செவ்வாய், 6 அக்டோபர், 2015

இயற்கை மருத்துவத்திற்கு கிடைத்த நொபெல் பரிசு

ஒரு மழைக்கால மாலை நேரத்தில், மண்ணில் உள்ள நுண்ணுயிர் கூட்டம் கொடுத்த நறுமணத்தினூடே அம்மண்ணில் சிறுகுழந்தைகள் விளையாட விருப்புவது இயல்பான ஒன்றுதான். அப்படி விளையாடிய பின் மறுநாள் அந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம், பெற்றோர்களோ அதனை மிகவும் எளிதாய் எடுத்துக்கொண்டு அப்பிரச்சினையை வேறுகோணத்தில் அணுகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அக்குழந்தைக்கு இடையூறு அதிகமாகி எதை உண்டாலும் செரிமானமின்றி அப்படியே வெளியேறி, வெளியேறும் பாதைகளில் எரிச்சலையும் கொடுத்து பின் வெளிவரும் கழிவில் சிறு புழுக்களும் தென்படவும் வாய்ப்பிருக்கிறது. புழுதானே என்று இதற்கும் அப்பெற்றோர்கள் நினைப்பார்களாயின் அது பெரிய விளைவை உண்டாக்கும் பொழுதுதான் அறிவார்கள் அது சாதாரண புழுவல்ல, ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த, உயிரை உருக்கிக் கொல்லும், உருளைப்புழுக்களென்று.

அனைத்துவகையான ஓட்டுண்ணி புழுக்களும், இந்த வகையான இடையூறுகளை ஏற்படுத்தாவிட்டாலும் சிலவகை புழுக்களான நெகாடர் அமெரிசானசு, அன்சைகிலோசுட்டமா டியோடினேல் போன்ற புழுக்கள் மிகப்பெரிய பிரச்சினையை மனித சமூகத்திற்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுத்தவல்லது. நம் தமிழ் சமூகத்தால் எளிதாய் பார்க்கப்படும் இம்மாதிரியான ஒட்டுண்ணி உருளை, கொக்கிப்-புழுக்கள் ஏற்படுத்தும் இன்னலானது முதலில் சிறிய துன்பத்தை மட்டுமே கொடுத்தாலும் பின்னர் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறு, இரத்தசோகை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, எடைகுறைதல் என்று உடலை முழுவதும் சிதைப்பது மட்டுமல்லாது, அறிவு வளர்ச்சியையும் தடைபடுத்தவல்லது. இவ்வொட்டுண்ணி புழுக்களின் முழு வீச்சை, அது ஒரு ஆண்டுக்கு எடுத்துசெல்லும் உயிர்பலியை வைத்து அறிந்துகொள்ளலாம். ஆம், உலக அளவில் ஏறத்தாழ ஆண்டுக்கு 14 மில்லியன் உயிர்களை காவு வாங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த ஒட்டுண்ணி உருளைப் புழுக்களானது, மண்ணில் மிக எளிதாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று. இதனை நுண்ணோக்கியின் உதவியுடன் பார்க்க இயலும். சில வேளைகளில் நம் வெறும் கண்களுக்கு கூட காட்சி கொடுக்கும் அளவுக்கு பெருப்பதும் உண்டு. இப்படிப்பட்ட புழுக்கள் மண்ணிலிருந்து, நம் தோலின் வழியாய் எளிதில் உடலுக்குள் புகுந்துவிடும். மேலும், நீர் மாசுபடுதல், கெட்டுப்போன உணவுப்பொருளை உண்ணுதல், சரியில்லா வாழ்க்கைத்தரம் போன்ற காரணிகளால் மிக எளிதில் அப்புழுக்கள் மனிதர்களின் உடலில் புகுந்துவிடுகிறது.

இந்த ஒட்டுண்ணி உருளைப்புழுக்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு 1970 களில் டிரிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனை. சேப்பல் மற்றும் கிட்டாசேட்டோ கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்கள் தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்களின் முயற்சியாலும், அவர்களுடன் பணியாற்றிய மாணவர்களின் உழைப்பின் விளைவாலும் 1978 ஆம் ஆண்டு ஏவர்மெக்டின் (avermectins) என்ற இயற்கையாய் கிடைக்கப்பெறும் உயிர் வேதிப்பொருளொன்றை கண்டறிந்தனர் [1-4]. இந்த வேதிப்பொருளானது 16 உறுபுகளைக்கொண்ட மிகப்பெரிய லேக்டோன் குடும்பத்தின் வழித்தோன்றலாகும். இது மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரிய நுண்ணுயிரி மூலம் நொதித்தல் மூலம் கிடைக்கப்பெற்ற வேதிப்பொருள் என்பது கூடுதல் தகவல். அதாவது, முனை. ஒமுரா அவர்கள், சப்பானில் உள்ள கிட்டாசேட்டோ கல்விநிறுவனம் அமைந்திருக்கும் கவானா பகுதியிலிருந்து மண்ணை சேகரித்து, அதிலிருந்து ஒருவகை நுண்ணுயிரியை (Streptomyces avermitilis) பிரித்தெடுத்தார், அந்நுண்ணியிரியானது பல்வேறு முறைப்படுத்தப்பட்ட திரவங்கள் நிரப்பட்ட கொள்கலன்களினுள் விடப்பட்ட பொழுது, அந்நுண்ணுயிர்கள் நொதித்தலின் மூலம் உருவாக்கிய பொருட்களே இந்த ஏவர்மெக்டின் என்ற லேக்டோன் குடும்ப வழித்தோன்றிகள். இவ்வேதிப்பொருளானது, சுண்டெலியினுள் செலுத்தப்பட்டு, எந்த வித வீரியமான பக்கவிளைவுகள் இன்றி உருளைப்புழுக்களுக்கெதிராக வேலைசெய்வதை உறுதி செய்தனர். (இந்த ஏவர்மெக்சினின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை வேதிப்பொருள்தான், நாம் எரும்பு மற்றும் சிறு பூச்சிகளைக்கொல்லும் மருந்தாக பயன்படுத்துகிறோம்).

இந்த கண்டுபிடிப்புக்காகத்தான், முனை. சேப்பல் மற்றும் முனை. ஒமுரா என்ற இரு நுண்ணுயிரியல் வல்லுனர்களுக்கும், இந்த ஆண்டின் (2015) மருத்துவத்துக்கான நொபெல் பரிசை கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் முனை. யொயொ டு அவர்களும் அப்பரிசினை பகிர்ந்துகொள்கிறார். இவர் ஆர்ட்டிமிசினின் என்ற மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்தை 1972 ஆம் ஆண்டு மாசிபத்திரி (wormwood - Artemisia absinthium) என தமிழில் வழங்கப்பெறும் [5] மூலிகைச் செடியிலிருந்து பிரித்தெடுத்தார். படம் 1 ல் ஏவர்மெக்டினின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.


படம் 1. ஏவர்மெக்டின், ஆர்ட்டிமிசினின் மூலக்கூறுகளின் வேதிவாய்ப்பாடு.


இக்கட்டுரையின் முகப்பில் கூறப்பட்டுள்ள மழை ஏற்படுத்தும் மண் நறுமணத்திற்கும், பின் ஏவர்மெக்டின் என்ற உயிர்வேதிப்பொருளை உருவாக்க பயன்படும் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. 

இயற்கையே சிறந்த மருந்து:

நான் சிறுவயதாக இருக்கையில் வீட்டிற்கு வரும் நாட்டு மருத்துவர் ஒருவர், வாரம் ஒருமுறை ஞாயிறன்று ஒரு கருப்பு நிற உருண்டையான மாத்திரை ஒன்றைத் தருவார், அதனை வெறும் வயற்றில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்கிலிருந்து ஆறு முறை கழிவானது புழுக்களுடன் வெளியேறிய பின் குளித்துவிட்டு சாப்பிட சொல்வார். அப்பொழுதைய காலங்களில் நமக்கு, இந்த உருளை, கொக்கிப் புழுக்கள் பெரும் இடையூறுகளை கொடுத்ததில்லை. நாம் அப்படிப்பட்ட இயற்கையான நாட்டுமருந்துகளில் நம் அறிவியல் ஆய்வை செலுத்தியிருந்தால், நாம் நம்மின் மருந்துகளை உலக மருத்துவர்களுக்கு பரிந்துரைத்திருக்கலாம், நம் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் நொபெல் பரிசை பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மலேரியா தடுப்பு மருந்தான ஆர்ட்டிமிசினின் மூலக்கூறை பிரித்தெடுத்த முனை. யொயொ டு அவர்கள் கூட, ‘பல் கூறுகளையும் உள்ளடக்கிய இந்த இயற்கைதான் மருந்து உருவாக்கத்திற்கான ஆரம்பப்புள்ளி’ என்கிறார். நாமும் நம்மின் பண்பாட்டு இயற்கை மருத்துவத்தை மீட்டெடுப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளல் இன்றியமையாதது.

சுட்டிகள்:

1. http://www.nature.com/news/anti-parasite-drugs-sweep-nobel-prize-in-medicine-2015-1.18507

2. Ōmura, Satoshi; Shiomi, Kazuro (2007). "Discovery, chemistry, and chemical biology of microbial products". Pure and Applied Chemistry 79 (4).doi:10.1351/pac200779040581.

3. Ikeda, H.; Nonomiya, T.; Usami, M.; Ohta, T.; Omura, S. (1999). "Organization of the biosynthetic gene cluster for the polyketide anthelmintic macrolide avermectin in Streptomyces avermitilis". Proceedings of the National Academy of Sciences 96(17): 9509.

4. Burg, R. W.; Miller, B. M.; Baker, E. E.; Birnbaum, J.; Currie, S. A.; Hartman, R.; Kong, Y.-L.; Monaghan, R. L.; Olson, G.; Putter, I.; Tunac, J. B.; Wallick, H.; Stapley, E. O.; Oiwa, R.; Omura, S. (1979). "Avermectins, New Family of Potent Anthelmintic Agents: Producing Organism and Fermentation". Antimicrobial Agents and Chemotherapy 15 (3): 361. doi:10.1128/AAC.15.3.361.

5.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

சக்திவேல்

14 கருத்துகள்:

  1. சிறப்பான கருத்து, மிகவும் அழகாக பதிவு செய்துள்ளிர்கள்.
    "7ஆம் அறிவு" திரைபடத்திலும் இயற்கை மருத்துவத்தையும் அதன் முக்கியதுவத்தையும் சுட்டி காட்டி உள்ளனர்.......

    பதிலளிநீக்கு
  2. தங்களின் தமிழ் அறிவியலுக்கான பங்களிப்பு மேன்மேலும் தொடரட்டும்
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது, எதற்காக, அவர்கள் செய்த அருஞ்செயல் என்ன என்பவற்றையெல்லாம் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் கடைசியாக, "நாம் அப்படிப்பட்ட இயற்கையான நாட்டு மருந்துகளில் நம் அறிவியல் ஆய்வைச் செலுத்தியிருந்தால், நாம் நம்மின் மருந்துகளை உலக மருத்துவர்களுக்கு பரிந்துரைத்திருக்கலாம், நம் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் நொபெல் பரிசை பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது" என்றீர்களே, அப்படிப்பட்ட வரிகளை இப்படி ஒரு கட்டுரையில் உங்களிடம்தான் எதிர்பார்க்க இயலும். அதுவும் ஆய்வாளர், மருத்துவர் எனும் முறையில் நீங்கள் இதைக் கூறும்பொழுது இக்கருத்தின் வலிமை இன்னும் வீரியமுடையதாகிறது.

    நம் தமிழ் மருத்துவ - பண்டுத முறைகள் இன்னும் உயிர்த்தே இருக்கின்றன. அறிவியல் அறிவும், தமிழ்ப் பற்றும் ஒருங்கே கொண்ட உங்களைப் போன்றவர்களால்தாம் அவற்றை வெளிக்கொண்டு வந்து தமிழின், தமிழரின் பெருமையை உலகறியச் செய்ய இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப்பெரிய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள் தோழர்.
      நீங்களும் நானும் வெவ்வேறு பாதைகளில் நம் பயணத்தை முடுக்கிவிட்டிருந்தாலும், ஒரே இலக்கை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறோம். உங்களின் வார்த்தைகள் என்னை மேலும் உசுப்பேற்றுகிறது. உங்களின் ’என்றுமே மாறா ஊக்கம்’ எனக்கு கிடைக்கப்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.
      நன்றி.

      நீக்கு
    2. //ஒரே இலக்கை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறோம்// - உண்மை! :-)

      நீக்கு
  4. ஆகா இப்படி ஒரு வலைப்பக்கத்தை இத்தனை நாள் கவனிக்காமல் இருந்திருக்கிறேனே? அன்பு கூர்ந்து “ஃபாலோயர்“ பெட்டியை இணையுங்கள் தொடர்ந்து வருவேன். நன்றி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்ததைக் கவனிக்க வில்லை. கவனித்ததும் இணைந்துவிட்டேன் இனித் தொடர்வேன் நன்றி

      நீக்கு
    2. ஆகா, நான் விரும்பும் ஒரு பெரிய பேச்சாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரிசு இது....
      மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வலைப்பூ பக்கத்தைப் பார்த்துதான் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதிவிரைவில் பிழையற்ற தமிழை இவ்வலைப்பூவிலிருந்து தாங்கள் எதிர்பார்க்கலாம்.
      மிக்க நன்றி அய்யா.

      நீக்கு