதுக்காக பல அறிவியலாளர்கள், பல சிறந்த கண்டுபிடிப் பண்ணிருக்காங்க! 

நம்ம வீட்ல வெப்ப ஒளிரிகளான குண்டு விளக்குகளுக்கும், உமிழ் ஒளிரிகளுக்கும் (ட்யூப் விளக்கு) பதிலா, ஒளியுமிழ் சில்லுகள (LED விளக்குகள்) பயன்படுத்த தொடங்கி பல நாட்கள் ஆகுது.. ஏன்னா, ஒளியுமிழ் சில்லுகள் மின்சாரத்தை சேமிக்க பயனுல்லது என எல்லோரும் அறிந்ததே. ஆனா அந்த சில்லுகளுக்குள்ள இருக்கும் நிறமாற்றி - பாஸ்பர் (phosphor, பாஸ்பரஸ் இல்லை) அப்படின்னு ஒரு பொருள் அதிகமான வெப்பத்துக்கு பாதிக்கப்பட்டு, நேரம் போகப் போக ஒளி மங்கிடலாம் அல்லது நிறம் மாறலாம்...

எங்கிருந்து வெப்பம் வருது, நிறமாற்றி என்னமாதிரியான வேலை செய்யுதுன்னு கேக்குறீங்களா?

இதபத்தி அதிகமா தெரிஞ்சிக்க, இதே வலைப்பூவில் முன்பே பதிவிடப்பட்டிருக்கும் கட்டுரைகள வாசிங்க.. சுருக்கமா சொல்லணும்னா, ஒரு சில்லு ஒளிர அதுல உள்ள குறைக்கடத்திகளுக்கிடையே எலெக்ட்டான் தாண்டவம் ஆடிட்டி இருக்கும், அதுனால அதுல அதிகமான வெப்பம் உருவாகும். அதேபோல, நிறமாற்றிய ஏன் பயன்படுத்துறாங்கன்னா, அது ஒரு பெரிய கத.. கொஞ்சம் குட்டி கதயா சொல்ல முயற்சி பண்றேன்..

ஒரு ஒளியுழ் சில்லு, சில நிறங்களதான் உமிழும்.. ஆனா நம்மோட வாழ்வுங்கிறது பல்லாயிரம் ஆண்டுகாலமா சூரிய ஒளியோட தயவுலதான் நடந்திருக்கு. அதுனால, நம்மோட சிர்காடியன் ரிதம – அப்டின்னா என்னான்னு துணை கேள்வியெல்லாம் கேக்கப்படாது.. சிர்காடியன் ரிதம்னா – ஒரு சீரான இசைவு என்று மொழிபெயர்க்கலாம். ஒரு இசைக்கு இதுவரைக்கும் ஆடி பழக்கப்பட்டுட்டு, திடீர்னு ஒரு புது இசைய போட்டா, நம்ம காலு ஆடுமோ.. தடுமாறும். அதேமாதிரி, சூரியனோட வெள்ளை ஒளில வாழ்வ சிவனேன்னு நடத்திக்கிட்டு இருக்குற நம்ம உடம்பு, திடீர்னு ஒரு நிறத்த மட்டும் வச்சி ஒளி உருவாக்குனா, ஏத்துக்குமா.. ஏத்துக்காது, அதுனால அந்த ஒளியுமிழ் சில்லுகளோட நிறத்த வெள்ளையா மாத்தனும். ஃபேரன் லவ்லி, ஃபேர் எவெர் போட்டா வெள்ளையாகிடிமா…! ஆகாது இல்லையா… அதனாலதான், நிறமாற்றிகள அந்த சில்லுகள் மேல பொருத்திடுறாங்க. சில்லுலேர்ந்து வர நிறம் குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறமா இருந்தாலும், அத நீளமான அலைகளா மாத்தி மஞ்ச நிறம் கலந்த சிவப்பா மாத்திடும் அந்த நிறமாற்றிகள்.. அந்த மஞ்ச நிறம் கலந்த சிவப்போட, நீல நிறம் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடச்சிடும். கை தட்டாதீங்க.. இன்னும் கத முடியல..

ஓ,.. கொசுவ அடிக்கிறீங்களா… செரி, செரி கதய தொடந்து வாசிங்க..

அந்த வெப்பம் இருக்கே, அது அந்த நிறமாற்றிகள சிதச்சிடுச்சின்னா… ஏன் சிதைக்குதுன்னா.. ஏன்னா, என்ன இருந்தாலும் அதுவும் ஒரு வேதிப்பொருள்தானே, அதுக்கும் இருக்கும்தானே அச்சம், மடம், நாணம், அப்புறம் என்ன.. பயிர்ப்பூஊஊஊஊ….

நிறமாற்றியோட வெப்பத்த தாங்கமுடியாத பண்பு காரணமா, இந்த பிரச்சனைய நாம எதிர்கொள்ளவேண்டியதா இருக்கு. இந்த பிரச்சனைக்கு பல தீர்வுகள ஆய்வாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தாலும், ஒரு மிகமுக்கிய தீர்வா அமைவது என்னன்னா, ரிமோட் பாஸ்பர்..

டீவி ரிமோட் மாதிரியேதான், தூரத்துல இருந்து நீங்க டிவியோட சாளரத்த மாத்தமுடியும்னா, நிறத்த மாத்த முடியாதா என்ன.. அத செய்றதுக்கு, நிறமாற்றிய ஒரு மெல்லிய தகடுமோல செஞ்சி அத, சில்லோட தொடர்புல இருக்குறமாதிரி பொருத்தாம, கொஞ்சம் இடைவெளி விட்டு பொருத்தும்போது, சில்லோட நிறம் மட்டும் அதுமேல பட்டு, வெள்ளை நிறத்த கொடுக்கும். சில்லுல உருவாகுற வெப்பம், அது மேல படுறதுக்குள்ள அந்த வெப்பநிலை குறையுறதுனால, வெப்பத்தால ஏற்படும் பிரச்சன இல்லாம போகும்.

எங்களோட குழுவும், அந்த ரிமோட் நிறமாற்றிகள உருவாக்குற ஆய்வுகள செஞ்சிகிட்டு வறோம்.. அத பத்தி மேலும் தெரிஞ்சிக்க, கீழ இருக்க இணைப்ப ஒரு தட்டு தட்டுங்க..

1.  https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0272884220302893
2. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0272884213013643
3. https://pubs.rsc.org/en/content/articlelanding/2015/ra/c5ra05362e/unauth
4. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0254058422006356
5. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022231320316318
6. 10.1007/s12200-025-00150-w.


-சகா..

வெள்ளி, 6 டிசம்பர், 2024

2024 - Nobel prize

ஒரு உயிரினத்தின், ஒவ்வொரு செல்லிலும் அதன் டிஎன்ஏவின் நகல் உள்ளது. இது அந்த உயிரினத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது. ஒரு உயிரினத்தைக் கட்டியமைக்கவும், பராமரிக்கவும் புரதங்கள் (proteins) முக்கியத்தேவை. செல்களில் இருக்கும் டிஎன்ஏயில், அந்த செல்களுக்கு தேவையான புரதங்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு புரதத்திற்கும் தனித்துவமான ஒரு செயல்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, ஹீமோகுளோபின் நம்மால் சுவாசிக்கப்படும் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பொறுப்பாக உள்ளது.
ஒரு உயிரினத்தின் மொத்த டிஎன்ஏவில் உள்ள ஒவ்வொரு புரதத்தையும் உருவாக்க வழிமுறைகளின் தொகுப்பே ஜீன் (gene) என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களின் டிஎன்ஏவில் சுமார் 19,000 முதல் 20,000 ஜீன்கள் உள்ளன. உடலின் அனைத்து செல்களும் இந்த ஜீன்கள் அனைத்தையும் கொண்டிருக்கும், அதாவது அனைத்து புரதங்களையும் உருவாக்குவதற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் எந்த செல் தான் தேவையான புரதங்களை மட்டுமே உருவாக்கும்… 20,000 புரதங்களையும் உருவாக்கிவிடாது.

ஜீன் வெளிப்பாடு (Gene expression) என்பது ஒரு ஜீனில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி ஒரு புரதத்தை உருவாக்கும் செயல்முறை ஆகும். ஒரு குறிப்பிட்ட செல் அதன் செயல்பாடுகளுக்குத் தேவையான புரதங்களை மட்டுமே உருவாக்கும். உதாரணமாக, சிவப்பு இரத்த அணுக்கள் ஹீமோகுளோபினை உருவாக்குகின்றன, ஆனால் வயிற்று செல்கள் அதை உருவாக்காது.

ஒரு செல் ஒரு புரதத்தை உருவாக்க விரும்பும்போது, முதலில் அந்த ஜீனின் தற்காலிக நகலை - மெசஞ்சர் ஆர்என்ஏ (messenger RNA அல்லது mRNA) அனுப்புகிறது. ஜீனில் உள்ள தகவலின்படி mRNA நகலை உருவாக்கும் செயல்முறையை டிரான்ஸ்கிரிப்ஷன் (transcription) என்று அழைக்கிறார்கள். ஒரு ஜீன், mRNAவாக மாற்றப்பட்டு, அதற்குத் தேவையான புரதம் உருவாக்கப்படும் செல்களில் மட்டுமே செயல்படுகிறது.

mRNA உருவான பிறகு, செல் அந்த புரதத்தை நிறுத்தும்வரை தொடர்ச்சியாக உருவாக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் இது நிறுத்தப்பட வேண்டும். இதை கட்டுப்படுத்தவில்லையென்றால், தேவைக்கு அதிகமாக புரதம் உருவாகி செல்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக புற்றுநோயை உருவாக்கலாம்.
ஆனால் குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர், அந்த புரதம் உருவாக்கம் தானாக நின்றுவிடுவது வழக்கம். நீண்ட காலமாக, இப்படியான புரத உற்பத்தி நிறுத்தம் (post-transcriptional gene regulation) தன்னியல்பாக mRNAவுடன் தொடர்பு கொண்டதாகவோ அல்லது  அதன் குறைந்த நிலைத்தன்மையால் அப்படி நிகழ்வதாகவோ உருவகித்துக்கொள்ளப்பட்டது. 
ஆனால்…. Ambros மற்றும் Ruvkun என்ற வல்லுனர்கள் புதிய விதமான கட்டுப்பாட்டு முறையை கண்டறிந்தனர். புரத உற்பத்தியை ஒழுங்கு செய்வதற்கான ஒரு சிறிய RNA அணி மைக்ரோ ஆர்என்ஏ (microRNA அல்லது miRNA) எனும் நுண்ணிய RNA மூலக்கூறுகள் mRNAகளை கட்டுப்படுத்தி, புரத உற்பத்தியை தடுக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். இந்த மைக்ரோ ஆர் என் ஏ வையும், நம் செல்தான் உருவாக்குகிறது என்பது கூடுதல் தகவல். 
இந்த மைக்ரோ ஆர்என்ஏ உருவாக்கம் நிகழாமல் போனால் கூட, புற்றுநோயை உருவாக்கும் ஜீன், தையதக்கா தையதக்கா வென குதிக்க தொடங்கிவிடும்.. அந்த ஜீனைவிட, புற்றுநோய் மருத்துவர் அதீதமாக மகிழ்ச்சியை அடைவார்.

சனி, 8 ஜூலை, 2023

Electra - an electric vehicle


இன்னைக்கு வெதர் எப்படி என்று கேட்டதும் மகன் அலைபேசியில் பார்த்துவிட்டு, இன்னைக்கும் சன் ஸ்ட்ரா போட்டுதான் உறிஞ்சுறாரு என்றான்.. 

இந்த உச்சி வெயிலில் மகிழுந்தில் வேண்டா வெறுப்பாய் சென்றுகொண்டிருந்தபொழுது, சட்டென வேகம் தடைபட்டது தெரியவந்தது.. 

என்னாச்சிப்பா..

தெரியலயே, டயர்ல காத்து இல்லையோ..

என்னப்பா இது, காத்து இல்லன்னா உங்களுக்கு உள்ளயே தெரியாதா..

தெரியாதே..

ஏன், ஒரு சென்சார வச்சிக்க கூடாதா..

புரியலயே..

அதான்பா.. அந்த சென்சார்னு ஒன்னு சொல்வீங்களே, அத ரயர்கிட்ட வச்சிட்டா அது நமக்கு சொல்லுமே, காத்து இருக்கா இல்லையான்னு..

அடடா, நல்லாருக்கே ஐடியா..

ஆமாப்பா, நான் டிசைன் செய்யப்போற கார்ல, அந்த சென்சார வச்சிடுவேன், கூடவே மிரர்கும் வைபர் வச்சி, மழ பெஞ்சா கூட அதுல வாட்டர் டிராப்ஸ் நிக்காம தெளிவா தெரியுறமாதிரி செஞ்சிருவேன்.. 

அப்புறம்..

அது கூர மேல சோலார் பேனல வச்சிட்டு, கீழ பேட்டரிய வச்சிட்டனா, பெட்ரோல் டீசல்லாம் போட வேண்டிய தேவயில்ல..

ஓ.. சூப்பரு.. காரோட பேரு என்ன வச்சிருக்கீங்க..

எலக்ட்ரா..

அட்டகாசம்.. வேற என்னலாம் உங்க எலக்ட்ரால இருக்கும்..

வேற என்னனாக்க, இப்ப ஆல்கஹால் குடிச்சிட்டு வண்டிய கவுத்துடுறாங்கள, அதனால உள்ளயே ஒரு சென்சார வைக்கபோறேன்.. அதனால, ஆல்கஹால யாரும் குடிச்சிட்டு கார ஓட்ட உக்காந்தா, கார் ஸ்டார்ட் ஆகாது.. அப்புறம் பின்னாடியா போயி பார்க் பண்ணும்போது, ஏதும் இடிக்கிற மாதிரி தெரிஞ்சா தானா பிரேக் போடுற மாதிரியும் செஞ்சிருவேன்..

சரியா போச்சி.. அப்ப குடிச்சிட்டு யாரும் கார ஓட்ட முடியாது.. அப்படிதான..

இல்லப்பா, தண்ணி குடிச்சிட்டு ஓட்டுனா பிரச்சின இல்ல, ஆல்கஹால குடிச்சாதான் பிரச்சன.. ஒருவேள கார ஸ்டார்ட் பண்ணிட்டு ஆல்கஹால குடிச்சாங்கனா, கார்ல இருக்க சென்சார் எமர்ஜென்சி லைட்ட ஆன் பண்ணிவிட்டு நேப் நேப்னு சத்தம் போட வைக்கும்.. பக்கத்துல இருக்க போலிஸ் வந்து ஈசியா புடிச்சிடலாம்..

அதுசரி.. இப்படி எல்லா சென்சாரையும் வைக்கிறீங்களே, அதோட வெல என்னவரும்..

அது ஒரு ஆயிரம் ரூபாய் வரும்..

அப்ப எனக்கு ஒன்னு பிரீபுக் பண்ணிக்கோங்க.. 

ஓகே ஓகே.. நீங்க போயி இப்ப ஸ்டெப்னிய மாத்துங்க..

****

(அவரே வரைந்த எலக்ட்ராவின் புளூபிரிண்ட் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.. மேலும்,

வேறு யாருக்கெல்லாம் இந்த எலக்ட்ரா வேண்டுமோ, எனக்கு ஆயிரம் ரூபாயை ஜிபே பண்ணிவிடவும்.. எப்பொழுது கார் டெலிவரி என்று கேட்கவேண்டாம், ஜிபே செய்த தொகை நம்ம ஜீக்கு அனுப்பியது எனக்கொள்ளவும்..)

-சகா..

14/04/23

செவ்வாய், 13 டிசம்பர், 2022

Chemistry of physics

நமக்கு ஏதாச்சும் அடிபட்டு காயமாகிடிச்சின்னா நமக்கு எந்த தனிமத்த (element) ரொம்ப பிடிக்கும்? 
இப்படியான கேள்வியை வேதியியல் படிக்கும் மாணவர்கள் விளையாட்டாக கேட்பது வழக்கம்.. அதற்கான பதிலாக அவர்கள் சொல்வது, 
'ஹீலியம்.. ஏன்னா அது காயத்தை ஹீல் பண்ணிடுமே... ஹஹஹ'

இதற்கு அந்த ஹீலர் பாஸ்கரே பரவாயில்லையே என்ற முடிவுக்கு எதிரில் நிற்பவர் வந்துவிடுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.. 

அந்த வேளையில், இன்னொருவர் கமுக்கமாக, 'டாக்டருக்கு புடிச்ச தனிமம் என்னன்னு டக்குன்னு சொல்லு பாப்போம்' என்று கேட்க, விழிபிதுங்கி நிற்கும் அந்த ஹீலர் பாஸ்கரின் அனுதாபியிடம், மனசாட்சியே இல்லாத நம்முடைய டக்குவாயன் 'கியூரியம் (96Cm).. ஏன்னா அதுல கியூர் இருக்கே' என்பார்..

சரிசரி ம்ச் கொட்டாதீர்கள்.. சட்டென மேட்டருக்கு வருகிறேன்.. 
இப்படியாக தனிமம் என்று சொல்லப்படுபவைகள் யாவும் சிங்கம் போல சிங்கிலாகவே இருந்துவிடுவதில்லை.. நிலைப்பு தன்மையை பெறுவதற்காக சேர்மமாக இயற்கையாகவே மாறிவிடுவதுண்டு.. அதில் ஹைட்ரஜன் (H2), ஆக்சிஜன் (O2), நைட்ரஜன் (N2) போன்றவைகளும் அடங்கும்.. ஆனால் ஹீலியம் போன்ற சில தனிமங்கள் தனிமங்களாகவே இருக்கும்..  குறிப்பாக ஹீலியத்தின் குடும்ப உறுப்பினர்களான Ne, Ar, Kr, Xe போன்றவைகளும் சிங்கம் போல சிங்கிலாக வாழும் 80s, 90s கிட்ஸ்... இவர்கள் யாருடனும் வாய்க்கால் தகராறு செய்யாதவர்கள்.. Chemically inert - noble gases..

ஆவர்த்தன அட்டவணையில் முதல் இடம் பிடிப்பது ஹைட்ரஜன் அடுத்தது ஹீலியம்.. அப்படியானால் அதன் நிறையும் அந்த வரிசையிலேயே அமையும்.. இருப்பதிலேயே எடை குறைந்த காற்று ஹைட்ரஜன் (H2) அடுத்தது ஹீலியம் (He).. அதனால்தான் ஹீலியம் அடைத்த பலூன் கனமான ஆக்ஸிஜன், நைட்ரஜன் நிறைந்த காற்றில் எளிதில் மேலெழும்புகிறது.. 

ஆனால் ஹீலியத்தின் நிறை ஹைட்ரஜனை விட சற்று அதிகமானது.. அதனால்தான் கதிரவனில் அணுக்கரு இணைவு நிகழ்வு நடக்கையில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுகிறது.. அணுக்கரு இணைவு, அதிகப்படியான ஆற்றலை வெளியிட்டபின் உருவான எடை அதிகமான (கம்பேர் டு ஹைட்ரஜன்) ஹீலியம் கதிரவனின் உட்பகுதிக்குள் அமிழ்ந்துவிடுகிறது.. எடை குறைந்த ஹைட்ரஜன் மேலெழுந்து மீண்டும் அணு பிளவுக்கு ஆயத்தமாகிறது.. இந்த சம்பவம் ஒரு கட்டத்தில் நிற்க வாய்ப்பிருக்கிறது.. அதாவது கதிரவனில் உள்ள அனைத்து ஹைட்ரஜனும் ஹீலியமாக மாறிவிட்டால்...! 
அதற்குள் நாம் வேறு சூரிய குடும்பத்திற்கு வாக்கப்படவேண்டும்.. இல்லையேல் இந்த பால்வெளி மண்டலத்தை கடந்து மற்றொன்றை அடையவேண்டும்.. அதுவுமில்லை என்றால் இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) கூப்பரைப் போல் ஒரு வார்ம் ஹோலை பிடித்து அடுத்த எல்லைக்கு சென்று டெஸ்சராக் மூலம் நான்காவது, ஐந்தாவது பரிமாணத்தில் நேரத்தை கடந்து, இறந்த காலத்திற்கு சென்று மீண்டும் வாழலாம்.. இப்படியெல்லாம் போகவில்லையாயின் கதிரவன் இறந்தபின் யார் நம் சாதி, மொழி, மதத்தை பற்றி பெருமை பீற்றிக்கொள்ளமுடியும்.. 

போறோம் பீத்துறோம்..

-சகா..
03/11/2022

வியாழன், 10 ஜூன், 2021

பாட்டி நிலவிலிருந்து அனுப்பிய வடை பார்சல்..

சித்திரை வெயிலின் புழுக்கம் தாங்காமல் மொட்டைமாடியில் வந்து மல்லாந்து படுத்துக்கொண்டே நிலவை உற்றுநோக்கிக்கொண்டு இருந்தேன். அந்தநேரம், வடை சுடும் பாட்டி என்னை நிலவிலிருந்து எட்டிப்பார்த்து, என்னடா பேரா பசிக்குதா உனக்கு, இந்தா வடை சாப்பிடு என்று இரண்டு மெது வடைகளை தூக்கி என்மீது வீசியமாதிரியே ஒரு உணர்வு!
இப்ப அந்த வடை பூமில இருக்க எனக்கு வந்து சேருமா, இல்லையாங்றத ஈர்ப்புவிசைதான் முடிவுசெய்யனும். ஈர்ப்புவிசைன்னு படிக்கிறோம், ஆனா அது உண்மையில் விசைதானா!?
பதிலறிய நவீன இயற்பியல் (modern physics) உதவியைதான் நாடவேண்டும்!
அப்டி என்ன அது சொல்லுது!? ஒன்றுமில்லைங்க, விண்வெளியில் இறைந்துகிடக்கும் பலமில்லியன் கோடி துகள்களுள் நம் கதிரவன் குடும்பமும் ஒன்று. புரிந்துகொள்ள எளிமையாக சொல்ல வேண்டுமானால், விண்ணிலுள்ள எல்லா கோள்களும், அண்டங்களும், பால்வழித்திரள்களும், நட்சத்திரங்களும் ஒரு மெல்லிய விண்வெளி துணியின் (space fabric) மீதுதான் அமையப்பெற்றிருக்கின்றன. தனக்கே உரித்தான எடைகளை கொண்டுள்ள அனைத்து துகள்களும், ஒருவிதமான குழிகளை உருவாக்குகின்றன. அதாவது ஒரு நீண்ட துணியை எடுத்து நான்கு பக்கங்களையும் இழுத்து கட்டிவிட்டு அதனுள் ஒரு சிறு பொருளை இட்டால் உருவாகுமல்லவா, அது போன்றதொரு குழியை உருவாக்குகிறது.
பெருவெடிப்பிலிருந்து ஒரேவேளையில் வெளியான அனைத்து துகள்களும் அந்த மெல்லிய விண்வெளி துணியின் மீதுதான் விழுகின்றன. விழுந்தவற்றுள் அதிக நிறைகொண்ட கதிரவன் மிகப்பெரிய குழியை உருவாக்குகிறது, பின் அதே வேளையில் அக்குழிக்குள் இயக்கநிலையில் விழுந்த மற்ற துகள்களெல்லாம் கதிரவ மையநோக்கு விசையுடனே அக்கதிரவனை சுற்றிவருவதே இயல்பு! இதுவே ஈர்ப்புவிசை.
அதேவேளை, அப்பெரிய குழிக்குள் விழுந்த தனிப்பட்ட அனைத்து கோள்களும் தன் நிறைசார்ந்து சிறு சிறு குழிகளை அந்த துணியின் மீது உருவாக்கும். அப்படி உருவாகிய குழிகளுக்குள் ஏதேனும் மிகச்சிறிய துகள் விழின் அது துணைக்கோளாய், அக்குழி உருவாக்கிய கோளை சுற்றுவரும்.
இப்படிதான் பூமியின் துணைக்கோளாய் நிலவு சுற்றிவருகிறது. நிலவும் சிறு நிறை கொண்ட துகளாய் இருப்பதால், விண்வெளி துணியின்மீது மிகச்சிறு குழியை ஏற்படுத்தும். இப்பொழுது, அந்த விண்வெளி துணியின் மீது, பால்வழித்திரளால் ஒரு பெருங்குழி, கதிரவனால் ஒரு குழி, பூமியால் சிறுகுழி, கதிரவனால் மிகச்சிறு குழியென, பலதரப்பட்ட குழிகள் உருவாகின்றன. அந்த குழிகளின் ஆழம் அந்தந்த கோள்களின் நிறையை பொறுத்ததாக இருக்கும், அதுவே ஈர்ப்புவிசையை தீர்மானிக்கும்.
இப்ப கதைக்கு வருவோம். அந்த பாட்டி எனக்காக வீசிய மெதுவடை மிகச்சிறு குழியால் ஏற்பட்ட ஈர்ப்புவிசையை தாண்ட முடியாமல் அங்கேயே நின்றுவிடும். எனக்கு வந்துசேர வாய்ப்பே இல்ல! ஆனால் அந்த மிகச்சிறு குழியால் உருவான ஈர்ப்புவிசையை எதிர்க்கவல்ல ஆற்றலை கொண்டு மெதுவடையை ஏவினால், எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

-சகா..
14/05/2019