வெள்ளி, 6 டிசம்பர், 2024

2024 - Nobel prize

ஒரு உயிரினத்தின், ஒவ்வொரு செல்லிலும் அதன் டிஎன்ஏவின் நகல் உள்ளது. இது அந்த உயிரினத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது. ஒரு உயிரினத்தைக் கட்டியமைக்கவும், பராமரிக்கவும் புரதங்கள் (proteins) முக்கியத்தேவை. செல்களில் இருக்கும் டிஎன்ஏயில், அந்த செல்களுக்கு தேவையான புரதங்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு புரதத்திற்கும் தனித்துவமான ஒரு செயல்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, ஹீமோகுளோபின் நம்மால் சுவாசிக்கப்படும் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பொறுப்பாக உள்ளது.
ஒரு உயிரினத்தின் மொத்த டிஎன்ஏவில் உள்ள ஒவ்வொரு புரதத்தையும் உருவாக்க வழிமுறைகளின் தொகுப்பே ஜீன் (gene) என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களின் டிஎன்ஏவில் சுமார் 19,000 முதல் 20,000 ஜீன்கள் உள்ளன. உடலின் அனைத்து செல்களும் இந்த ஜீன்கள் அனைத்தையும் கொண்டிருக்கும், அதாவது அனைத்து புரதங்களையும் உருவாக்குவதற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் எந்த செல் தான் தேவையான புரதங்களை மட்டுமே உருவாக்கும்… 20,000 புரதங்களையும் உருவாக்கிவிடாது.

ஜீன் வெளிப்பாடு (Gene expression) என்பது ஒரு ஜீனில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி ஒரு புரதத்தை உருவாக்கும் செயல்முறை ஆகும். ஒரு குறிப்பிட்ட செல் அதன் செயல்பாடுகளுக்குத் தேவையான புரதங்களை மட்டுமே உருவாக்கும். உதாரணமாக, சிவப்பு இரத்த அணுக்கள் ஹீமோகுளோபினை உருவாக்குகின்றன, ஆனால் வயிற்று செல்கள் அதை உருவாக்காது.

ஒரு செல் ஒரு புரதத்தை உருவாக்க விரும்பும்போது, முதலில் அந்த ஜீனின் தற்காலிக நகலை - மெசஞ்சர் ஆர்என்ஏ (messenger RNA அல்லது mRNA) அனுப்புகிறது. ஜீனில் உள்ள தகவலின்படி mRNA நகலை உருவாக்கும் செயல்முறையை டிரான்ஸ்கிரிப்ஷன் (transcription) என்று அழைக்கிறார்கள். ஒரு ஜீன், mRNAவாக மாற்றப்பட்டு, அதற்குத் தேவையான புரதம் உருவாக்கப்படும் செல்களில் மட்டுமே செயல்படுகிறது.

mRNA உருவான பிறகு, செல் அந்த புரதத்தை நிறுத்தும்வரை தொடர்ச்சியாக உருவாக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் இது நிறுத்தப்பட வேண்டும். இதை கட்டுப்படுத்தவில்லையென்றால், தேவைக்கு அதிகமாக புரதம் உருவாகி செல்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக புற்றுநோயை உருவாக்கலாம்.
ஆனால் குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர், அந்த புரதம் உருவாக்கம் தானாக நின்றுவிடுவது வழக்கம். நீண்ட காலமாக, இப்படியான புரத உற்பத்தி நிறுத்தம் (post-transcriptional gene regulation) தன்னியல்பாக mRNAவுடன் தொடர்பு கொண்டதாகவோ அல்லது  அதன் குறைந்த நிலைத்தன்மையால் அப்படி நிகழ்வதாகவோ உருவகித்துக்கொள்ளப்பட்டது. 
ஆனால்…. Ambros மற்றும் Ruvkun என்ற வல்லுனர்கள் புதிய விதமான கட்டுப்பாட்டு முறையை கண்டறிந்தனர். புரத உற்பத்தியை ஒழுங்கு செய்வதற்கான ஒரு சிறிய RNA அணி மைக்ரோ ஆர்என்ஏ (microRNA அல்லது miRNA) எனும் நுண்ணிய RNA மூலக்கூறுகள் mRNAகளை கட்டுப்படுத்தி, புரத உற்பத்தியை தடுக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். இந்த மைக்ரோ ஆர் என் ஏ வையும், நம் செல்தான் உருவாக்குகிறது என்பது கூடுதல் தகவல். 
இந்த மைக்ரோ ஆர்என்ஏ உருவாக்கம் நிகழாமல் போனால் கூட, புற்றுநோயை உருவாக்கும் ஜீன், தையதக்கா தையதக்கா வென குதிக்க தொடங்கிவிடும்.. அந்த ஜீனைவிட, புற்றுநோய் மருத்துவர் அதீதமாக மகிழ்ச்சியை அடைவார்.