புதன், 16 ஜூலை, 2014

கூட்டு-அறிதல் தடுப்பி (Quarum Sensing Inhibitor): தொற்று நோய் கிருமிகளுக்கான அடுத்த தலைமுறை மருந்து

மருத்துவத்துறையில் தொற்று நோய்களுக்கு எதிராக நாம் தோற்றுக்கொடிருக்கிறோம். நோய்க்காரணியான "பாக்டீரியா" என்றறியப்படும்  நுண் கிருமிகள் நாம் இதுநாள் வரை கண்டறிந்த மருந்துகளுக்கு எதிராக தங்களுடைய மரபணுக்களை மாற்றியமைத்து, அந்த மருந்து தங்களை எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துகொள்கின்றன. இவ்வாறான தற்காப்பு நடவடிக்கையில் அவை  ஈடுபட தூண்டும் காரணி, நாம் அழிந்து விடுவோம் என்ற உணர்வு (selective pressure) தான், இது நமது மருந்துகள் அந்த கிருமியை அழிக்கும்போது உண்டாவது. இத்தகைய சூழ்நிலையில், நாம் மாற்று மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது, அதுவும் அம்மருந்துகளில் செயல்பாடு ஏற்கனவே நாம் அறிந்திருக்கும் மருந்துகளில் இருந்து முழுவதும் வேறுபட்டும் இருக்க வேண்டும். 

கூட்டு அறிதல் (Quarum Sensing) (படம் 1என்னும் ஒரு மிக நுட்பமான, நேர்த்தியான ஒரு நடைமுறையை அக்கிருமிகள் மேற்கொள்கின்றன. அதன் மூலமாகவே அவை சில நோயை உண்டாக்கவும், பரப்பவும் மற்றும் தற்பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து காரணிகளை உருவாக்கி கொள்கின்றன. கூட்டு அறிதல் நடைமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதலில் கிருமிகளின் அடர்த்தி குறைவாக இருக்கும்பொழுது, அவை மனித செல்களை தாக்குவதற்கான காரணிகளை வெளிவிடுவதில்லை, மாறாக தங்களை மருந்துகளிடம் இருந்து பாதுகாக்க ஒரு உயிர்த்திரை (bio-film) உருவாக்குகின்றன. அவற்றை தாண்டி எந்த மருந்தாலும் செயல்பட முடியாத சிறப்பான அரணாக அது அமைகிறது. அதே வேளையில், கிருமிகளின் அடர்த்தி அதிகமாக உயரும்பொழுது, அவை தங்களில் கொடூர முகத்தை வெளிக்காட்டுகின்றன. மனித செல்களை அழிக்க தேவையான விசேட காரணிகளை களம் இறக்குகின்றன, வெற்றியும் காண்கின்றன. ஆக, கூட்டறிதலை அழித்தால் அவைகளால் ஒருபோதும் நம்மை தாக்க இயலாது. இதையே அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட மருந்துகள் உருவாக்கப்படுகின்றன. படம் 1: கூட்டு-அறிதலும் கூட்டு-அறிதல் தடுப்பும் 

சிறுநீர்த் துவாரங்களின் வழியேறி,  நீர்ப்பை வரை பயணித்து மேலும் ஒரு படி மேலெழும்பி சிறுநீரகத்தையே பாதிக்கும் ஒரு கிருமி இ.கோலி (படம் 2). அவற்றால் ஏற்படும் பதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு இக்கிருமி ஒரு பெரும் பிரச்சனை. இந்த சிறுநீரக வழிதொற்று நோய்க்கான மருந்துகள் இருக்கின்றன, ஆனாலும் மேற்சொன்ன காரணங்களால் அவை எதிர்பார்த்த பயனை தருவதில்லை. மேற்சொன்ன கிருமிக்கும், மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றி மருந்து கண்டறிவதே எங்கள் ஆராய்ச்சி. படம் 2: சிறுநீரக வாழ் இ.கோலி உருவாக்கிய உயிர்த்திரை 

தென் தமிழகத்தில் பெரும்பாலும் இந்த நோய் கண்டவர்களுக்கு மலை வேம்பின் (melia dubia) கசாயமே வழங்கப்படுகிறது. இந்த மலை வேம்பில் (படம் 3) உள்ள ஏதேனும் ஒரு வேதி மூலக்கூறு நாங்கள் எதிர்பார்க்கும் கூட்டறிதல் தடுப்பியாய் இருக்கலாம் என்பது எங்களில் கணிப்பாக இருந்தது. அதை நிரூபிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டோம்.  படம் 3: மலைவேம்பு


முதலில் மலை வேம்பு மரத்தில் இருந்து இலை, தண்டு,  வேர், விதை மற்றும் பட்டை ஆகிய அனைத்தையும் பறித்து உலர்த்தினோம். பின்னர் அதனுடைய தன்மைகள் மற்றும் வேதி கூறுகள் ஆராயப்பட்டன. பின்னர் கணினிகளின் உதவியோடு எந்த மூலக்கூறு எவ்வாறு அக்கிரிமியின் உடலிலுள்ள சமிக்ஞை- வாங்கிகள் உடன் வினை புரிகின்றன என பரிசோதித்த பின்னர் அந்த மூலக்கூறு ஆய்வக முறைப்படி உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட அதன் ஏனைய பண்புகள் பரிசோதிக்கப்பட்டு, அதுதான் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. 

பின்னர்  அந்த முன்-மருந்து (pro-drug) அந்த கிருமிக்களுக்கு எதிராக எத்தனை முறையில் சோதிக்க முடியுமோ, அத்தனை முறைகளிலும் பரிசோதிக்கபட்டது. முடிவுகள் எதிர்பார்த்தபடி சாதகமாக இருந்ததால், மேலும் ஒருபடி மேலேபோய் அவற்றை ஆய்வக பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும் எலிகளுக்கு கொடுத்து சோதித்தோம். இத்தனை எலிகளைத்தான் உபயோகிக்க வேண்டும் என்ற நீதிநெறி அமைப்பின் கட்டுபாடுகளுக்கு உட்பட்டு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் இதிலும் சாதகமாகவே வந்தது. நோய் தொற்று தோற்றுவிக்கப்பட்ட எலிகளில் எங்களின் மருந்து எதிர்பார்த்த வேலையை செய்திருந்தது. அடுத்ததாய் மனித செல்களில் பரிசோதிக்கப்பட்டது. முடிவில் அது ஏனைய மனித செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் கண்டறியப்பட்டது. இம்மருந்தும் இதையொத்த மருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும்முன் 5-8 வருடங்கள் மேலும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளிவரும். கிருமிகள் தங்களை தற்காத்துக்கொள்ள வேறு வேறு உத்திகளை மேற்கொண்டாலும், மனிதர்களாகிய நாம் வேறு உத்திகளை பற்றி யோசித்தே தீருவோம், ஏனெனில் தக்கன மட்டுமே தழைக்குமென  (survival of the fittest) நாம் நன்கறிவோம்.

முனைவர். இர. வினோத்கண்ணன் தேன்மொழி

(https://www.facebook.com/vinothkannan.ravichandiran)

11 கருத்துகள்:

 1. தமிழில் எத்தனையோ வலைப்பூக்கள் மணம் பரப்பி வருகின்றன. ஆனால், இப்படி அறிவியல், உளவியல் போன்ற துறைகள் சார்ந்த வலைப்பூக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வகையில் தங்களின் இந்த முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது! தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் இந்த பாராட்டும், ஊக்கமும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது தோழரே...
   மிக்க நன்றி...

   நீக்கு
 2. ஓர் ஐயம்!

  எதற்காக அந்த மூலிகையிலிருந்து இப்படி மருந்தைப் பிரித்தெடுக்க வேண்டும்? மாறாக, அந்தக் கசாயத்தையே அதற்கான மருந்தாக அறிவித்து விடலாம் இல்லையா? கிருமிகளின் அந்த உயிர்த்திரைத் தற்காப்பு நுட்பம் கசாயத்திடம் பலிக்கவில்லைதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கட்டுரை நண்பர் முனை. இர. வினோத்கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது.. கூடிய விரைவில், அவர் இந்த கேள்விக்கான பதிலை கொடுப்பார்....

   நீக்கு
  2. அய்யா வணக்கம்,
   முதற்க்கண் தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. தங்களது கேள்வி மிகவும் நியாயமானதே. மலை வேம்பில் உள்ள அந்த ஒரு வேதிக்கூறு மட்டுமே குறிப்பிட்ட விளைவுகளை உண்டாக்குகிறது. ஏனைய வேதிக்கூறுகள் யாவும் தேவையற்ற ஒன்றே. சித்த மருத்துவ சித்தாந்தப்படி ஏனைய வேதிக்கூறுகள் கள்ளப்பிணி-தடுப்பியாக வினை புரிகின்றன. ஆனால் மேற்கத்திய மருத்துவம் ஒரே வேதிப்பொருள் கொண்ட மருந்துகளை மட்டுமே அங்கீகரிக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், தேவையான மருந்தை அதன் தன்மையெல்லாம் ஆராய்ந்த பின், அது எங்கு போய், எப்படி வினைபுரியும் என்றெல்லாம் தெரிந்த பின்னர் அந்த மருந்தை தேவையான செறிவில் தரும் பொழுது நோயின் பாதிப்பு வெகுவாக குறையும். கள்ளப்பிணி உண்டாக்கும் வாய்ப்பில்லை என்பதால் இந்த வகை மருந்துகள் பயன் கொடுக்கும். காலமெடுக்கும் வைத்தியமுறை எனினும் நம் முன்னோர்கள் அருளிய சித்த மருத்துவமே சிறந்ததென்பது என் தனிப்பட்ட கருத்து.

   இர. வினோத்கண்ணன்

   நீக்கு
  3. நல்லது ஐயா! மதித்துப் பதிலளித்தமைக்கு நன்றி!

   ஆக, இத்தனையாயிரம் ஆண்டுகள் கடந்தும் சித்த மருந்துகள் அதே முறையில் பயன்படுத்தினாலும் பலனளிப்பதற்குக் காரணம், சித்த மருத்துவ முறையில் மருந்துகளை இதர கூறுகளோடு, அதன் இயற்கைக் கூட்டமைப்பிலிருந்து பிரிக்காமல் பயன்படுத்துவதே என்றும், ஆங்கில மருந்துகள் தொடர்ந்து நோய்க் கிருமிகளிடம் தோற்று வருவதற்குக் காரணம், குறிப்பிட்ட வேதிப் பொருளை மட்டும் பிரித்தெடுப்பதே என்பதாகவும் தங்கள் பதிலின் உட்கூற்றைப் புரிந்து கொள்கிறேன். எனில், தாங்கள் இதை உலகளாவிய அளவில் நிறுவ முயலுமாறும், உலக நல்வாழ்வுக் கழகம் (WHO) முதலியவற்றின் மேலான கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறும் வேண்டுகிறேன்!

   நன்றி! வணக்கம்!

   நீக்கு
  4. நீங்கள் கூறுவது ஒருவகையில் உண்மைதான் தோழர்.
   சுருக்கமாய் கூறினால், தரமற்ற சூரணம் மற்றும் லேகிய தயாரிப்புகளால், நம்மின் உயர்வான மருத்துவமுறையும், மருந்துகளும் மேலைநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது... இந்த நிலை மாற நம்மில் போலிகளை கண்டுகொள்வது மிக அவசியமாகிறது.
   அதுமட்டுமின்றி, நம்மின் தினசரி வாழ்வில் கலந்துவிட்ட மஞ்சளுக்கும் இன்னபிற மூலிகை பொருட்களுக்குமான காப்புரிமை நம்மிடம் இல்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்...

   நீக்கு
  5. வணக்கம் தோழர்,
   நீங்கள் சொல்வது போல், ஏற்கனவே உலக நல்வாழ்வுக் கழகம் (WHO) பாரம்பரிய மருத்துவ முறைகளுக்காக ஐந்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவி செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஏனோ ஓன்றுகூட இந்தியாவில் இல்லை. சித்த மருத்துவம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, சரியாக புரிந்து கொள்ளப்படாமை. தூய தமிழில் உள்ள சித்தர் பாடல்கள் நிறைய இடங்களில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அந்த மருந்து வீரியம் இன்றி உருவாகிறது. இரண்டாவது, இந்தியா எப்பொழுதும் ஆயுர்வேதாவை மட்டுமே தூக்கி பிடிக்கிறது, ஏனென்று நமக்கு தெரியாத ஒன்றல்ல. மூன்றாவது, மக்கள் உடனடி நிவாரணம் தேடி ஓடும்பொழுது, சித்த மருந்துகள் நின்று நிதானமாக வேலை செய்யும்., அதை எடுத்துச் சொல்ல மருத்துவர்கள் மறக்கின்றனர். சிறந்த சித்த மருத்துவ முறையில் மருந்தாளுனர்களை உருவாக்க தவறி வருகிறோம், ஏனெனில் சிறு பிழை கூட மொத்த மருந்தையும் வெறும் களிம்பாக்கி விடும். தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எந்த மாதிரியான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது என்று தெரியவில்லை. ஆனால் அதை போன்ற ஒரு ஆராச்சி நிறுவனம் தொடக்கி எல்ல சித்த மருந்துகளையும் தமிழ் உள்ளிட்ட அனைத்து அறிவியல் துறைகளும் கொண்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றின் செயல்பாடுகளை கண்டறிதலின் மூலமும், அதை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக பதிவு செய்வதில் மூலமும் மட்டுமே சித்தர்களை அகில உலகமும் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

   தோழர் முனை. சக்திவேல் சொன்னது போல், நாம் நம் மருந்துகளுக்கு காப்புரிமை பெறுவது மிகவும் அவசியம். இது தெரியாமல் இங்கிருந்து நம் மூலிகைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களை என்ன செய்வது ?

   ஆயிரம் காரணிகள் இருந்தென்ன, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே மருத்துவ துறையில் இமயம் கண்ட சித்தர்களின் அறிவியல் கற்பனைக்கும் எட்டாதது. சூரியனை யாரும் வெறும் கையால் மறைக்க முடியாது தானே ? ஒரு நாள் இல்லை ஒரு நாள் உலகம் சித்தர்களை வியந்து பார்க்கும், பார்க்கும்படி செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

   நன்றி
   இர.வினோத்கண்ணன்

   நீக்கு
 3. //நம்மின் உயர்வான மருத்துவமுறையும், மருந்துகளும் மேலைநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது// - தெரியாத தகவல்! நன்றி தோழரே!

  பதிலளிநீக்கு
 4. தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி வினோத் அவர்களே! எப்படியோ நமது இந்தக் கனவு பலித்தால் சரி! மிக்க நன்றி! வணக்கம்!

  பதிலளிநீக்கு