கிரிஸ்டோபர் நோலனிடம் திறன்பேசி கிடையாதாம்.. அவர் ஒரு நேர்காணலில் சொல்கிறார்,
இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் க்யூஆர் குறியீடை கொடுக்கிறார்கள்
அதனால் பெரிய சிக்கல் வருகிறது. அதுவும் கோவிட்டிற்கு பிறகு இந்த க்யூஆர் குறியீட்டின்
பயன்பாடு அதிகமாகிவிட்டது.. என்னிடம் திறன்பேசியே கிடையாது, வெளியில் பயணம் மேற்கொள்ளும்பொழுது
மட்டும் ஒரு மடிப்பு அலைபேசியை வைத்திருப்பேன்.. அதில் தொடுதிரையோ, வேறு செயலிகளோ இருக்காது..
தொலைபேசியாக மட்டுமே பயன்படுத்தமுடியும்.. எனக்கு இந்த டிஜிட்டல்-சங்கிலிகளை (digital shackles) பிடிப்பதே இல்லை.. மேலும்,
எனக்கு கடிதங்களே அதிகமாக வருவதுண்டு.. கடிதத்தை வாசிப்பதே எனக்கு பிடிக்கிறது.. எனக்கு
வரும் மின்னஞ்சல்களும், கடிதமாக அச்சடித்தே என்னிடம் வரும்.. (அந்த நேர்காணலில், நோலன்
குறிப்பிட்டவற்றின் சாரம் மட்டுமே)
பாருங்கள், ஐமேக்ஸ் கேமராக்களை பயன்படுத்தி பல திரைப்படங்களை
எடுத்தவர், அதுவும் ஒரு இண்டர்ஸ்டெல்லார் என்ற மிகச்சிறந்த திரைப்படத்தை கொடுத்தவர்,
இப்படி கூறுகிறார்.. காரணம் என்னவாக இருக்கும்..
அதேபோல, நான் என்ஐடி திருச்சியில் படித்தபொழுது, மாணவர்களாக
நடத்தும் ஹரைசான் என்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்குகொண்டு பேச ஐஐடி சென்னையில்
இருந்து பேராசிரியர் பிரதீப் அவர்களை அழைத்தோம்.. அவரிடம் அலைபேசியே கிடையாதாம் என்று
அனைவரும் அன்று வியந்துகொண்டிருந்தனர்.. அன்று, அனைவரிடத்திலும் நோக்கியா 1100 புழங்கிய
நாட்கள்.. பிற்பாடு நான் ஆய்வு மாணவனாக இருந்தபோதும் அவர் ஒரு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்..
அப்பொழுதும், அவரிடம் ஒரு திறன்பேசிகூட கிடையாது என்பதாக சிலர் கூறினர்.. அந்த நாட்களில்
என் கையில் எல்ஜி நிறுவனத்தின் மிடுக்கு திறன்பேசி குடிகொண்டிருந்தது.. என்னுடைய அண்ணன்,
சிங்கப்பூரில் இருந்து அதனை எனக்காக வாங்கிக்கொடுத்திருந்தார்.. அந்த திறன்பேசியில்
ஒரு ஸ்டைலஸ் பேனாவும் இருந்தது.. அதனைக்கொண்டு அந்த தொடுதிரையில் என்னால் எழுதமுடிந்தது..
சப்பானில் இருந்து எலெக்ட்ரான் நுண்ணோக்கி ஒன்றை நிறுவ, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு
வருகைதந்த ஒரு வல்லுனர், அந்த திறன்பேசியில், அவர் ஆசிலோஸ்கோப்பைவைத்து எலெக்ட்ரான்
உமிழ்வானை அளந்துகூறிய எண்களை, நான் எழுதிவைத்ததைக்கண்டு வியந்தார்.. உன்னிடம் இப்படி
ஒரு திறன்பேசியா..
ஒரு ஆய்வு மாணவனான என்னிடம் இருந்த அந்த திறன்பேசியை கூட வைத்திருக்காத,
இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த அறிவியலாளர்களுள் ஒருவரான பேராசிரியர் பிரதீப் அவர்களைப்
பார்த்து அன்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.. (நானோ) அதிநுண் அறிவியல் மற்றும்
அதன் தொழிற்நுட்பத்தைப்பற்றி தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் நூலை எழுதியவர்.. தன்னுடைய
நூலில் கட்டாயம் குறைகடத்திகள் பற்றியும், அதன் பயன்பாடுகளில் மிக முக்கியமான மிடுக்கு
திறன்பேசிகளைப்பற்றியும், கரிம ஒளியுமிழ் சில்லுகள் பற்றியும், குவாண்டம் டாட்சின்
ஒளி உமிழ்வு பற்றியும், மூர்ஸ் விதி பற்றியும் விவரித்திருப்பார்தானே.. பின்னேன் மனிதனின்
கண்டுபிடிப்பில் மிகமுக்கியமான இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கிறார்.. என்றெல்லாம்
வியப்பு கேள்வியாக பெயர்ந்தது..
இந்த கட்டுரையைத் தொடங்கி, இந்த வரியை நான் எட்டுவதற்குள் விசிலடித்து
கூப்பிட்ட என்னுடைய திறன்பேசியின் திரையை ஏறத்தாழ ஐந்து முறை தொட்டுவிட்டு வந்துவிட்டேன்..
எவ்வளவு கவனச்சிதறல்கள்.. அதனையும் மீறி நம்மால் கவனமாக இருக்க முடியும்தான்.. ஆனால்,
அதற்கு மிகப்பெரிய பயிற்சி வேண்டும்.. அதற்கு கடினப்படுவதற்கு பதில், திறன்பேசியையே
துறந்துவிட்டால்..!
தேவைக்கு பேசுவதற்கு நம்மிடம் அலைபேசியை மட்டும் வைத்துக்கொண்டால்
எப்படி இருக்கும் என்று என்னால் இன்று சிந்தித்துக்கூட பார்க்கமுடியவில்லை..
வெயிட் வெயிட்.. ஏதோ குறுஞ்செய்தி வந்திருக்குறது, பார்த்துவிட்டு
தொடர்கிறேன்..
..5 நிமிடம்
..10 நிமிடம்
..20 நிமிடம்
..30 நிமிடம்
ஒன்றுமில்லை, நேற்று இரவு கிண்டிலில் ஒரு புத்தகம் ஒன்றை வாங்கினேன்,
அதற்கான தொகை சரியாக 357 ரூ எடுக்கப்பட்டுவிட்டதற்கான குறுஞ்செய்திதான்..
ஃபௌண்டைன் பேனாவால் மை சொட்ட சொட்ட எழுதப்பட்ட நேரடிக்கட்டுரையின்
டிஜிட்டல் வடிவம் இது.. இந்த கட்டுரை நேரடியாக உங்கள் கையில் சுடச்சுட கிடைத்திருந்தால்,
சற்று கையைவைத்து இழுத்து தெரிந்துகொண்டிருக்கலாம், கடைசி பத்தியில் இருக்கும் எழுத்துகளுக்கும்,
அதற்கு முன்னால் இருக்கும் பத்தியில் இருக்கும் எழுத்துகளுக்கும் இடையேயான கால இடைவெளியை..
தேங்காய் இல்லாமல் எப்படி தேங்காய்ச்சட்னி செய்யலாம் என்று இப்பொழுது
பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை ஒரு கப், ரெடிமேட் தேங்காய் பவுடர் ஒரு
கப்..
மேலுள்ள வரி உங்களை எரிச்சலூட்டியதுதானே.. ஏறத்தாழ முப்பது நிமிடங்கள்,
இப்படியான சம்பந்தமற்ற, தேவையற்ற தகவல்களைத்தான் தொடுதிரையில் பார்த்து கழித்தேன்..
ஆனால், எழுத்துகளாக டைவர்சன் ஒரு எரிச்சலை கொடுத்தாலும், காணொளியாக அது எரிச்சலை கொடுப்பதில்லை..
அதற்கு காரணம் டோப்பமைன் என்கிறது ஆய்வு.. டோப்பமைன் என்பது வெறும் மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் அல்ல, எதிர்பார்ப்பு, தூண்டுதல், மீண்டும் அதையே
செய்யும் விருப்பம் ஆகியவற்றோடு தொடர்புடைய வேதிப்பொருள். நம்முடைய மூளை, ஏதோ ஒரு புத்துணர்வான,
விறுவிறுப்பான ஒரு வஸ்துவை கண்டுகொள்வதற்கான தூண்டுதலுக்காக இந்த வேதிப்பொருள் அதிகமாக
மூளையில் சுரக்கிறது.. இந்த தூண்டுதல் எதிர்பார்ப்பை அதிகமாக்கி, தொடர்ந்து அதையே செய்ய
வைக்க, நாம் செய்யும் வேலையிலேயே நம்முடைய முழு ஆற்றலையும் செலவழிக்க வைக்கிறது.. கடைசியில்,
அந்த தூண்டுதல் வெற்றியடையாமல், ஒரு எரிச்சலையே தருகிறது.. ஏனென்றால், நாம் செய்த வேலை
நமக்கு எந்த வெகுமதியையும் பெற்றுத்தரவில்லை.. இந்த வெகுமதியை தேடுவதற்கும் அதே டோப்பமைன்தான்
காரணமாக அமைகிறது..
ஆனால், அந்த காணொளி வழி எளிதாக கிடைக்கும் ஒரு வித தூண்டல்,
மீண்டும் அதே வேதிப்பொருளுக்கான குழாயை தங்குதடையின்றி திறந்துவிடுகிறது.. மீண்டும்
மீண்டும் ஸ்வைப்பிங்.. மீண்டும் மீண்டும் எரிச்சல்..
இதிலிருந்து மீள, நமக்கு பயிற்சி மிகமுக்கியம்.. வாசிப்பு எளிமையான
வழி.. இசை, நடனம், விளையாட்டு.. என எதைவேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்..
அதில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும்பொழுது, அந்த டோப்பமின் குழாய், எஸ் பெண்ட் வைத்து
திருப்பப்பட்டு அந்த வேலைகளுக்கான காத்திருப்பிற்கு திறக்கப்பட்டுவிடும். ஆனால், நீண்ட
பயிற்சி இதற்கு மிகமுக்கியம், அந்த பயிற்சியின் பொழுது, பேராசிரியர் பிரதீப் போல, இயக்குநர்
நோலன் போல திறன்பேசிகளை நாம் துறக்க வேண்டும்..
முடியாதென்றால், குறைந்தது திறன்பேசி இல்லா ஞாயிறு என்ற முழக்கத்தை
முன்னெடுக்கவேண்டும்.. நான் அதைத்தான் செய்யப்போகிறேன்.. வெறும் முழக்கம் மட்டுமல்ல..
வாரத்தில் ஒரு நாள், திறன்பேசி இல்லா கையுடன் கிண்டிலில் வாங்கிய கு.அழகிரிசாமி, கிராவுக்கு
எழுதிய கடிதங்கள் என்ற நூலை வாசிக்கப்போகிறேன்..
சகா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக