ஞாயிறு, 13 ஜூலை, 2014

மருத்துவனும் நானே, மருந்தும் நானே-Theranostic tool பற்றிய சிறுவிளக்கம்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள் 948

என்று நம்மின் முன்னோடி, மூத்தோன் திருவள்ளுவர் சொல்கிறார்,
அவர் சொல்படி, "நோயின் அறிகுறிகளை முதலில் ஆராய்ந்து, அதன் காரணம் அறிந்து பின் அந்நோயினை அணுகி குணப்படுத்த வேண்டிய முறைகளை பின்பற்றல் வேண்டும்",

நோயின் அறிகுறிகளை ஆராய்ந்து அறிதல் 'Diagnosis',
அந்நோயை குணப்படுத்துதல் 'Therapy',

மேலே குறிப்பிட்ட இரு வேலைகளையும் ஒரே பொருள் செய்தலுக்கு பெயரே 'Theranostics'.

Diagnosis + Therapy = Theranostics

அதாவது ஒரே பொருளானது நோயின்,

1. இருப்பிடம் 
2. தன்மை 
3. நிலை 
ஆகியவற்றை துல்லியமாக வெளிப்படுத்தும் பண்பு வேண்டும், 
மேற்கூறிய வேலைகளை துரிதமாய் செய்து முடித்தபின், அந்நோய்க்கான மருந்தை மெதுவாய் வெளிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் செவ்வனே செய்து முடிப்பதற்கு ஏதுவாய் 'Theranostic' பொருள் அமையவேண்டுமெனில், 

அப்பொருள்,
1. அளவில் மிகச்சிறியதாய் இருத்தல் வேண்டும்  (nano to micro meter size)
2. நோயுராத இயல்பான செல்களை பாதிக்காதவண்ணம் இருக்க வேண்டும் (no toxicity)
3. உடலில், அயல் பொருட்கள் நுழையும் பொழுது, இயற்கையாய் தூண்டப்படும் எதிர்ப்பாற்றல்கள், 'theranostic' பொருளின் மீது செயல்படாதிருத்தல் அவசியம் (no immune response)
3. உடலில் பயணிக்கும் 'theranostic' பொருளை, வெளியிலிருந்து பின்தொடர ஏதுவாய்  அமைக்கப்பெற்றிருக்க வேண்டும் (trackability

இவையாவும் கைகூட, அதிநுண்ணணுவியல் தொழில்நுட்பத்தின் (Nanotechnology) தேவை இன்றியமையாமையாகிறது...

நம் மூத்தோள் ஔவை பாட்டி சொன்னாளே 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'-என்று, அத்தகைய அணு போன்ற மிகநுண்ணிய பொருளை பற்றி படித்தல்தான் (குறிப்பாக 100 nm க்கு குறைவான அளவு கொண்ட பொருட்கள்) 'அதிநுண்ணணுவியல்' தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. 

'Theranostic' பொருள் பற்றியும் அது எப்படி உடலில் வேலை செய்கிறது என்பது பற்றியும், மிக எளிதாய் புரிந்துகொள்ளும் விதமாய் இங்கே ஒரு காணொளி கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் தோழமைகளே,

(இந்த காணொளி, Adobe Flash என்ற மென்பொருளின் உதவியுடம் உருவாக்கப்பட்டுள்ளது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக